திமுக வெளிச்சத்தில் நாங்கள் இல்லை… முரசொலிக்கு மார்க்சிஸ்ட் புதிய செயலாளர் பெ.சண்முகம் பதில்!

Published On:

| By Selvam

திமுகவின் வெளிச்சத்தில் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்று திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி சொல்வது பொருத்தமற்றது என்று மார்க்சிஸ்ட் புதிய மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெ.சண்முகம் இன்று (ஜனவரி 5) தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாநில மாநாடு ஜனவரி 3-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்த மாநாட்டில் தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மாற்றப்பட்டு புதிய மாநில செயலாளராக மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் என்று மின்னம்பலத்தில் இன்று நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். அதன்படி, புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்தெடுக்கப்பட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெ.சண்முகம், “மதவெறி மத்திய பாஜக அரசு, மாநில அரசுகளின் அதிகாரங்களை பறிப்பது, நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுவது, மாநில அரசியல் சாசனம் வழங்கியிருக்ககூடிய அடிப்படை உரிமைகளுக்கு மாறாக நடந்துகொள்வது போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

மத்திய பாஜக அரசின் இத்தகைய கொள்கைகளுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலிமைமிக்க போராட்டத்தை முன்னெடுக்கும். மத்திய அரசின் தாராளமய பொருளாதார கொள்கையின் விளைவாக, வேலைவாய்ப்பும், விலைவாசி உயர்வும் அனைத்து பகுதி மக்களையும் பாதித்துள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மதவெறி சக்திகளை எதிர்ப்பதில் திமுகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து பயணிக்கும். அதேநேரத்தில், தமிழகத்தில் நவீன தாராளமயமாக்க கொள்கையை அமல்படுத்துகிறோம் என்ற பெயரில் மக்களுடைய வாழ்க்கையை பாதிக்கக்கூடிய வகையில் மாநில அரசு எடுக்கக்கூடிய நடவடிக்கைகளுக்கு எதிராக ஜனநாயகப்பூர்வமாக எங்களுடைய போராட்டம் தொடரும்” என்றார்.

தொடர்ந்து தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமெர்ஜென்சி அமலில் உள்ளதா என்று கே.பாலகிருஷ்ணன் பேசியது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பெ.சண்முகம், “ஊர்வலம், ஆர்ப்பாட்டம் போன்றவை இந்திய அரசியல் சாசனம் இந்திய மக்களுக்கு வழங்கியிருக்கிற அடிப்படையான உரிமை. அடிப்படையான உரிமைகளை மறுப்பதற்கு எந்த அரசிற்கும் உரிமை இல்லை. எங்கள் கட்சியின் மாநில மாநாட்டின் பேரணிக்குக் கூட காவல்துறை அனுமதி கொடுக்காததால் தான் எங்களது கண்டனத்தை தெரிவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது” என்று தெரிவித்தார்.

கே.பாலகிருஷ்ணன் பேச்சுக்கு தோழமைக்கு இலக்கணம் அல்ல என்று முரசொலியில் இன்று வெளியான கட்டுரை குறித்து பேசிய பெ.சண்முகம், “திமுகவுடன் பல நேரத்தில் நாங்கள் உறவோடு இருந்திருக்கிறோம். பல நேரங்களில் எதிர்வரிசையில் இருந்திருக்கிறோம். திமுகவால் தான் எங்களுக்கு வெளிச்சம் கிடைக்கிறது என்பதெல்லாம் அதீதமான வார்த்தை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் பிரச்சனைகளுக்காக சமரசமற்ற போராட்டத்தை நடத்துவதன் மூலமாக தான் மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க கட்சியாக இருக்கிறது. திமுகவின் வெளிச்சத்தில் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்கிற முறையில் திமுக தலைமை சொல்வது என்பது பொருத்தமல்ல” என்றார்.

செல்வம்

அறிவாலயம் டூ கோட்டை… கனிமொழி பிறந்தநாளில் சலசலப்பு போஸ்டர்கள்!

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராகிறார் பெ.சண்முகம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share