மோடிக்குத் திரண்ட கூட்டம்: டெல்லிக்கு போன ரிப்போர்ட்!

அரசியல்

பிரதமர் மோடியின் நேற்றைய (ஏப்ரல் 8) சென்னை  விசிட்டின்  அரசியல் முக்கியத்துவம் ஒரு பக்கம் என்றால் இன்னொரு  முக்கிய அம்சம் மோடிக்குத் திரண்ட கூட்டம் பற்றிய தகவல்.  பிரதமர் மோடி  சென்னைக்கு வந்தபோது எவ்வளவு கூட்டம் திரண்டது என்பதை மத்திய உளவுத்துறை உடனடி  ரிப்போர்ட் எடுத்து  டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளது. 

அதில் பல்லாவரம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் திரண்ட கூட்டம் பற்றியும்,  சென்னை காமராஜர் சாலை, சிவானந்தா சாலை, பல்லவன்  சாலை ஆகிய இடங்களில் திரண்ட கூட்டம் பற்றியும் தனித்தனியாக குறிப்பு அனுப்பப்பட்டிருக்கிறது.

அதாவது பிரதமர் மோடி வரும்போது அவருக்கு சென்னை மாநகரத்தில்  சாலைகளில் வரவேற்பு தரவேண்டியது சென்னை பெருங்கோட்ட பாஜகவின் பொறுப்பு என்றும், பல்லாவரம் பொதுக்கூட்டத்தில் கூட்டம் திரட்ட வேண்டியது விழுப்புரம் பெருங்கோட்டத்தின் பொறுப்பு என்றும் கட்சியில் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களில் அண்ணாமலை பங்கேற்றார். ஆனால் மோடி வருவதற்கு முதல் நாளே அவர் திடீரென டெல்லி புறப்பட்டுவிட்டார்.

சென்னைக்குள் சாலைகளில் மோடியை வரவேற்க கூட்டம் திரட்டும் வேலையை சென்னை பெருங்கோட்டத்துக்குள் இருக்கும் கட்சியின் ஏழு மாவட்டங்களும் பகிர்ந்துகொள்ள திட்டமிடப்பட்டது.  ஆனால் ஏழு மாவட்டங்களுக்கும் சேர்த்து ஏழாயிரம் பேரே திரண்டிருக்கிறார்கள். இதில் தானாக முன் வந்து திரண்ட பொதுமக்களும் சேர்த்துதான்.  சென்னை பெருங்கோட்டப் பொறுப்பாளர் கரு. நாகராஜன் மாவட்ட நிர்வாகிகளிடம் இதுபற்றி கேட்டும், ‘வெயில் தாங்கலைங்க’ என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இன்னொரு காரணம்  கூட்டம் திரட்ட கட்சித் தலைமையிடம் இருந்து எந்த செலவும் செய்யப்படவில்லை என்பதும் நிர்வாகிகள் தாங்களாக செலவு செய்தார்கள் என்பதும்தான். 

பல்லாவரத்தில்  மோடி கலந்துகொண்ட  அரசு திட்ட விழாவில் மொத்தம் இருபதாயிரம் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. அவற்றில் 12 ஆயிரம் நாற்காலிகள் பாஜகவுக்கு என்றும், 6 ஆயிரம் நாற்காலிகள் திமுகவுக்கு என்றும் பகிரப்பட்டுக் கொண்டன. மீதி இருக்கும் 2 ஆயிரம் நாற்காலிகள் போலீஸ் மற்றும் ரயில்வே, விமானப் போக்குவரத்துத் துறை, நெடுஞ்சாலைத் துறை மத்திய அரசு அதிகாரிகள், அவர்கள் குடும்பத்தினருக்காக ஒதுக்கப்பட்டன. 

இந்த பல்லாவரம் பொதுக்கூட்டத்துக்கு  கூட்டம் சேர்க்க வேண்டிய பொறுப்பு விழுப்புரம் பெருங்கோட்டப் பொறுப்பாளரான  மாநில செயலாளர் வினோஜ் பன்னீர் செல்வத்திடம் அளிக்கப்பட்டது. அதற்கான வேலைகளில் ஈடுபட்டவர் திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டு சில நாட்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனபோதும் மாவட்ட தலைவர்களிடம் தொடர்ந்து தொடர்பில் இருந்த வினோஜ்…  ஏப்ரல் 7 ஆம் தேதி இரவு டிஸ்சார்ஜ் ஆகி மருத்துவமனையில் இருந்து நேரடியாக பல்லாவரம் மைதானத்துக்குதான் சென்றார். அங்கே ஏற்பாடுகளை பார்வையிட்டு விட்டு  கூட்டம் திரட்டுவது பற்றி ஆலோசனை நடத்தினார். 

திட்டமிட்டபடியே 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் பேரை திரட்டி விட்டனர் பாஜகவினர். அதனால்தான் பாஜகவினரிடையே ’பாரத் மாதா கீ ஜே’ என்ற முழக்கமும், திமுகவினரின் ’திராவிட மாடல் வாழ்க’ என்ற முழக்கமும் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தன. திமுகவினர் திரட்டி வந்த 6 ஆயிரம் பேரில் சில ஆயிரம் பேர்  ஸ்டாலின் பேசி முடித்ததும் கலைய ஆரம்பித்தனர். அதனால் பிரதமர் பேசும்போது சில ஆயிரம்  நாற்காலிகள்  காலியாகின.  இது எல்லாமே மத்திய அரசுக்கு ரிப்போர்ட் ஆக அனுப்பப்பட்டுள்ளது.

கட்சி சார்பில் எந்த நிதியும் கொடுக்காத நிலையில்  பெருங்கோட்டப் பொறுப்பாளர்கள் வசூல் நடத்தியும் சொந்த காசை போட்டும்தான் கூட்டம் திரட்டியுள்ளனர் என்கிறார்கள் பாஜக தரப்பில்.

-வேந்தன்

மோடியை ‘ஹீரோ’ என்று புகழ்ந்த கிரிக்கெட் வீரர்!

அதிரடி அரைசதம்: விஜய் சங்கர் கலக்கல்!

+1
0
+1
4
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *