தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரான இறையன்பு ஐ.ஏ.எஸ்., எப்போதும் சாந்தமான முகத்தோடே இருப்பவர்.
அதிகாரி என்பதோடு மட்டுமல்லாமல் அடிப்படையில் அவர் ஓர் இலக்கியவாதி என்பதால் எப்பொழுதுமே கனிவான புன்னகை அவர் முகத்தில் தவழ்ந்துகொண்டிருக்கும்.
ஆனால் அப்பேற்பட்ட இறையன்புவையே முகம் சிவக்க கோபப்பட வைத்துவிட்டனர் சென்னை மாநகராட்சி அதிகாரிகள்.
சென்னையில் இன்று(அக்டோபர் 2) மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார் தலைமைச் செயலாளர் இறையன்பு.
சென்னையில் வடகிழக்கு பருவமழையின் போது, நகரின் முக்கியமான பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் இருக்க, மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனால் நகரின் பல பகுதிகளில் குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

மழைநீர் வடிகால் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், இன்னும் பல பகுதிகளில் முழுமையாக பணிகள் நிறைவடையவில்லை.
கடந்த வாரம் பெய்த மழையில் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
மழைநீர் வடிகால் இணைப்புகளையும், தண்ணீர் தேங்கிய பகுதிகளையும் மாநகராட்சி ஊழியர்கள் தங்களது மொபைல் போன்களில் வீடியோ எடுத்து அனுப்பும்படி தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை தலைமை செயலாளர் இறையன்பு, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி ஆகிய இருவரும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்படி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று கொண்டிருந்த 11இடங்களில் இறையன்பு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இணைப்பு கால்வாய்களில் உள்ள அடைப்புகளை சீர்படுத்துவது உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டார்.

திருவான்மியூர் பகுதியில் தூர்வாரும் பணிகளை பார்வையிட்ட இறையன்பு, அந்த பகுதிகளில் பணிகள் இன்னும் நிறைவடையாததால், அதிகாரிகளிடம்,
’நீங்கள் மனசு வைத்திருந்தால் வேலையை முன்னதாகவே முடித்திருக்கலாம். ஆனால் நீங்கள் மனசு வைக்கலை’ என்று கோபத்துடன் பேசினார்.
மேலும் பணிகளை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டு சென்றார்.
செல்வம்