ஆளுநரை அவதூறாக விமர்சித்த திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக ஆளுநரின் செயலாளர் சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு என்பதற்கு பதில் தமிழகம் என அழைக்க வேண்டும் என ஆளுநர் ரவி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் உரையாற்றிய ஆளுநர், சில பகுதிகளை தவிர்த்து பேசினார்.
அதனால் அவருக்கு எதிராக முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்த நிலையில், தேசிய கீதம் இசைக்கப்படும் முன் சட்டமன்றத்தில் இருந்து ஆளுநர் வெளியேறினார்.
இந்த பின்னணியில், சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஆளுநர் ஆர்.என் ரவி பற்றி அவதூறாகவும் கொச்சையாகவும் பேசினார்.
இந்த வீடியோவை பார்த்த பலரும் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கி திமுக தலைமைக் கழகம் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டது.
இதையடுத்து, ஆளுநர் ரவி பற்றி அவதூறு பரப்பும் வகையில் கொச்சையாகவும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது, இந்திய தண்டனை சட்டம் 124 (ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்தல்) பிரிவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று,
ஆளுநர் மளிகையின் துணை செயலாளர் பிரசன்னா ராமசாமி சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இணையவழியிலும், தபால் மூலமாகவும் புகார் வழங்கப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநரின் செயலாளர், திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், கிருஷ்ணமூர்த்தியை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கலை.ரா
2006ல் கணவர் 2023ல் மனைவி: பலியான பைலட் தம்பதி!
ஈரோடு கிழக்கில் போட்டியிடப் போவது யார்? – கூட்டணி கட்சிகளுடன் அதிமுக ஆலோசனை!