டெல்லியில் பாஜகவும், ஆம் ஆத்மியும் முட்டி மோதிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக சொல்லப் போனால் பாஜகவுக்கும், டெல்லி துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியாவுக்குமான போர்தான் முற்றியுள்ளது.
சமீபத்தில் சிபிஐ ரெய்டு வேட்டையால் சுற்றி வளைக்கப்பட்டார் மனிஷ் சிசோடியா. பாஜக, மனிஷ் சிசோடியாவை எதிரியாக பார்ப்பதே இந்த ரெய்டுக்கு காரணம் என குற்றம்சாட்டுகிறது ஆம் ஆத்மி தரப்பு.
2024 மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு நேரடி போட்டி ஆம் ஆத்மிதான் என்று மிரட்டி வரும் இந்த மனிஷ் சிசோடியா யார்?
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பக்கபலமாக கூடவே இருக்கும் ஒரு நபர் என்றால் அது மனிஷ் சிசோடியா.
பாஜகவில் இணைந்து கொள்ளுமாறு தனக்கு அழைப்பு வந்த போதுகூட நோ சொல்லிவிட்டதாக கூறியிருந்தார்.
என்னுடைய அரசியல் குருவே கெஜ்ரிவால்தான், அவருக்கு துரோகம் செய்ய மாட்டேன் என கூறியதில் இருந்தே இருவருக்கும் இடையிலான உறவை தெரிந்து கொள்ளலாம்.
ஆம் ஆத்மியின் கிருஷ்ணன் அரவிந்த் கெஜ்ரிவால் என்றால், மனிஷ் சிசோடியாதான் அர்ஜூனன் என்று கொண்டாடுகிறார்கள் கட்சியினர்.

உத்தரப் பிரதேசத்தை பூர்வீகமாக கொண்ட மனிஷ் சிசோடியா அரசியலில் அடியெடுத்து வைப்பதற்கு முன்பு பத்திரிகையாளராகவும், சமூக ஆர்வலராகவும் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர்.
1997ல் இருந்து 2005 வரை ஜீ நியூஸில் ரிப்போர்ட்டராக பணியாற்றியிருக்கிறார்.
சமூக ஆர்வலராக பயணத்தை தொடங்கிய போதுதான் அவருக்கு கெஜ்ரிவாலுடன் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது.
2011ம் ஆண்டு ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்தார் அன்னா ஹசாரே.
அப்போது அன்னா ஹசாரே மீது மட்டுமல்ல, அவருடன் இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் மீதும் இந்தியாவின் பார்வை விழுந்தது.
அதேபோல் இந்த பிரச்சாரத்தில் அதிகம் பேசப்பட்ட இன்னொரு நபர் மனிஷ் சிசோடியா.
2012ம் ஆண்டு ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற அமைப்பில் சிறு பிரச்னை ஏற்படும் போது அதில் இருந்து விலகி தனிக்கட்சியை தொடங்குகிறார் அரவிந்த் கெஜ்ரிவால். அப்போது அவருக்கு துணையாக நின்ற ஒருவர் மனிஷ் சிசோடியா.
2013ம் ஆண்டு தேர்தலிலேயே பாஜகவுக்கு போட்டியாக அதிகமான இடங்களில் வென்று காட்டியது ஆம் ஆத்மி.
டெல்லியில் ஆம் ஆத்மி பொறுப்பில் இருக்கும் போதெல்லாம் நம்பர் 2 இடம் மனிஷ் சிசோடியாவுக்குதான்.
2015ல் டெல்லி அமைச்சரவையில் அவருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டது. நிதி, சுற்றுலாத்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை என முக்கிய துறைகள் அவரது வசம் இருந்தது.
2020ம் ஆண்டு மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்த போது கல்வித்துறை மனிஷ் சிசோடியா வசம் சென்றது.
கடந்த 2 ஆண்டுகளாக கல்வித்துறையில் நடக்கும் மாற்றம் சர்வதேச அளவிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.
அதற்கு காரணம் டெல்லி மாடல் பள்ளிகள். மனிஷ் சிசோடியாவின் சிந்தனையில் உதித்த திட்டம்தான் இது.
தனியார் பள்ளிகளுக்கு இணையாக அனைத்து வசதியுடன் ஸ்மார்ட் வகுப்புகளாக மாறியது அரசுப் பள்ளிகள். நவீன டேபிள், சேர், புரொஜெக்டர், ஸ்மார்ட் போர்டுகள் என அட்டகாசமாக மாறியது அரசுப் பள்ளிகள்.
ஆய்வகங்கள், மைதானங்கள், நீச்சல் குளங்கள் என அதிரடியாக அப்டேட் ஆனது. அதேபோல் 10 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வழிகாட்டியாக செயல்படும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதனால் ஆசிரியர் பட்டப்படிப்பு முடித்தாலே கட்டாயம் வேலை கிடைக்கும் என்ற நிலையும் உருவானது.

இப்படி பல மாற்றங்கள் செய்து தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிகளை நோக்கி மாணவர்களை வரவழைத்தார் மனிஷ் சிசோடியா.
கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி டெல்லி சென்ற தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூட இந்த திட்டத்தை பாராட்டியிருந்தார்.
டெல்லியில் உள்ள அரசு மாடல் பள்ளியை போல தமிழகத்திலும் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.
டெல்லி அரசுப் பள்ளிகளை நேரில் பார்வையிட்ட அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப்பின் மனைவி மெலானியா ட்ரம்ப், டெல்லி அரசை பாராட்டியிருந்தார்.
அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் மனிஷ் சிசோடியா குறித்து முழுநீள கட்டுரை வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.
டெல்லியில் கல்வியில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாடுகள் குறித்தும் அதற்கு பின்னணியில் இருந்த மனிஷ் சிசோடியா குறித்தும் பாராட்டி எழுதப்பட்டிருந்தது.
இந்தநிலையில் மதுபான உரிமம் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி மனிஷ் சிஷோடியா மீது வழக்கு பதியப்பட்டது.
அவரது வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. மேற்குறிப்பிட்ட செய்தியை பொய்யாக்க வேண்டும் என்ற பதற்றத்தில் அவசர அவசரமாக இந்த ரெய்டு நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டியது ஆம் ஆத்மி தரப்பு.
ஒரு பக்கம் டெல்லி கல்வித்துறையில் செய்யும் அதிரடி மாற்றங்களால் மனிஷ் சிசோடியாவுக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நேரத்தில், மற்றொரு பக்கம் சிபிஐ, அமலாக்கத்துறை என ரெய்டால் நெருக்கப்படுகிறார்.
எது எப்படி இருந்தாலும் பாஜகவுக்கு நாங்கள்தான் போட்டி என்ற மனிஷ் சிசோடியாவின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
ஆர்.ஜெயப்ரியா
Comments are closed.