மத்திய அரசின் 8 ஆண்டுக்கால நாசகர ஆட்சியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழகம் முழுவதும் 2022 ஆகஸ்ட் 20 முதல் 30 வரை, பிரச்சாரம் நடத்த இருக்கிறது.
இதைத் தொடர்ந்து செப்டம்பர் 5, 2022 அன்று சென்னையில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற இருப்பதாக அக்கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (ஆகஸ்ட் 17) வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இந்தியா தனது சுதந்திரத்தின் பவள விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறது.
சுதந்திர நாளைக் கொண்டாடுங்கள் என வேண்டுகோள் விடுத்து கொண்டே, மோடி தலைமையிலான பாஜக அரசு, சுதந்திர போராட்டத்தின் மரபுகளை, விழுமியங்களை முற்றாக சிதைத்துக் கொண்டிருக்கிறது.
அரசியல் சாசனத்தின் அடிப்படை அம்சங்களான ஜனநாயகம், மதச்சார்பின்மை, பன்மைத்துவம், கூட்டாட்சி, பொருளாதார சுயசார்பு ஆகிய அனைத்தும் மோடி ஆட்சியில் தகர்க்கப்படுவதோடு, ஒரு முழுவீச்சிலான எதேச்சாதிகார பாதையில் பயணப்படுகிறது.

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றப்பட்ட திட்டங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கிற போது பெரும் ஏமாற்றங்கள் நிறைந்ததாகவும், எட்டு ஆண்டு கால ஆட்சியில் எட்டாத இலக்குகளைக் கொண்டதாகவும் கடந்து போயிருக்கிறது என்பதே உண்மை.
ஒட்டுமொத்தத்தில் மோடி அரசு தொழில், விவசாயம், சேவைத்துறை எனஅனைத்து துறைகளிலும் படுதோல்வியடைந்துள்ளது. பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி.யால் லட்சக்கணக்கான சிறு-குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை, மானியம் கிடைக்காமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.
விவசாய நிலங்களை கார்ப்பரேட் கம்பெனிகளிடம் ஒப்படைக்க துடித்து வருகின்றனர். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகள் வரலாறு காணாத வகையில் உயர்த்தப்பட்டு தனியார் எண்ணெய் நிறுவனங்கள் கொள்ளையடித்து வருகின்றன.
மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியவாசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் சொல்லொணா துயரங்களுக்கு ஆளாகியுள்ளனர். புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் கல்வியை தனியாருக்கு தாரை வார்த்து ஏழை, எளிய மக்கள் உயர் கல்வி பெற முடியாத வகையில் சீரழித்துள்ளது.

ஆகஸ்ட் 20 முதல் 30 வரை, பிரச்சாரம்
அக்னிபாத் எனும் திட்டத்தின் மூலம் இந்திய ராணுவத்தை கான்ட்ராக்ட் ராணுவமாக பலவீனப்படுத்துகிறார்கள். பணமயமாக்கல் எனும் பெயரால் வங்கி, இன்சூரன்ஸ், ரயில்வே, மின்சரத்துறை உள்ளிட்டு நாட்டின் நவரத்தினங்களாக திகழும் பொதுத்துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு தனியாருக்கு தாரை வார்த்து வருகின்றனர்.
பழங்குடி மக்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் சட்டத்திருத்தங்களை கொண்டு வந்து அவர்களின் நிலங்கள் பறிக்கப்படுகின்றன. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள், சிறுபான்மை மக்கள் தாக்குதல்களுக்கும், படுகொலைகளுக்கும் ஆளாகி வருகின்றனர்.
குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களால் சிறுபான்மை மக்கள் குறி வைத்து தாக்கப்படுகின்றனர். சுயநல அரசியல் லாபத்திற்காக மதவெறி நடவடிக்கைகளை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே மதம் என இந்தியாவின் பன்முகத்தன்மையை சீரழித்து வருகின்றன. இவற்றைக் கண்டித்தும் இந்தியாவின் இருள் அகற்றவும், மோடி ஆட்சிக்கு முடிவு கட்டவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் 2022 ஆகஸ்ட் 20 முதல் 30 வரை, பிரச்சாரம் நடத்த இருக்கிறது.
இதைத் தொடர்ந்து செப்டம்பர் 5, 2022 அன்று சென்னையில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது.
இதற்கு தமிழக மக்கள் பேராதரவு தர வேண்டும்” என அதில் தெரிவித்துள்ளார் கே.பாலகிருஷ்ணன்.
ஜெ.பிரகாஷ்