இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-இன் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் நேற்றும், இன்றும் (பிப்ரவரி 20, 21 ) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன்படி மத்திய அரசை கண்டித்தும் , மாநில உரிமைகளை வலியுறுத்தியும் ‘மாநில உரிமைகள் பாதுகாப்பு’ மாநாட்டை சென்னையில் நடத்துவதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் பல்லாயிரக்கணக்கான இடங்களில் தெருமுனை கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில்களையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க வலியுறுத்தி சிபிஐ (எம்) சார்பில் கோவையில் சிறப்பு மாநாடு நடத்தப்படும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களும், தொழிலாளர்களும் பெருமளவில் பங்கேற்க வேண்டுமென்று மாநிலக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.
கன்னியாகுமரியில் செயல்பட்டு வந்த ஹைந்தவ சேவா சங்கத்தை தடை செய்துள்ள இந்து சமய அறநிலைத்துறைக்கும், தமிழ்நாடு அரசுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு பாராட்டு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வை உடனடியாக வழங்கிட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. மின்வாரியத்தில் 58 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில் ஆரம்பகட்ட பதவிகளை நிரப்பிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
மகளிருக்கான உரிமைத்தொகையை முதல்வர் அறிவிப்பார்: அமைச்சர் உதயநிதி பரப்புரை !
ஈரோடு கிழக்கு: இரவில் தொடங்கியது பணப்பட்டுவாடா!