குவிந்த கண்டனங்கள்: சர்ச்சை பதிவை நீக்கிய அமைச்சர்!
பாஜகவினரின் கண்டனத்தை தொடர்ந்து பிரதமர் மோடியை விமர்சித்த பதிவை அமைச்சர் மனோ தங்கராஜ் டெலிட் செய்துள்ளார்.
நாட்டின் புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். தமிழ் வேத மந்திரங்கள் முழங்க, பிரார்த்தனைகளுடன் புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.
புதிய நாடாளுமன்றத்தில் மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு அருகில் செங்கோலும் நிறுவப்பட்டது. இதனை திருவாவடுதுறை ஆதீனம் பிரதமரிடம் வழங்கினார். செங்கோல் நிறுவப்படுவதற்கு முன்னதாக பூஜைகள் நடைபெற்றன.
பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த செங்கோலுக்கு முன்பு பிரதமர் மோடி நெடுஞ்சாண்கிடையாக தரையில் விழுந்து வணங்கினார். அப்போது தமிழகத்தில் இருந்து சென்ற ஆதீனங்கள் வரிசையாக நின்று பிரதமர் மோடிக்கு ஆசி வழங்கினர்.
இதுகுறித்த புகைப்படத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “’ மூச்சு இருக்கா?? மானம் ?? ரோஷம் ??” என குறிப்பிட்டிருந்தார்.
பிரதமரை இப்படி கடுமையாக விமர்சித்ததால் கொந்தளிப்பான பாஜகவினர் அமைச்சருக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர். சிலர் அமைச்சரை ஒருமையில் பேசியும் பதிவிட்டுள்ளனர்.
பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டி, “ஒழுங்கா நாளைக்கு அறிவாலயத்தில் போய் ஒளிஞ்சிக்க” என்று ஒருமையில் பதிவிட்டுள்ளார்.
மேலும், ”வரும் ஜூன் 4 ஆம் தேதி கன்னியாகுமரியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும். உங்களுக்கு மானம் ரோஷம் மூச்சு இருந்தா நிப்பாட்டுங்க பாப்போம்” என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார் அமர் பிரசாத் ரெட்டி.
மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி, “இறைவனை வணங்க இப்படி இருப்பதில் தவறில்லை. உதவி கேட்க வந்தவர்களிடம் எப்படியோ இருக்க முயற்சித்ததாக செய்தி வந்தும் மானம், ரோஷம், வெட்கம், சூடு, சுரணை இல்லாமல் இன்னும் மூச்சு இருக்கிறதே?
அமைச்சர் மனோ தங்கராஜ் பிரதமர் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தரக்குறைவாக பதிவிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அந்த நபரை அமைச்சர் பொறுப்பிலிருந்து அகற்றுவதோடு, கைது செய்து தகுந்த தண்டனை பெற்று தர வேண்டியது தமிழக முதலமைச்சரின் கடமை மற்றும் பொறுப்பு” என்று குறிப்பிட்டுள்ளார்.
மாநில பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், “மாநிலத்தின் அமைச்சர் மனோ தங்கராஜ் நாட்டின் பிரதமரை மத ரீதியாக புண்படுத்துகிறார்.
இந்து மத நம்பிக்கையாளர்களின் மனம் புண்பட செய்கிறார். மத சார்பற்ற தன்மைக்கு எதிராக செயல்படுகிறார். பதவிப்பிரமாண உறுதி மொழியை காற்றில் பறக்க விட்டு விட்டார்
முதலமைச்சர் உடனடியாக இவரை மந்திரி சபையில் இருந்து நீக்க வேண்டும். கவர்னர் உடனடியாக இதை முதல்வரின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
அனைத்து மக்களும் கட்சிகளும் பத்திரிகைகளும் அமைச்சர் மனோ தங்கராஜ் செய்கையை கண்டிக்க வேண்டும்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாஜகவினரிடம் இருந்து கண்டனங்கள் குவிந்த நிலையில் அமைச்சர் தனது பதிவை நீக்கியுள்ளார்.
பிரியா
மல்யுத்த வீராங்கனைகளுக்கு அடுத்த ஷாக் கொடுத்த டெல்லி போலீஸ்!
”150 வயசு வரைக்கும் இருப்பேன்: ட்ரோல் ஆகும் நாட்டாமை!