நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று ஆறு மாதங்களாகிவிட்டது. ஆனால் கடலூர் மாநகராட்சி கூட்டத்தில் நடக்கும் பிரச்சினை மட்டும் இன்னும் ஓயவில்லை.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்ததும், கடலூர் மாநகராட்சிக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்த மேயருக்கு எதிராகப் போட்டி மேயரை நிறுத்த திமுக எம் எல் ஏ ஐயப்பன் முயற்சித்து தனது ஆதரவு கவுன்சிலர்களை அழைத்துச் சென்று ரிசார்ட்டில் தங்க வைத்தார்.
இந்த விவகாரத்தில் எம்.எல்.ஏ.ஐயப்பன் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு மீண்டும் கடந்த ஜூலையில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

எனினும், கடலூர் மாநகராட்சியில் கவுன்சிலர்களுக்குள்ளான போட்டி இன்றுவரை தொடர்ந்துகொண்டே வருகிறது.
கடலூர் மாநகராட்சி மாமன்ற கூட்டம் நான்காவது முறையாக நேற்று (செப்டம்பர் 2) காலை 10.00 மணியளவில் கூடியது.
இக்கூட்டத்தில் மேயர் சுந்தரி, துணை மேயர் தாமரை செல்வன், ஆணையர் நவேந்திரன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்துக்கு 43ஆவது வார்டு திமுக கவுன்சிலரும், ஐயப்பன் எம்.எல்.ஏ ஆதரவாளருமான பரகத் அலி 15 நிமிடம் காலதாமதமாக வந்தார்.
அப்போது சமீபத்தில் தவாகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த 42ஆவது வார்டு கவுன்சிலர் விஜயலக்ஷ்மியின் கணவர் செந்தில் மற்றும் நண்பர்கள் ஆறுபேர் சேர்ந்து பரகத் அலியைத் தாக்கினர்.
இதையறிந்த திமுக அதிருப்தி கவுன்சிலர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு கவுன்சிலரைத் தாக்கியவர்களைக் கைது செய்ய வலியுறுத்தினர்.
அவர்களுக்குப் போட்டியாக மேயர் சுந்தரியின் ஆதரவு கவுன்சிலர்கள், “மாநகராட்சி கூட்டத்தை நடத்தவிடாமல் தடுக்கிறார்கள்” என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், 29ஆவது வார்டு பாஜக கவுன்சிலர் சக்திவேல், “தனது வார்டுக்கு நிதி ஒதுக்குவதில்லை.
நம்மைப் புறக்கணிக்கிறார்கள். ஊழல் நடக்கிறது” என்று கூறி தனது வார்டு மக்களை அழைத்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டார். இதனால் நேற்று மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு நிலவியது.
இந்நிலையில், கடலூர் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் ஏதாவது ஒரு பிரச்சினை ஏற்படுகிறதே? இதற்கு என்ன பிரச்சினை என்று விசாரித்த போது…
“மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் திமுக 27, தவாக 3, விசிக 4, பாமக 1, பாஜக 1, காங்கிரஸ் 1, சுயேட்சை 2, அதிமுக 6 இடங்களை பிடித்தது.
இதில், திமுகவின் 27 கவுன்சிலர்களில் 12 கவுன்சிலர்கள், கடலூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ ஐயப்பன் ஆதரவாளர்களை இன்று வரையில் புறக்கணித்து வருகிறார்கள்” என்கின்றனர் எம்.எல்.ஏ ஐயப்பனுக்கு நெருக்கமானவர்கள்.

கவுன்சிலர் தமிழரசனிடம் விசாரித்தபோது, “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது எங்களிடம் பெரும்பான்மையான கவுன்சிலர்கள் இருந்தும் நகரச் செயலாளர் ராஜா மனைவி சுந்தரியை மேயராக்கினார்கள்.
அப்போது நடந்த பிரச்சினையில் எம்.எல்.ஏ ஐயப்பன் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
பின்னர், கடந்த ஜூலை 11ஆம் தேதி, ஒழுங்கு நடவடிக்கையை ரத்துசெய்து கழக உறுப்பினராகச் செயல்பட கட்சித் தலைமை அனுமதித்தது.
ஆனால் இன்று வரையில் தொகுதி எம்.எல்.ஏ.வை புறக்கணித்து வருகின்றனர், நகரசெயலாளரும் மேயரும்.
மாநகராட்சியில் நடக்கும் அரசு விழாவுக்கு எம்.எல்.ஏ.வை அழைக்காமல் மேயர், ஆணையர் மற்றும் கவுன்சிலர்களுடன் பங்கேற்று வருகின்றனர்.

எம்.எல்.ஏ. ஆதரவு திமுக கவுன்சிலர்களை கொஞ்சம்கூட மதிப்பதில்லை, அதிமுக கவுன்சிலர்களை மதிக்கும் அளவில் கூட எங்களை மதிப்பதில்லை.
ஏன் வெட்கத்தை விட்டுச் சொல்கிறேன், ஒவ்வொருமுறையும் மாநகராட்சி கூட்டம் கூடும்போதும் கவுன்சிலருக்கு படிக் காசு 800 ரூபாய் இல்லாமல், மேயருக்கு வரும் கூடுதல் வருமானத்திலிருந்து அனைத்துக் கட்சி கவுன்சிலருக்கும் ஒரு கவர் கொடுப்பார்கள்.
இன்று நடந்த கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக கவுன்சிலருக்கு ரூ.30 ஆயிரம், அதிமுக கவுன்சிலருக்கு 25 ஆயிரம், மற்ற கவுன்சிலருக்கு ஆளுக்கு ஏற்றது போல் கவர் போட்டுக்கொடுத்தார்கள்.
ஆனால் எங்கள் 12 கவுன்சிலருக்கும் படிக் காசு 800 ரூபாய் தவிர, ஒத்த ரூபாய் கொடுக்கவில்லை.
எங்கள் வார்டுகளுக்கு நிதியும் ஒதுக்கவில்லை, வேலையும் கொடுக்கவில்லை, எங்களைப் பார்த்தாலே எதிரிகளாகப் பார்க்கிறார்கள்.
எம்.எல்.ஏ ஐயப்பனும் ஆகஸ்ட் 23ஆம் தேதி ஆனந்தபவனில் ஆதரவு கவுன்சிலர்களைக் கூட்டிப் பேசினார்.
அப்போது, தலைமைக்குக் கட்டுப்பட்டு பிரச்சனைகள் இல்லாமல் போங்கள், உங்கள் வார்டில் வேலைகள் நடக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, தேர்தலின்போது அது கட்சியைத்தான் பாதிக்கும்.,
நீங்கள் அமைதியாக போங்கள் என்று விரக்தியாகப் பேசினார் ஐயப்பன். திமுக எம்.எல்.ஏ.வான என்னையே புறக்கணித்து அவமானப்படுத்திதான் நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள். தலைமைக்குக் கட்டுப்பட்டு ஊமையாகிவிட்டேன் என்றும் கூறினார்.
இன்று எங்கள் ஆதரவு கவுன்சிலர் பரக்கத் அலியை அடித்தது மேயர் சுந்தரியின் கணவர் ராஜாவின் ஆளான செந்தில்தான்.
அவர் மீது வழக்குப் போடக்கூடாது கைது செய்யக்கூடாது என்று போலீசுக்கு நெருக்கடிகள் கொடுக்கிறார்கள்.
நாங்களும் திமுக கவுன்சிலர்கள்தான் என்ன செய்வது தலைமையிடம் யார் எடுத்துச் சொல்வது” என்றார்.
“கடலூர் மாநகர் திமுகவுக்குள் இருக்கும் இரு அணியும் ஒன்று சேரும் வரையில் மாநகராட்சி சுமுகமாக நடைபெறாது.
திமுக அதிருப்தி கவுன்சிலர்கள் 12, அதிமுக 6, பாமக 1, பாஜக 1, சுயேட்சை 2 என மொத்தம் 22 கவுன்சிலர்கள் இருக்கிறார்கள்.
இந்நிலையில், மாநகராட்சி திமுக மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கு பாஜக பக்கா பிளான் போட்டு வருகிறது. அதற்கான காயையும் நகர்த்தி வருகிறது. ” என்கிறார்கள் மாநகர அதிகாரிகள்.
-வணங்காமுடி