”அவமானப்படுத்திவிட்டார் கலெக்டர்” -முதல்வர் வரை புகார் செய்த மத்திய அமைச்சர் முருகன்
பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள கடலூர் வந்த தன்னை மாவட்ட ஆட்சியர் அவமானப்படுத்தியதாக முதல்வர் வரை தொடர்புகொண்டு தெரிவித்துள்ளார் மத்திய இணை அமைச்சரான எல்.முருகன்.
தமிழக பாஜகவின் செயற்குழு கூட்டம் கடலூர் மாநகர மையத்தில் புது நகரில் அமைந்துள்ள சுப்பராயலு திருமண மண்டபத்தில் இன்று (ஜனவரி 20) காலை தொடங்கி நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள வரும் மத்திய அமைச்சர் எல். முருகனுக்காக அவரது தரப்பில் இருந்து ஐந்து நாட்களுக்கு முன்பே கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு கடலூர் சர்க்யூட் ஹவுஸில் அறை முன் பதிவு செய்யப்பட்டது.
அதன்படி இன்று மாலை 3.00 மணியளவில் கடலூர் சர்க்யூட் ஹவுஸுக்கு வந்த எல். முருகனுக்கு பழைய பில்டிங்கில் சூட் ரூம் ஒதுக்கப்பட்டு இருந்தது. அறைக்குள் சென்ற அமைச்சர் அறையைப் பார்த்து அதிர்ந்து போய்விட்டார்.
காரணம் நைந்துபோன பெட்ஷீட், பழைய தலையணைகள், சுத்தமில்லாத பாத்ரூம், சோப்பு இல்லை, ஆயில் இல்லை என்றே இருந்தது அந்த சூட்டின் நிலை. அறையிலிருந்து வெளியில் வந்த மத்திய அமைச்சர் புதிய பில்டிங்கில் உள்ள சூட் ரூம்களை திறந்து காட்டச் சொல்லி அங்கிருந்த ஊழியர்களிடம் கேட்டார்.
இதையடுத்து ஊழியர்கள் புதிய சூட் ரூம்களை திறந்து காண்பித்தார்கள். அவை சுத்தமாக இருந்தன. “இந்த ரூம்களை கொடுக்காமல் ஏன் இந்த பழைய ரூமைக் கொடுத்தீர்கள்?” என சத்தம் போட்டபடி காரில் ஏறி 500 மீட்டர் தூரத்தில் உள்ள உட்லண்ட்ஸ் ஹோட்டலுக்கு போனார் மத்திய இணை அமைச்சர்.
அங்கிருந்தபடியே கலெக்டர் பாலசுப்பிரமணியனைத் தொடர்புகொண்டு புதிய பில்டிங்கில் உள்ள நல்ல ரூம் கொடுக்காமல் பழைய பில்டிங்கில் உள்ள பழுதடைந்த ரூம் ஏன் கொடுத்தீர்கள் என கேட்டிருக்கிறார் எல்.முருகன். அதற்கு, ‘மாநில அமைச்சர்கள் இருவர் வருகிறார்கள். அந்த அறைகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
ஏன் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட அந்த ரூம் நல்லா இருக்குமே சார்?” என கலெக்டர் கேட்டிருக்கிறார். இதனால் கோபமான மத்திய அமைச்சர் முருகன், ”நீங்கள் ஒரு நாள் இந்த அறையில் தங்கி பாருங்கள். வாருங்கள்” என சொல்லிவிட்டு லைனைத் துண்டித்தார்.
அடுத்தபடியாக தலைமை செயலாளர் இறையன்புவைத் தொடர்பு கொண்டார் மத்திய இணை அமைச்சர் முருகன். அதன் பிறகு முதல்வரின் தனி செயலாளர் (1) உதயசந்திரனைத் தொடர்புகொண்டு கலெக்டர் தனக்கு இழைத்த அநீதியை சொல்லியுள்ளார். அவரும் உடனடியாக பார்க்கிறேன் என மத்திய அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.
இதன் பிறகு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினிடமும் முறையிடுவதற்காக அவரைத் தொடர்புகொண்டிருக்கிறார் மத்திய இணையமைச்சர் எல்.முருகன். அப்போது முதல்வரின் உதவியாளர் தினேஷ் போனை எடுத்துள்ளார். அவரிடம் கடலூரில் நடந்த சம்பவத்தை சொல்லி ஃபீல் பண்ணியுள்ளார் முருகன்.
உடனடியாக இதை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன் என்று தினேஷ் கூறியிருக்கிறார். இந்த மன உளைச்சலால் செயற்குழு கூட்டத்திற்கு காலதாமதமாக மாலை 5 மணிக்கு மேல்தான் சென்றார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.
தற்போது மாவட்ட ஆட்சியரை மேலிடத்திலிருந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
வணங்காமுடி
மாற்றுத் திறனாளிகளுக்கு மாற்று வழி என்ன? : அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
ஈரோடு கிழக்கு: எடப்பாடி போடும் கணக்கு!