மக்கள் பிரச்சினைகள் பற்றிப் பேச வந்த எம்.எல்.ஏ.க்களை அலைக்கழித்ததாகக் கடலூர் மாவட்ட ஆட்சியர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாகக் கொடிக்கம்பம் நடும் பிரச்சினையால் இரு சமூகத்தினருக்கு இடையே மோதல் போக்கு உருவாகியுள்ளது. என்.எல்.சி இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு நிலம் எடுப்பது தொடர்பாகவும் பிரச்சினை இருந்து வருகிறது. இவற்றை எல்லாம் கள ஆய்வு செய்து பா.ம.க எம்.எல்.ஏ.க்கள், அக்கட்சியின் கௌரவ தலைவர் ஜி.கே.மணி தலைமையில் சென்று மாவட்ட ஆட்சியரிடம் முறையிடத் திட்டமிட்டனர்.
அதற்காக, மயிலம் தொகுதி சிவக்குமார், சேலம் அருள், மேட்டூர் சதாசிவம், தர்மபுரி வெங்கடேசன், முன்னாள் மத்திய அமைச்சர் ஏகே மூர்த்தி, பசுமை தாயகம் அருள், மாநில அமைப்பு தலைவர் பழ தாமரைக்கண்ணன், மாவட்டச் செயலாளர் ச.முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் கடந்த டிசம்பர் 2,3 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக, நெய்வேலி சுற்றியுள்ள வளையமாதேவி, கரிவெட்டி, கத்தாழை, வானதிராயபுரம், வடக்குவெல்லூர் பகுதிகளைச் சேர்ந்த மக்களை ஒன்பது இடங்களுக்கு வரவழைத்து அவர்களிடம் குறைகளைக் கேட்டு மனுவாகவும் பெற்றனர்.
அப்போது என்.எல்.சி.க்கு இடம் கொடுத்தவர்கள், “50 வருடங்களுக்கு முன்பு மாற்று இடம் கொடுத்தவர்களுக்கு இதுவரையில் அளந்து பட்டா கொடுக்கவில்லை, இதனால் வங்கியில் ஒரு கடன் வாங்கமுடியவில்லை. அவசரத்துக்கு அடமானம் வைக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம்.
வீடு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை தருவதாகச் சொன்னார்கள், ஆனால் அதற்கு மாறாக நிலம் கொடுக்காத வடமாநிலத்தார்களுக்கு வேலைகளை வாரி வாரி வழங்குகின்றனர். என்.எல்.சியும் மாவட்ட நிர்வாகமும் சொல்வதை நாங்கள் நம்ப தயாராக இல்லை” என்று தங்களது குறைகளை கொட்டித் தீர்த்தனர்.
குறைகளைக் கேட்டறிந்த பாமக எம்.எல்.ஏ.க்கள் இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கக் கடந்த டிசம்பர் 3ஆம் தேதி பிற்பகல், கடலூர் மஞ்சக்குப்பத்தில் இருக்கும் ஆட்சியரின் பங்களாவுக்குப் புறப்பட்டனர்.
அவர்களை மாவட்ட ஆட்சியரின் பங்களாவுக்கு அருகே உள்ள சிக்னலில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதற்கு காரணம், மாவட்ட ஆட்சியர் யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து, பாமக எம்.எல்.ஏ.க்கள் தாங்கள் பயணித்த கார்களை விட்டுவிட்டு நடந்தே ஆட்சியர் பங்களாவுக்குச் சென்றனர். அவர்களைப் பாதுகாப்பிலிருந்த போலீசார் கேட்டுக்குள் விடவில்லை. கேட்டை மூடிக்கொண்டு, “அப்பாய்ன்மெண்ட் இல்லாமல் யாரையும் உள்ளே விடமாட்டோம் . அப்படி அனுமதித்தால் ஆட்சியர் எங்களைத்தான் திட்டுவார்” என்று கூறியிருக்கின்றனர்.
