குற்றவாளிகளுடன் காவல்துறை கூட்டணி: சிறைக்குள் இருக்கும் உண்மைகள்! க்ரைம் மினி தொடர் 5

அரசியல்

வணங்காமுடி 

பகலில் பட்டன் போன் ராத்திரி டச் போன்: 

கால் விரிப்பு  ட்ரீட்மென்ட் கொடுத்ததும் கடலூர் முதுநகர் போலீஸ் ஸ்டேஷனில் டி.எஸ்.பி. கரிகால், எஸ்.ஐ. மணிகண்டன் உள்ளிட்டோர் முன்னிலையில்  நடந்தது என்ன என்பதை சொல்லிவிடுகிறேன் என கதறினார் தலைமை வார்டன் செந்தில்குமார்.

கால் வலி தாங்கமுடியாமல் சொல்கிறேன் சொல்கிறேன் என்று சொன்ன தலைமை வார்டன் செந்தில்குமார் திடீரென அப்போதும் தயங்கியிருக்கிறார்.

செந்தில்குமாரின் ஆக்‌ஷன்களைப்  பார்த்த டி.எஸ்.பி கரிகால் பாரி, ‘ இந்த பாரு உன்னோட செல்போனிலிருந்து  ரவுடி தனசேகரனோட  வக்கீல்  தினேஷ் செல்போனுக்கு 40 முறை பேசியிருக்கிற டீடெய்ல்ஸ் எல்லாம் எடுத்துட்டோம்.

கைதியோட வக்கீலுக்கும் ஜெயில் வார்டனுக்கும் 40 தடவை பேசுற மாதிரி என்னய்யா உறவு?  இனிமேலும் எதாச்சும் மறைக்க நினைச்சீன்னா…’ என்று எச்சரித்த பிறகுதான் செந்தில்குமார் மறுபடியும் பேச ஆரம்பித்தார்.

’ரவுடி தனசேகரன் பெரிய அளவுல பணம் உள்ள பார்ட்டி. அதனால அவருக்கு தேவையான விசயங்களை செய்துகொடுக்க சொல்லி என்கிட்ட கேட்டாரு.

என்னைப் பத்தி நான் ஏற்கனவே இருந்த இடங்கள்ல விசாரிச்சிருக்காங்க. அந்த நம்பிக்கையிலதான் என்கிட்ட கேட்டாரு. நானும் சரினு சொல்லிட்டேன்.

போன ஜூன் மாசம் தனசேகரன் என்கிட்ட, ‘ நான் ஒரு ஆள் செல் நெம்பர் கொடுக்கிறேன். அவர்கிட்ட பேசிட்டு நேரா போய் பார்த்து நாளைக்கு என்னை பார்க்க ஜெயிலுக்கு வரச் சொல்லுங்க’னு சொன்னாரு.

அன்னிக்கு  டூட்டி முடிச்சிட்டு வெளியில் வந்த  நான்   தனசேகரன் சொன்ன அரவிந்தன் அப்படிங்குற வக்கீலை போய்  பார்த்தேன்.  தனசேகரன் சொன்ன தகவலை சொன்னேன். உடனே என் கையில் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தாரு வக்கீல் அரவிந்தன். 

அதுக்குப் பிறகு தனசேகரனோட இன்னொரு வக்கீல் தினேஷ் சென்னையிலேர்ந்து வந்தாப்ல. அவர் அரவிந்தன்கிட்டேர்ந்து ஒரு பட்டன் செல்போனும் சிம் கார்டும் வாங்கி என்கிட்ட கொடுத்து இதை ஜெயிலுக்குள்ள இருக்கும் தனசேகரன்கிட்ட கொடுக்கணும்னு சொன்னாரு.

அதை நான் பத்திரமா என் பேண்ட் பாக்கெட்டுக்குள்ள வச்சிருந்து எடுத்துப் போயி ஜெயில்ல இருக்குற தனசேகரன்கிட்ட கொடுத்தேன். இதுக்காக எனக்கு இருபதாயிரம் ரூபாய் கொடுத்தாங்க. 

அந்த பட்டன்போனை வச்சிதான் தனசேகரன் ஜெயிலுக்குள்ளேர்ந்து எல்லாருக்கும் பேசிக்கிட்டிருந்தாப்ல. ஜூலை மாதம் திடீர்னு தனசேகரன் என்கிட்ட, ‘வார்டன் சார்… ஒரு டச் போன் இருந்தா நல்லா இருக்கும். வெளிய வீடியோ கால்ல பேசணும்னு  ஆசையா இருக்கு. நீங்க என் வக்கீலுங்களை வரச் சொல்லுங்க’னு சொன்னாரு. நானும் அவங்களுக்கு தகவல் அனுப்பினேன்.

அதையடுத்து தனசேகரனின்  வழக்கறிஞர்கள் தினேஷ், அரவிந்தன், பரணி மூவரும் மனு போட்டு தனசேகரனைப் பார்த்தாங்க. அன்னிக்கு நைட்டே அவங்க என்கிட்ட கொடுத்த டச் ஸ்க்ரீன் ஸ்மார்ட் போனை தனசேகரன்கிட்ட நான் பத்திரமா கொடுத்தேன். பட்டன் போனுக்கு இருபதாயிரம் கொடுத்தவங்க, இந்த ஸ்மார்ட் போனுக்காக எனக்கு 50 ஆயிரம் கொடுத்தாங்க.

இந்த ஸ்மார்ட் போனை வச்சித்தான் ஜெயிலுக்குள்ள இருந்தபடியே தனசேகரன் அவரோட மனைவி, மகள், நண்பர்கள்னு எல்லார்கிட்டையும் வீடியோ கால் பேசிக்கிட்டிருந்தாரு.  ராத்திரி 11.30 மணியிலேர்ந்து  விடிகாலை 4.30க்குள்ள வீடியோ கால் பண்ணி முடிச்சுடுவாரு. அதாவது பகல்ல பட்டன் போன், ராத்திரி டச் போன்.

இதான் தனசேகரனுக்கு நான் விதிச்சிருந்த கட்டுப்பாடு. எக்காரணத்தை முன்னிட்டும் பகல்ல டச் ஸ்க்ரீனை யூஸ் பண்ணக் கூடாதுனு தடை போட்டிருந்தேன். போன் மட்டுமில்லாம அப்பப்ப  கஞ்சா அப்படி இப்படினு போதைப் பொருட்களும் தனசேகரனுக்கு கிடைக்கிற மாதிரி பாத்துக்கிட்டேன்.

இந்த நிலைமையிலதான் 2022 ஆகஸ்டு 8 ஆம் தேதி காலை 10.30 மணியளவில்  கடலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார். அவரது தலைமையில்  சிறை உதவி அலுவலர் மணிகண்டன், வார்டன்கள் விநாயகம், ராஜதுரை, கோகுலகிருஷ்ணன் ஆகியோர், ரவுடி தனசேகரன் இருக்கும்  வெளிப்புற சிறைக்குள் ரெய்டு போறாங்க. 

சோதனை செய்த வார்டன்களிடம் சண்டை போடுகிறார் தனசேகர்.  ‘ என்னை யாருனு நினைச்சுட்டிங்க?  என்னையே பரிசோதனை செய்யறீங்களா?  என்னிடம் ஒன்னும் இல்லை’  என்று சத்தம்போட்டு சோதனைக்கு ஒத்துழைக்க மறுத்திருக்கிறார், உடனே வார்டன்கள் தனசேகரைப் பிடித்து சோதனை செய்ய   ஜட்டிக்குள் வைத்திருந்த பட்டன் செல்போனை  கண்டுபிடித்துவிட்டார்கள். அதை எடுத்துச் சென்றுவிட்டார்கள்.

அன்று மாலை 6.30 மணிக்கு மீண்டும் தனசேகரன் இருக்கும் பிளாக்குக்குள்  நுழைந்தது  சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் டீம்,. காலையில் வந்தபோது இல்லாத வீடியோ கேமரா இப்போது இருந்தது.

அதிகாரிகளில்  ஒருவர் வீடியோ கேமரா எடுக்க இன்னொருவர்  தனசேகரனிடம்,’ காலையில பட்டன் போன் வச்சிருந்தே… டச் ஸ்க்ரீன் வச்சிருந்து வீடியோ கால் பேசுறியாமே?  டச் போன் எங்கே?’ என்று கேட்டார் அந்த அதிகாரி.

அதெல்லாம் என்கிட்ட இல்லையே என்றார் தனசேகரன். ‘நீயா கொடுத்தா பிரச்சினை இல்ல… நாங்களா எடுத்தா அவ்வளவுதான்’ என்று மீண்டும் எச்சரித்தார் சிறை கண்காணிப்பாளர்.

 விசாரணை டீமை அழைத்துக் கொண்டு சிறை வளாகத்தில் இருக்கும் மரத்தடிக்குச் சென்றார். அங்கே குனிந்து தோண்டி ஒரு பாலிதின் பையை எடுத்தார். அதற்குள் டச் ஸ்கிரீன் கொண்ட ஸ்மார்ட் போன், சார்ஜர்,  பவர் பேங்க், சிம் கார்டுகள் என்று  ஏதோ கடைத் தெருவில் எலக்ட்ரானிக் கடை போலவே அத்தனை ஐட்டங்களும் இருந்தன.

எண்ணூர் தனசேகரனை எச்சரித்துவிட்ட  சிறை கண்காணிப்பாளர் செந்தில் குமார்… அன்று டூட்டியில்  இருந்த நான் (தலைமை வார்டன் E செந்தில்குமார்) கே.செந்தில்குமார், பாரதிதாசன், தமிழ்வாணன் ஆகியோருக்கு மெமோ கொடுத்துவிட்டார். அதுமட்டுமல்ல  தலைமை வார்டனான என்னை  (செந்தில்குமாரை) மிகக் கடுமையாகத் திட்டிவிட்டார் கண்காணிப்பாளர் செந்தில்குமார்.

cuddalore jailer home set fire case

செல்போன் பயன் படுத்தியதாகவும் அரசு ஊழியரை பணிசெய்யவிடாமல் தடுத்ததாகவும் கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் ரவுடி தனசேகரன் மீது குற்ற எண் 700/2022, 703/2022 இரண்டு எப்.ஐ.ஆர் போடப்பட்டது.

இந்த சம்பவத்தால கைதி தனசேகரனுக்கும் கோபம், தலைமை வார்டனான எனக்கும் எல்லா அதிகாரி முன்னாடியும் அசிங்கமாயிடுச்சு. எங்க ரெண்டு பேரு கோபமும் சிறை உதவி அலுவலர் மணிகண்டன் மேலதான் திரும்புச்சு. ஏன்னா ஜெயிலுக்குள்ள நடக்குறது ஓரளவுக்கு மணிகண்டனுக்குத் தெரியும்,.

அவருக்கும் பணத்தைக் கொடுத்து மடக்கிடலாம்னு பார்த்தா அவர் மடங்கலை.  சரி பேசாம போயிடுவார்னு பார்த்தா தனசேகரனையும் மாட்டிவிட்டு என்னையும் போட்டுக் கொடுத்துட்டாரு” என்று கொட்டித் தீர்த்திருக்கிறார் தலைமை வார்டன் செந்தில்குமார்.

அதாவது நேர்மையாக செயலாற்றிய  சிறை உதவி அலுவலர் மணிகண்டனை எதிர்க்க  கைதியாக இருக்கும் ரவுடி  தனசேகரனும், தலைமை வார்டன் செந்தில்குமாரும் கூட்டு சேர்ந்திருக்கிறார்கள்.

அட காலக் கொடுமையே…. அதன் பிறகு நடந்தது என்ன?

(சிறைக் கதவு திறக்கும்)

குற்றவாளிகளுடன் போலீஸ் கூட்டணி: சிறையில் இருக்கும் உண்மைகள்! மினி க்ரைம் தொடர் 4

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
2
+1
0

1 thought on “குற்றவாளிகளுடன் காவல்துறை கூட்டணி: சிறைக்குள் இருக்கும் உண்மைகள்! க்ரைம் மினி தொடர் 5

  1. இந்தத் தொடரின் மற்ற பாகங்களைப் படிக்க ஒவ்வொரு பாகமாகத் தேடுவது சிரமமாக உள்ளது; தொடரின் கீழ்பக்கம் மற்றவற்றின் வரிசை எண்களை இட்டால் நலம்.

Leave a Reply

Your email address will not be published.