மாறும் அரசியல் களம்…கருத்துக்கணிப்பில் வந்த மாற்றம்…பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியுமா?

அரசியல் இந்தியா

இதுவரை வெளியான பல்வேறு ஊடகங்களின் கருத்துக்கணிப்புகள் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று தெரிவித்த நிலையில், தற்போது CSDS-Lokniti நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிவந்துள்ளன. இந்த கருத்துக்கணிப்பிலும் இந்திய அளவில் மீண்டும் வாக்கு சதவீதத்தில் பாஜக கூட்டணியே முன்னிலை பெறுவதாகவே தெரிவித்துள்ளது. ஆனால் கருத்துக்கணிப்பின் பல்வேறு கேள்விகளுக்கு வந்துள்ள முடிவுகளை அலசிப் பார்க்கும்போது பாஜக கூட்டணிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையில் கடும் போட்டி இருக்க வாய்ப்பிருக்கிறது என்பது தெரிய வருகிறது. பாஜக அரசின் செயல்பாடுகளில் மக்களுக்கு திருப்தி குறைந்திருப்பதை இந்த கருத்துக்கணிப்பின் முடிவுகளை ஆராயும் போது அறிய முடிகிறது.

தேர்தலில் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு கருத்துக்கணிப்பின் முடிவுகள்:

கட்சி சதவீதம்
பாஜக 40%
பாஜக கூட்டணிக் கட்சிகள் 6%
காங்கிரஸ் 21%
காங்கிரஸ் கூட்டணிக்  கட்சிகள் 13%
பகுஜன் சமாஜ் கட்சி 3%
இடதுசாரிகள் 2%
மற்றவை 15%

 

பாஜக மற்றும் பாஜகவின் கூட்டணிக் கட்சிகள் இணைந்து 46% வாக்குகளைப் பெறுகின்றன. அதேசமயம் காங்கிரஸ், காங்கிரசின் கூட்டணிக் கட்சிகள் மற்றும் இடதுசாரிகள் இணைந்து 36% வாக்குகளைப் பெறுகின்றன. இது பாஜகவே மீண்டும் வாக்கு சதவீதத்தில் முன்னிலையில் இருப்பதைக் காட்டுகிறது. ஆனால் காங்கிரஸ், பாஜக அல்லாத மற்ற கட்சிகள் 15% ஆதரவைப் பெறும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிப்பதால், ஒரு கடும் போட்டி இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சிறிதளவு வாக்குகள் மாறினால் கூட வெற்றி எண்ணிக்கையில் பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

பிராந்திய ரீதியாக வாக்கு சதவீதங்கள்

  

தென்மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி 38% வாக்குகளையும், பாஜக கூட்டணியும் 38% வாக்குகளையும் பெறும் என்றும், மற்ற கட்சிகள் 24% வாக்குகளைப் பெறும் என்றும் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. தென்மாநிலங்களில் செல்வாக்கு குறைந்திருந்த பாஜகவின் வாக்கு சதவீதம் சிறிது உயர்ந்திருப்பதை பார்க்க முடிகிறது.

மேலும் பொருளாதார ரீதியாக பல்வேறு தரப்பு மக்களிடம் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பவர்கள் மற்றும் ஏழைகள் மத்தியில் பாஜகவிற்கு இருக்கும் ஆதரவைக் காட்டிலும் பணக்காரர்கள் மத்தியில் பாஜகவிற்கு ஆதரவு அதிகமாக இருப்பதைப் பார்க்க முடிகிறது.

மோடி அரசின் பாராட்டுக்குரிய பணி எது?

அயோத்தி கோவில் 23%
வேலைவாய்ப்பு 9%
வறுமை ஒழிப்பு 8%
சர்வதேச அளவில் இந்தியாவின் பிம்பத்தை உயர்த்தினார் 8%
சாலை வசதி 5%
இந்துத்துவா 5%

 

அயோத்தியில் ராமர் கோயில் கட்டியதை மோடி அரசின் பாராட்டுக்குரிய பணியாக பெரும்பாலானோர் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

யாரைப் பிரதமராக தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்கள்?

