கள்ளக்குறிச்சி மாணவி: திமுக அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் சரமாரி கேள்விகள்!

அரசியல்

“கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணத்தின் விசாரணையில் தீவிரம் காட்டுவதற்குப் பதிலாக, காவல்துறை பள்ளியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்த விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது” என மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிகுலேசன் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி, ஜூலை 13ம் தேதி மர்மமான முறையில் மரணமடைந்ததை அடுத்து, கலவரம் வெடித்தது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர், இன்று (ஜூலை 27) உயிரிழந்த ஸ்ரீமதியின் பெற்றோர்களையும், அவரது தரப்பு வழக்கறிஞர்களையும், அப்பகுதி மக்களையும் நேரடியாக சந்தித்து நிலைமைகள் மற்றும் விபரங்களை கேட்டறிந்தனர்.

அதன்பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன், ”பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, மாணவியின் மரணம் தற்கொலையாகவோ, மாடியிலிருந்து குதித்து இறந்துள்ளதாகவோ முடிவுக்கு வர முடியவில்லை. அம்மரணத்தில் பல மர்மங்கள் இருப்பதாகவும், மாணவி பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் வலுவாக எழுகிறது. மேலும் காவல் துறையினர் உரிய விசாரணை நடத்தாதது, மாணவியின் மரணத்திற்கான காரணத்தை மறைப்பதற்கும், குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகவே கருத வேண்டியுள்ளது. தற்போது, சிபிசிஐடி நடத்திய விசாரணையில் தாளாளர் மற்றும் பள்ளி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புலன் விசாரணை வேண்டும்!

மேலும் சிபிசிஐடி பாரபட்சமின்றி முழுமையான புலன் விசாரணை மேற்கொண்டு மாணவியின் மரணத்திற்கு உண்மையான காரணத்தையும், அதில் சம்பந்தப்பட்டுள்ள குற்றவாளிகளையும் தாமதமின்றி கைது செய்ய வேண்டும். மேலும், விசாரணையை தாமதப்படுத்திய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட வேண்டும்.
இந்த விசாரணையில் தீவிரம் காட்டுவதற்கு பதிலாக, காவல்துறை பள்ளியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்த விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. இது சரியல்ல. இந்தச் சம்பவங்கள் தொடர் கதையானால் பள்ளிக்குச் செல்லும் மாணவிகளுக்கு பாதுகாப்பு இருக்காது. ஆகையால், மாணவியின் மரணம் குறித்த விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும்.

மேலும், இந்த பள்ளியில் ஏற்பட்ட வன்முறை சம்பவமும்கூட மாணவியின் மரணத்திற்கான தடயங்களை அழிக்கும் நோக்கோடு நடைபெற்றுள்ளதா என்பதை காவல்துறை விசாரித்து உறுதிசெய்ய வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு அவர்களை விடுதலை செய்வதுடன், அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும். உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ. 50 லட்சம் நிவாரணமும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கிட வேண்டும். இப்பள்ளியில் பயின்றுவரும் 3,500க்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வியை தொடர்வதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தீக்கிரையான சான்றிதழ்கள் விரைந்து கிடைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்றார்.

ஜெ.பிரகாஷ்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *