ஜார்கண்ட் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்ட சம்பாய் சோரன் ஆட்சியமைக்க அம்மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.
நில மோசடி தொடர்பான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில், ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் கடந்த ஜனவரி 31-ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து தனது முதல்வர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார். புதிய முதல்வராக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மூத்த தலைவரும், போக்குவரத்து துறை அமைச்சருமான சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டார்.
இதனைதொடர்ந்து, ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து 48 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் ஆட்சியமைக்க சம்பாய் சோரன் உரிமை கோரினார்.
இருப்பினும் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தரப்பில் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கவில்லை. இதனால் ஆளுநர் மாளிகையில், சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து ஆட்சியமைப்பதற்கான தனது கோரிக்கையை ஏற்குமாறு சம்பாய் சோரன் நேற்று வலியுறுத்தினார்.
இந்தநிலையில், ஜார்கண்ட் மாநிலத்தில் ஆட்சியமைக்க சம்பாய் சோரனுக்கு ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று இரவு அழைப்பு விடுத்துள்ளார்.
ஜார்கண்ட் புதிய முதல்வராக சம்பாய் சோரன் இன்று பதவியேற்பார் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேவேளையில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணிக்கு 48 எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கும் நிலையில், தனது கட்சி எம்.எல்.ஏக்களை பாதுகாக்க சம்பாய் சோரன் தலைமையிலான ஜேஎம்எம் கட்சி தற்போது போராடி வருகிறது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை!
அமலாக்கத்துறை கைது நடவடிக்கையை எதிர்த்து ஹேமந்த் சோரன் தரப்பில் ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அந்த மனுவை வாபஸ் பெற்று உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கானது நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, சுந்தரேஷ், பேலா திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று காலை 10.30 மணிக்கு விசாரணைக்காக பட்டியலிடப்பட்டுள்ளது.
ஹேமந்த் சோரன் தரப்பில், மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனுசிங்வி, அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ அகியோர் வாதங்களை முன்வைக்க உள்ளனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சென்னையில் மூன்று புதிய தொழில்நுட்ப பூங்காக்கள்!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!