 

நரேந்திர மோடி 48%
ராகுல் காந்தி 27%
அரவிந்த் கெஜ்ரிவால் 3%
மம்தா பானர்ஜி 3%
அகிலேஷ் யாதவ் 3%
மற்றவர்கள் 6%

 

 

ஏன் மோடிக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க விரும்புகிறீர்கள்?

காரணங்கள் சதவீதம்
நல்ல பணி 42%
மக்கள் நலத் திட்டங்கள் 18%
மோடி ஒரு சிறந்த தலைவர் 10%
அயோத்தியில் ராமர் கோயில் கட்டியது 8%
பிரிவு 370-ஐ நீக்கியது 6%
இந்தியாவின் சர்வதேச பிம்பம் 4%
இந்து/இந்துத்துவாவை பாதுகாத்தல் 4%

 

மோடிக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க விரும்புபவர்களில் 34% பேர் ராமர் கோவில் கட்டியது, பிரிவு 370 நீக்கியது, இந்தியாவின் சர்வதேச பிம்பம், இந்துத்துவா கொள்கை உள்ளிட்டவற்றை முக்கியமானதாகப் பார்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மோடி அரசின் விரும்பத் தகாத அம்சங்கள் எவை?

விலைவாசி உயர்வு 24%
வேலையின்மை அதிகரிப்பு 24%
வறுமை 10%
ஊழலை கையாண்ட விதம் 7%
மதவாதத்தை ஊக்குவித்தல் 3%
விவசாயிகள் பிரச்சினை 3%
பொருளாதார வளர்ச்சி குறைவு 2%

 

விலைவாசி உயர்வையும், வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருப்பதையும் இந்த ஆட்சியின் விரும்பத்தகாத அம்சங்கள் என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் ஆட்சி திருப்திகரமாக இருந்ததா?

மோடி அரசின் ஆட்சி திருப்திகரமாக இருந்தது என்று சொல்பவர்களின் சதவீதம் 2019 ஐக் காட்டிலும் குறைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. அதேபோல் முழுவதுமாக திருப்தியே இல்லை என்று சொல்பவர்களின் சதவீதம் அதிகரித்திருப்பதையும் பார்க்க முடிகிறது. எனவே மத்திய அரசின் மீதான அதிருப்தி 2019ஐ விட தற்போது அதிகரித்திருப்பதைக் கவனிக்க முடிகிறது.

அதேபோல் சாதி ரீதியாக பார்க்கும்போது உயர்சாதியைச் சேர்ந்தவர்களில் 68% பேர் பாஜகவின் ஆட்சியில் பரவலாக திருப்தி அடைவதாக சொல்லியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முஸ்லீம்களில் 59% பேரும், பட்டியலினத்தவர்களில் 40% பேரும், பழங்குடியினரில் 38% பேரும் மோடி ஆட்சியில் பெரிதாக திருப்தி இல்லை என்று தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த அரசுக்கு மற்றுமொரு வாய்ப்பு கொடுக்க வேண்டுமா?

இந்த அரசு தொடரவேண்டும் என்று சொல்பவர்களின் சதவீதமும் 2019ஐ விட இப்போது குறைந்திருப்பதை பார்க்க முடிகிறது. அதேபோல் தொடரக் கூடாது என்று சொல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதைப் பார்க்க முடிகிறது. இது வாக்குகளில் பிரதிபலிக்கும்பட்சத்தில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது அவ்வளவு எளிதாக இருக்குமா என்பதும் கேள்விக்குறியே.

விவேகானந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மின்னம்பலம் மெகா சர்வே : திண்டுக்கல் வெற்றிச் சாவி யார் கையில்?

மின்னம்பலம் மெகா சர்வே: மதுரை மாஸ் மாமன்னன் யார்?

மின்னம்பலம் மெகா சர்வே: ஆரணி வெற்றிக் கனி யார் கையில்?

மின்னம்பலம் மெகா சர்வே: திருச்சி… திருப்புமுனை வெற்றி யாருக்கு?

+1
0
+1
0
+1
0
+1
4
+1
2
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *