சிஎஸ்கே வெற்றிக்கு யார் காரணம்? அமைச்சருக்கு அண்ணாமலை பதில்!

அரசியல்

சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு காரணம் பாஜக காரியகர்த்தா என்பதில் நாங்கள் பெருமைப் படுகிறோம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் நடைபெற்ற 16 வது ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

இந்நிலையில் , அந்த அணிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். அதன்படி, தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இன்று அரசியல் மற்றும் கிரிக்கெட்டை கனெக்ட் செய்து ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டார்.

அதில், “மஞ்சள் படையினரின் இந்த வரலாற்று வெற்றியை விவரிக்க வார்த்தைகள் இல்லை. தல தோனி தலைமையில் ஒவ்வொரு சிஎஸ்கே வீரரும் இந்த மகத்தான வெற்றிக்குப் பங்களித்துள்ளனர்.

உண்மையான தலைவரின் கீழ் இருக்கும் ஒரு அணி, எந்த எதிரியையும் வெல்ல முடியும் என்று விளையாட்டை விரும்புபவர்கள் அனைவரும் நம்பினர்.

அவர்கள் எவ்வளவு வலிமையானவர்கள் என்று சித்தரிக்கப்பட்டாலும் குஜராத் தோற்கடிக்கப்படும். கடந்த காலங்களில் பல குஜராத்திகளை நாங்கள் தோற்கடித்துள்ளோம்.

ஒரு அணியாக எப்படி விளையாட வேண்டும் என்பதை உலகிற்குக் காட்டியது சென்னை சூப்பர் கிங்ஸ். சென்னையை எப்போதும் நம்புவோம்” என்று டி.ஆர்.பி.ராஜா பதிவிட்டிருந்தார்

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு இன்று பேட்டியளித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையிடம் இது தொடர்பாக கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலில், “சிஎஸ்கே அணிக்காக வின்னிங் ரன் அடித்தது பாஜக காரியகர்த்தா, ஜடேஜா ஒரு பிஜேபி காரியகர்த்தா.. அவரது மனைவி பாஜக எம்.எல்.ஏ, ஜடேஜா குஜராத்தை சேர்ந்தவர், தமிழனாக பெருமைப்படுகிறேன். அதே நேரத்தில் சிஎஸ்கே அணியை விட குஜராத் அணியில் தமிழர்கள் அதிகம் பேர் உள்ளனர். 96 ரன் அடித்தது ஒரு தமிழர் அதையும் கொண்டாடுகிறேன்.


சிஎஸ்கே அணியில் ஒரு தமிழர் கூட ஆடவில்லை. ஆனாலும் சிஎஸ்கேவை கொண்டாடுகிறோம். ஏன் என்றால் தோனிக்காக, நேற்றைய போட்டியில் கடைசியில் வின்னிங் ரன் அடித்து சென்னை அணியை ஜெயிக்க வைத்தது பாஜக காரியகர்த்தா என்பதில் பெருமைப் படுகிறோம். அதே தான் 2024 ஆம் ஆண்டு நடைபெறும். இதனை டி.ஆர்.பி.ராஜா புரிந்து கொள்ள வேண்டும் ” என அண்ணாமலை தெரிவித்தார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

“தோனி ஒரு சகாப்தம்” : சிஎஸ்கேவுக்கு குவியும் வாழ்த்து!

நெல்லை: சினிமாவை மிஞ்சிய கொள்ளை சம்பவம்!

+1
0
+1
2
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *