225 எம்.பி.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்!
சிட்டிங் எம்.பி.க்கள் 514 பேரில் 225 பேர் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாக தேர்தல் உரிமை அமைப்பான ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏடிஆர்) தெரிவித்துள்ளது.
2024 மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஏடிஆர் அமைப்பு 2019ல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சிட்டிங் எம்.பி.யாக உள்ளவர்கள் மீதான கிரிமினல் வழக்குகள், கல்வித் தகுதி, சொத்துவிவரம் ஆகியவற்றை வெளியிட்டுள்ளது.
இவர்கள் தேர்தலுக்காக தாக்கல் செய்த வேட்புமனுக்களை ஆய்வு செய்து இந்த தரவுகளை வெளியிட்டுள்ளது.
அதில், “மொத்தமுள்ள 514 எம்.பி.களில் 44 சதவிகிதம் அதாவது 225 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளது. கொலை, கொலை முயற்சி, கடத்தல் என 149 எம்.பி.க்கள் மீது தீவிர குற்ற வழக்குகள் உள்ளன.
இதில் 9 பேர் மீது கொலை வழக்கும், 28 பேர் மீது கொலை முயற்சி வழக்கும், 16 பேர் மீது பாலியல் வழக்கு உட்பட பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளும் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கட்சி ரீதியாக, பாஜகவைச் சேர்ந்த 87/294, காங்கிரஸைச் சேர்ந்த 14/46, திமுகவைச் சேர்ந்த 7/24, திரிணமூல் காங்கிரஸைச் சேர்ந்த 4/19, ஐக்கிய ஜனதா தள கட்சியை சேர்ந்த 8/16, ஒய்எஸ்ஆர் காங்கிரசைச் சேர்ந்த 7/17 பேர் மீது வழக்குகள் உள்ளன.
அதிக சொத்துகள் கொண்ட எம்.பி.க்கள்…
மத்தியப் பிரதேசம், சிந்துவாரா தொகுதி காங்கிரஸ் எம்.பி.யான நகுல்நாத் அதிக சொத்துகளை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். அவருக்கு 660 கோடிக்கும் அதிகமாக அசையும் மற்றும் அசையா சொத்துகள் இருப்பதாக தனது வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.
அடுத்ததாக அதிக சொத்துகள் கொண்ட எம்.பி.களில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரின் சகோதரரான பெங்களூர் ஊரக தொகுதி எம்.பி டி.கே.சுரேஷ் குமார் இரண்டாவது இடத்தில் உள்ளார். அவருக்கு 338 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகள் உள்ளன.
அடுத்ததாக ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த சுயேட்சை எம்.பி. கனுமுரு ரகு ராம கிருஷ்ண ராஜு 325 கோடிக்கும் அதிகமான சொத்துகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
மொத்தம் 25 எம்.பி.க்கள் 100 கோடிக்கும் அதிகமான சொத்துகளுடன் பில்லியனர்களாக உள்ளனர் என ஏடிஆர் அறிக்கை தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
தேர்தல் பணிக்கு வராத 1,500 ஊழியர்களுக்கு நோட்டீஸ்!
Thalaivar171: படத்தின் கதை இதுதான்?