எந்த ஒரு மொழியையும் விரும்பி கற்றுக்கொள்வதில் தவறில்லை. ஆனால், எந்த ஒரு மொழியையும் திணிப்பதை தமிழகம் ஏற்காது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் இன்று (பிப்ரவரி 18) தெரிவித்துள்ளார்.. cpm shanmugam says dont
தேசிய கல்வி கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி கட்சி சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பாக இன்று (பிப்ரவரி 18) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தலைவர் காதர்மொகிதின், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன், மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் பேசும்போது,”மத்திய பாஜக அரசு தமிழகத்தை பல்வேறு வகைகளில் வஞ்சித்து வருவதை நாம் அறிவோம். ஒரே நாடு, ஒரே தலைவர் என்பதன் தொடர்ச்சியாக தான் இப்போது ஒரே நாடு, ஒரே கல்வி என்ற தேசிய கல்வி கொள்கையை முன்வைத்துள்ளனர்.
மாநிலங்களின் ஒன்றியம் தான் இந்தியா என்பதையே மறந்துவிட்டு அவர்களுக்கென்று ஒரு தனி தேசத்தை ஆண்டுகொண்டிருப்பது போல, தாங்கள் நினைப்பதையெல்லாம் நடைமுறைப்படுத்துகிற முயற்சியில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது.
இந்திய அரசியல் சாசனம் மாநிலங்களுக்கு வழங்கியிருக்கக்கூடிய உரிமைகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், தன்னிச்சையாக அவர்கள் செயல்படுவதை தமிழகம் ஒருபோதும் அனுமதிக்காது என்பதை வெளிப்படுத்தும் வகையில் தான் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
எந்த ஒரு மொழியையும் விரும்பி கற்றுக்கொள்வதில் தவறில்லை. பல மொழி வல்லுநர்கள் நம்முடைய தமிழகத்தில் ஏராளமானோர் இருந்திருக்கிறார்கள். ஆனால், எந்த ஒரு மொழியையும் திணிப்பதை தமிழகம் ஏற்காது.
வட மாநிலங்களில் பலவற்றில் ஒரு மொழி கொள்கை தான் நடைமுறையில் இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் இருமொழி கொள்கை இருக்கிறது. தமிழகம் ஒப்பீட்டளவில் கல்வியில் முதன்மையான இடத்தில் இருக்கிறது என்பதை மத்திய அரசே ஏற்றுக்கொள்கிறது.
கல்வியில் முன்னேறிய நிலையில் இருக்கும் தமிழகத்தில், இன்னொரு மொழியை கட்டாயப்படுத்துவது என்பது வன்மையான கண்டனத்திற்குரியது. இத்தகைய போக்கை மத்திய பாஜக அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். cpm shanmugam says dont