சத்தீஸ்கரில் முதல்கட்ட சட்டமன்ற தேர்தல் இன்று காலை தொடங்கிய நிலையில், சுக்மா மாவட்டத்தில் ஐஇடி வகை குண்டுவெடித்ததில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். IED explosion at Chhattisgarh
நக்சல் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் நிறைந்த சத்தீஸ்கரில் மொத்தம் 90 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அதன்படி முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இவற்றில் பல்வேறு கட்சியை சேர்ந்த 223 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மொத்தம் 40.78 லட்சம் பேர் வாக்குரிமை பெற்றுள்ள நிலையில் அவர்களுக்காக 5,304 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
சத்தீஸ்கரில் நக்ஸல் தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த மோஹ்லா-மன்பூர், அந்தகர், பானுபிரதாப்பூர், கொங்கர், கேஷ்கல், கொண்டகான், நாராயண்பூர், தண்டேவாடா, பிஜாபூர், கோண்டா ஆகிய 10 தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. இந்த வாக்குப் பதிவு மாலை 3 மணியுடன் நிறைவடையும்.
மற்ற தொகுதிகளில் வழக்கம்போல காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஐஇடி வெடிகுண்டு தாக்குதல்!
இதற்கிடையே தேர்தல் நடைபெற்று வரும் சுக்மா மாவட்டத்தில் உள்ள தொண்டமார்கா தொகுதியில் மாவோயிஸ்டுகள் நடத்திய ஐஇடி வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இதனை சுக்மா எஸ்பி கிரண் சவான் உறுதிப்படுத்தினார். “குண்டுவெடிப்பில் காயமடைந்த வீரருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே சட்டப்பேரவைத் தேர்தலை சீர்குலைக்கும் வகையில் சத்தீஸ்கரின் கன்கர், பிஜாபூர் பகுதிகளில் நக்ஸல் தீவிரவாதிகள் நேற்று கண்ணிவெடி தாக்குதல்களை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
ஒரு லட்சம் வீரர்கள் குவிப்பு!
இதனையடுத்து முதல் கட்ட சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் 20 தொகுதிகளில் பதற்றம் தொற்றிய நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 1,00,000 பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கரில் நக்ஸல் தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக 12 தொகுதிகளை உள்ளடக்கிய பஸ்தார் கோட்டம் கண்டறியப்பட்டுள்ளது.
அங்குள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 149 வாக்குச் சாவடிகள் அருகிலுள்ள காவல் நிலையங்கள் மற்றும் பாதுகாப்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.
பஸ்தார் கோட்டத்தில் மட்டும் 40,000 சிஆர்பிஎப் வீரர்களுடன் மொத்தம் 60,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், நக்சல் அச்சுறுத்தல் காரணமாக இன்று காலை நிலவரப்படி தேர்தல் வாக்குப்பதிவு மெதுவாகவே நடைபெற்று வருகிறது. IED explosion at Chhattisgarh
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
வாக்குப்பதிவு தொடங்கியது: மிசோரம் முதல்வர் வாக்களிக்க முடியாததால் அதிர்ச்சி!
இயற்கை வேளாண்மைக்குச் சான்றிதழ் பெறுவது அவசியம்: ஏன்?