இதனால் கோபமடைந்த பாமகவினர், ‘ மக்களுக்குச் சேவை செய்யக்கூடிய மாவட்ட ஆட்சியரை மக்கள் பிரதிநிதிகளே சந்திக்கமுடியவில்லை என்றால் சாதாரண சாமன்யனால் எப்படிச் சந்திக்கமுடியும்’ என்று சத்தம்போட்டனர்.
அந்த நேரத்தில் இந்த தகவலை கேள்விப்பட்டு எஸ்.பி சக்தி கணேசன் சம்பவ இடத்துக்கு விரைந்தார். பாதுகாப்பு போலீசாரிடம் கேட்டை திறக்க சொல்லி பாமக எம்.எல்.ஏ.க்களை ஆட்சியர் பங்களாவுக்குள் அழைத்துச் சென்றார். மாவட்ட ஆட்சியரின் அறைக்குச் சென்றபோது பிற்பகல் மணி 2.30.
எம்.எல்.ஏ.க்களுடன் சென்ற பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணியை ஆட்சியர் பாலசுப்பிரமணியன், “வாங்க, வாங்க அமருங்கள்” என்றார்.
அப்போது ஜி.கே.மணி தனது கோபத்தை வெளிப்படுத்தாமல், இருக்கையிலும் அமராமல், “நீங்கள் நல்லா இருக்கீங்களா. நீங்கள் இங்கே இடமெல்லாம் வாங்கியிருப்பதாக சொன்னாங்க, உங்கள் வீட்டுலையும்(மனைவி) இந்த மாவட்டத்தில்தான் வேலை செய்வதாக சொன்னாங்க. நீங்கள் ஓய்வுபெற்ற பிறகும் மாவட்ட மைந்தராகக் கடலூரில்தான் வசிக்கப்போவதாகக் கேள்விப்பட்டேன்” என்று ஆட்சியர் லஞ்சம் வாங்குவதை மறைமுகமாகச் சொன்னார்.
தொடர்ந்து என்.எல்.சி நிறுவனத்தினரை அழைத்துப் பேசுங்கள், மக்களுக்கு உத்தரவாதம் கொடுங்கள் என ஜி.கே.மணி பேசியபோது, “சாரிங்க நீங்க வருவீர்கள் என்று ஆஃபிசில் வெயிட் பண்ணேன், டைம் ஆச்சுனு சாப்பிட வந்துவிட்டேன் சாரி” என்று ஆட்சியர் சொல்ல,
உடனே அருகிலிருந்த எஸ்.பி சக்திகணேசன், சாரி, சாரி சாரி, கேட் திறக்காமல் காத்திருந்திட்டீங்க, நடந்தே வந்துட்டீங்க என்று வருத்தப்பட்டுள்ளார்.
ஆட்சியரிடம் பேசிமுடித்துவிட்டு வெளியில் புறப்படும்போது கார்களை உள்ளே வரச்சொல்லுங்கள் காரில் போங்கள் என்று ஆட்சியர் சொல்ல, “வேண்டாம் நடந்தே போகிறோம்” என்று வெளியேறினார்கள் எம்.எல்.ஏ.க்கள்.
மாவட்ட ஆட்சியர் உடனான எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பைப் பற்றி, உடன் சென்ற தாமரைக்கண்ணனிடம் கேட்டோம்.
“மக்களுக்குச் சேவை செய்ய வந்த மாவட்ட ஆட்சியர் மக்கள் வரிப்பணத்தில் சொகுசாக வாழ்கிறார். இந்த வருடத்தில் ரவுடிகள், சாராயம் விற்பவர்கள், குட்கா விற்பவர்கள் மீது குண்டாஸ் போட 60 ஃபைலை போலீசார் கொடுத்திருக்கின்றனர்.
அந்த ஃபைல்கள் அனைத்தையும் திருப்பி அனுப்பிவிட்டு, நாகர்ஜுனா கம்பெனியில் இரும்பு திருடினார்கள் என்று மூவர் மீது அநியாயமாக குண்டாஸ் ஃபைல் கேட்டு கையெழுத்துப் போட்டவர் தான் இந்த ஆட்சியர்.
