திமுக – மார்க்சிஸ்ட்:  அனல் பறந்த வாக்குவாதம் முடிவுக்கு வந்ததா? 

Published On:

| By Aara

12 மணி நேர வேலை சட்டத்தை திமுக அரசு திரும்பப் பெற்ற பின்னரும்  திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கட்சிக்கும் இடையிலான கருத்துப் பரிமாற்றங்கள் அனலை கிளப்பின. அந்த வெப்பம் இன்றைய முரசொலி மூலம் லேசாக தணிக்கப்பட்டிருக்கிறது. 

ஏப்ரல் 21 ஆம் தேதி சட்டமன்றத்தில் 12 மணி நேர வேலை சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து திமுக கூட்டணிக் கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகியவை இந்த விவகாரத்தில் திமுக அரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கத்தினரை ஒருங்கிணைத்து  போராட்டங்களை அறிவித்தன.

இந்நிலையில் சில தினங்களிலேயே இந்த சட்டத் திருத்தம்  நிறுத்தி வைக்கப்படுவதாக முதலமைச்சர் அறிவித்தார். மேலும் மே 1 ஆம் தேதி  இந்த சட்டத் திருத்தம் திரும்பப் பெறப்படுகிறது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தனது மே தின உரையில் குறிப்பிட்டார். அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியானது.

cpm tk rangarajan may day speech

இந்த நிலையில் மே தின கூட்டத்தில் கோயம்பேட்டில் பேசிய மார்க்சிஸ் கம்யூனிஸ்டு கட்சி மத்திய குழு உறுப்பினரும் முன்னாள் எம்பியுமான டி.கே.ரங்கராஜன்,

“தமிழகத்தை திமுக ஆட்சி செய்கிறதா அல்லது அதிகாரிகளும் முதலாளிகளும் ஆட்சி செய்கிறார்களா?  திமுக அரசு தொடர்ந்து இருக்க வேண்டுமானால் இந்த சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்த அதிகாரிகளையும் பணியில் இருந்து விடுவிக்க வேண்டும்” என்று பேசினார். இது அக்கட்சியின் அதிகாரபூர்வ ஏடான தீக்கதிர் இதழில் மே 3 ஆம் தேதி வெளிவந்தது.

இதைக் கண்டதும் திமுக தரப்பில் இருந்து சிலர் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு, ‘சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற்ற பின்னரும் ஒரு கூட்டணிக் கட்சி இப்படியெல்லாம் வரம்பு மீறி பேசுவது அழகல்ல. இதனால் தலைவர் மன வருத்தத்தில் இருக்கிறார். எதிர்க்கட்சிகள் கூட செய்யாததை தோழமைக் கட்சிகள் செய்யலாமா?” என்று கேள்வி எழுப்பினர்.

cpm tk rangarajan may day speech

அதுமட்டுமல்ல மே 4 ஆம் தேதி முரசொலியில், ‘சிபிஎம்மை தவறாக வழி நடத்துவது யார்?’ என்ற தலைப்பில் முதல்வருக்கு நெருக்கமான ஊடகவியலாளர் ப. திருமாவேலனின் கட்டுரை வெளிவந்தது.

அதில்,  ”கூட்டணியில் இருந்துகொண்டே பொத்தாம் பொதுவாக நாலாந்தர பேச்சாளர் போல  பொதுவெளியில் கூச்சலிடுவதுதான்  கூட்டணி தர்மமா? இப்படி ஒரு அவதூறு குற்றச்சாட்டை  கூட்டணிக் கட்சியான சிபிஎம் தனது அதிகாரப்பூர்வ ஏட்டில் தலைப்பு போட்டு வெளியிடலாமா?

திமுக அரசை அதிகாரிகள் தவறாக வழி நடத்துகிறார்கள் என்ற தவறான தகவலை டிகேஆருக்கு சொன்னவர்கள் யார்?  எதை வைத்து அவர் சொல்கிறார்? எந்த முதலாளி இந்த ஆட்சியை நடத்துகிறார்?  டிகே ஆர் இதனைச் சொல்ல வேண்டும்.  தமிழ்நாடு சிபிஎம் கட்சியை யாரோ தவறாக வழி நடத்துகிறார்கள் என்பதுதான் நம்முடைய சந்தேகம்.

இந்த ஆட்சி தொடர்ந்து இருக்க வேண்டுமானால்…  என்று சொல்லும் தகுதியோ யோக்யதையோ டி.கே.ஆர்.போன்றோருக்கு இல்லை” என்று அந்த எச்சரிக்கைக் கட்டுரை முடிந்தது.

cpm tk rangarajan may day speech

அதே நாள் (மே 4)  தீக்கதிரிலே,  “நேற்றைய தீக்கதிர் (3.5.2023) 5ஆம் பக்கத்தில் வெளியான தோழர் டி.கே.ரங்கராஜன் மே தின உரையில் சில பகுதிகள் தவறான பொருளில் அமைந்து விட்டது.

’பாஜக அல்லாத மாநில அரசுகளை ஒன்றிய பாஜக அரசு சீர்குலைக்க முயல்கிறபோது மாநில திமுக அரசை  பாதுகாக்க வேண்டும் என்று விரும்பு கிறவர்கள் நாங்கள். மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்ப தற்காக இணைந்து போராடி வரு கிறோம். ஆனால் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தொழில்துறை தொடர்பான சட்டம் இந்த அரசை ஆத ரிக்கும் கட்சிகளுக்கும் கூட நெருடலை  ஏற்படுத்தியது.

இத்தகைய சட்டங்களை கொண்டு வரும்போது விரிவான ஆலோசனை நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது எங்கள் கருத்து. இந்நிலையில் தொழிற்சங்கங்களும், தோழமைக் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகளும் சுட்டிக் காட்டிய நிலையில், இந்தச் சட்டம் நிறுத்தி  வைக்கப்பட்டதும், பின்னர் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டதும் வர வேற்கத்தக்க ஒன்று’  என்பதே டி.கே.ரங்கராஜன் உரையில் மையக் கருத்தாக அமைந்திருந்தது என்பதை தெரி வித்துக் கொள்கிறோம்” என்று விளக்கம் வெளியிடப்பட்டது.

இதையடுத்து இன்று மே 5 ஆம் தேதி முரசொலியில், ‘தீக்கதிர் ஏட்டுக்கு ஓர் விளக்கம்’ என்ற பெயரில்  முரசொலி ஆசிரியர் வெளியிட்ட பத்தியில், 

cpm tk rangarajan may day speech

“தீக்கதிர் தந்துள்ள விளக்கத்துக்கு நன்றி.  பாஜக அரசின் சர்வாதிகாரப் போக்குக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் நின்று செயல்பட வேண்டும் என்ற குறிக்கோளில்  செயல்படும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில்  இயங்கும் அரசு கொண்டுவந்த தீர்மானத்தை  தோழமைக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் கருத்துக்கேற்ப  உடனடியாக ஒத்தி வைத்தது.

மட்டுமன்றி அதைத் திரும்பப் பெற்றுவிட்டதாகவும் அறிவித்த நிலையில்  தீக்கதிர் ஏட்டில் வெளியான டி.கே.ரங்கராஜனின் பேச்சு தேவையற்ற ஒன்று என்பதால் திருமாவேலன் எழுதிய  விளக்கக் கட்டுரை முரசொலியில் வெளியிடப்பட்டது.

தோழமை என்பது சுட்டிக்காட்டி தவறுகளைத் திருத்துவதாக அமைய வேண்டுமே தவிர,  வேகமாகத் தட்டிவிட்டு  பின்னர் தடவிக் கொடுப்பதாக  அமைந்துவிடக் கூடாது. சுயமரியாதை என்பது  கழகக் கூட்டணியின் அடித்தளம்.  நடந்தவை நடந்தைவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

-வேந்தன்

வரலாறு காணாத உச்சம்: தங்கம் விலை நிலவரம்!

இயல்பு நிலைக்கு திரும்பும் மணிப்பூர் கலவரம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share