குறுவை சாகுபடி தொடங்கி உள்ள நிலையில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் உரிய நேரத்தில் கிடைத்திட செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தலைமையில் கூட்டுறவுத் துறையின் கூடுதல் பதிவாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று(ஜூன் 22) சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி தொடங்கியுள்ள நிலையில் உரத்தட்டுப்பாடு ஏற்படாத சூழலை உருவாக்குவது, கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகள், எதிர்கால செயல் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, ”குறுவை சாகுபடி தொடங்கி உள்ள நிலையில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் உரிய நேரத்தில் கிடைத்திட செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்கள் முறையாக கிடைப்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தி உள்ளார். அதன் அடிப்படையில் தான் விவசாயிகள் வெளிச்சந்தையில் கூடுதல் விலைகொடுத்து வாங்கும் சூழலை களைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்படும் விவசாய கடன்களை பொறுத்தவரை சென்ற ஆண்டைவிட 2 மடங்கு கூடுதலாக வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ள அளவும் கடந்த ஆண்டைவிட 2 மடங்காக உள்ளது.
குறிப்பாக உரங்களை பொருத்தவரை விவசாயிகளின் மொத்த தேவையில் 25 சதவீதம் மட்டுமே கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்படுகிறது. அதனை 50 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் 100 சதவீத தேவையை பூர்த்தி செய்யவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “ரேஷன் கடைகளுக்கு பணியாளர்களை தேர்வு செய்யும் நடைமுறையை நிறைவு செய்ய நீதிமன்றம் 6 மாத கால அவகாசம் வழங்கி உள்ளது. இருப்பினும் 6 மாதங்களுக்கு முன்பே அந்த நடைமுறைகள் முடிக்கப்பட்டு, பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கூட்டுறவு சங்கங்களில் 136 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து உரிய ஆய்வுசெய்து, ஆதாரங்களின் அடிப்படையில் முறையான நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும்.
கூட்டுறவு வங்கிகளில் தனியார் துறைகளுக்கு இணையாக யுபிஐ உள்ளிட்ட டிஜிட்டல் சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற நடவடிக்கைகளால் மக்கள் மத்தியில் நம்பிக்கை அதிகரித்துள்ளது.
எனவே கூட்டுறவு சங்கங்களின் வைப்பு நிதி 80 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. அதனை ஒரு லட்சம் கோடியாக அதிகரிக்க திட்டமிட்டு பணியாற்றி வருகிறோம். கூட்டுறவு சங்கங்களுக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்கும் நடவடிக்கை நடந்து முடிந்துள்ளது.
ஒரு சில சங்கங்களில் அதில் பொறுப்பில் இருக்கும் நிர்வாகிகள் புதிய உறுப்பினர்களை சேர்க்க இணக்கம் காட்டாமல் இருந்துள்ளனர். அதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
மாநிலம் முழுவதும் உள்ள சுமார் ஆயிரத்து 300 கூட்டுறவு சங்கங்களில் குறிப்பிட்ட அளவு சங்கங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளது. அதோடு விரைவில் பதவிக்காலம் முடியவுள்ள சங்கங்களுக்கும் சேர்ந்து வரும் ஆகஸ்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும்” என்று கூறினார்.
சாதி பாகுபாடின்றி வழிபாடு… திருமாவளவன் கோரிக்கை!
பேனா நினைவுச் சின்னம் : மத்திய அரசு அனுமதி!