ஒரு கட்சியின் தலைவர், சீனியர் எம்.எல்.ஏ வருகிறார். ஆனால் ஆட்சியர் கேட்டை மூடிக்கொண்டு வேடிக்கைக் காட்டுகிறார். இவர் என்ன மன்னரா? எங்கிருந்து வந்தது இந்த மமதை.
முதல்வர் ஸ்டாலினே மக்களைத் தேடிப் போகிறார். இவர் மக்கள் பிரதிநிதியை அசிங்கப்படுத்துகிறார். இந்த ஆட்சியர் சொத்து விபரங்களை ஆதாரத்தோடு வெளியிடுவோம். அதுபோன்று போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் சிசிடிவி கேமரா போடுவதாகச் சொல்லி கோடி கணக்கில் கொள்ளை அடித்திருக்கிறார் பேரிகார்டு (தடுப்பு) போடுவதாக அரசியல் பிரமுகர்கள், தொழிற்சாலைகள், வியாபாரிகள், தொழில் அதிபர்களிடம் லட்சம் லட்சமாக வாங்கியிருக்கிறார்., கல்யாண மண்டபத்தில் 28 லட்சம் கையாடல் செய்திருக்கிறார். இவற்றையெல்லாம் விரைவில் ஆடியோ வீடியோ, வங்கி கணக்கு எண் போன்ற ஆதாரத்துடன் வெளியிடுவோம்” என்று ஆவேசமாகக் கூறினார்.
நாம் ஆட்சியரிடம் பேச தொடர்பு கொண்டோம். அவர் அழைப்பை எடுக்கவில்லை. ஆட்சியரின் உதவியாளர் சண்முகசுந்தரத்துக்குத் தொடர்புகொண்டு எம்.எல்.ஏ.க்கள் வருகை பற்றி பேசினோம்.
அவர், “ஆட்சியர் 11.00 மணிக்கு அலுவலகம் போய்விட்டார் .12.00 மணிக்கு எம்.எல்.ஏக்கள் வருவதாகச் சொன்னார்கள். ஆட்சியரும் காத்திருந்தார். ஆனால் அவர்கள் வரவில்லை. அதனால் 12.45 மணிக்குச் சாப்பிட வீட்டுக்கு வந்துவிட்டார் அவ்வளவுதான்” என்றார்.
கடந்த காலங்களில் பணியிலிருந்த ஆட்சியர்கள் சந்திப் சக்சேனா, ககன் தீப் சிங்பேடி, ராஜேந்திர ரத்னு, கிர்லோஷ்குமார் போன்றவர்கள் இருக்கும்போது, கேம்ப் ஆபிஸ் கேட்டை மூடியது இல்லை. எந்த நேரத்திலும் மக்கள் சந்திப்பார்கள், மக்கள் பிரதிநிதிகள் சந்திப்பார்கள், இது என்ன புதுப்பழக்கம், கேட்டை மூடிக்கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டால் யாரையும் சந்திக்கமாட்டேன் என்பது என்று கேட்டதும் லைன் கட்டானது.
“கலெக்டருக்கு வாட்ஸ் அப்பில் எந்த புகார் அனுப்பினாலும் அதைக் கண்டுகொள்வதில்லை, அப்படி சில புகார்களைப் பார்க்கும் கலெக்டர் உதவியாளர்கள் டெலிட் செய்துவிடுவார்கள் அதற்கான ஆதாரங்களும் பல உள்ளது என்கின்றனர்” மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊழியர்களே.
இதுபோன்ற மாவட்ட அதிகாரிகளை முதல்வர் ஸ்டாலின் கவனிப்பாரா பார்ப்போம்.
-வணங்காமுடி
டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியது ஆம் ஆத்மி
இந்திய அணிக்கு இலக்கு நிர்ணயித்த வங்கதேசம்