மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிவாரண உதவிகளை வழங்கினார்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக கடந்த 11 , 12 ஆகிய தேதிகளில் டெல்டா மாவட்டங்களில் அடை மழை கொட்டி தீர்த்தது.
இதில் கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளும், பல நூறு ஏக்கர் விளைநிலங்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
மழை பாதிப்புகளை பார்வையிட்டு நிவாரண உதவிகள் வழங்குவதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(நவம்பர் 14) நேரடியாக சென்றுள்ளார்.
முதலில் கடலூர் மாவட்டம் சென்ற அவர், கீழ்பூவாணிக்குப்பம் பகுதியில் கடலூர் குறிஞ்சிப்பாடி வட்டங்களில் வீடுகள் இடிந்து பாதிக்கப்பட்ட 14 பயனாளிகளுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் இடிந்த வீடுகளுக்கு அதன் தன்மைக்கேற்ப ரூபாய் 5200 வரை நிதி உதவி வழங்கினார்.
இதைத் தொடர்ந்து வல்லம்படுகையில் ஜெயங்கொண்டபட்டினம், பேராம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பாதிக்கப்பட்ட குடியிருப்பு வாசிகளுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 66,888 ஹெக்டேர் பரப்பளவில் சம்பா மற்றும் சாகுபடி செய்திருந்த நிலையில், 34,852 ஹெக்டேர் பரப்பளவு நிலப்பரப்பில் சம்பா பயிர்கள் மழைநீர் சூழ்ந்து வீணாகியுள்ளது.
மேலும் சீர்காழி, கொள்ளிடம், ஆச்சாள்புரம், நல்லூர், புளியந்துரை, உமையாள்பதி சட்டநாதபுரம், திட்டை, திருவெண்காடு, திருமுல்லைவாசல், அத்தியூர், குன்னம், திருநகரி, வழுதலைகுடி, நாங்கூர், உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட கிராமங்களில் விளைநிலம் தண்ணீரில் மூழ்கி கடல் போல காட்சி அளிக்கிறது.
இங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் பார்வையிட்டார். கொள்ளிடம் பச்சைபெருமாநல்லூர் அரசு உதவி பெறும் பள்ளி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு உணவு வழங்கினார்.
அங்கிருந்து உமையாள்பதியில் மழை நீர் உட்புகுந்த ஆதிதிராவிடர் காலனி வீடுகளை பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
பிறகு அதே பகுதியில் நெற்பயிர்கள் தண்ணீர் மூழ்கிய வயல்களை பார்வையிட்டார். அங்கிருந்து புறப்பட்டு சீர்காழி புதிய பேருந்து நிலையத்தை வந்தடைந்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக மளிகைப்பொருள், அரிசி அடங்கிய பை மற்றும் போர்வை, பாய் ஆகிய பொருட்களை சுமார் 2000 பேருக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வருடன் விவசாயத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மெய்ய நாதன், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி,
நகரப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் கே.என்.நேரு, தொழிலாளர் நலன் அமைச்சர் கணேசன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா மற்றும் சீர்காழி எம்எல்ஏ பன்னீர் செல்வம், பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன், மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
கலை.ரா
“திமுகவுடன் காங்கிரஸ் ஒன்றுபடுவது இதில் மட்டும்தான்!”- கே.எஸ். அழகிரி
கார்த்தியின் முகநூலில் கேம் விளையாடிய ஹேக்கர்கள்!