கோடான கோடி பக்தர்களின் உணர்வு சார்ந்த விஷயத்தில் அரசியல் செய்யக் கூடாது என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் திருப்பதி லட்டுவில் மாட்டுக் கொழுப்பு கலந்திருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியிருந்தார்.
இதுதொடர்பாக விசாரணை கோரி சுப்பிரமணிய சுவாமி உள்ளிட்ட 4 பேர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு இன்று (செப்டம்பர் 30) நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், “இந்த விவகாரம் உலகம் முழுவதும் வாழும் கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வு தொடர்பானது. திருப்பதி லட்டுவில் கலப்படம் நடந்ததற்கான உறுதியான ஆதாரம் இல்லை.
குற்றச்சாட்டுகள் குறித்து அரசு ஏற்கனவே சிறப்பு குழு விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது. இருப்பினும் இதுதொடர்பாக அறிக்கையை பகிரங்கமாக பொதுவெளியில் வெளியிட வேண்டிய அவசியம் என்ன?” என்று கேள்வி எழுப்பினர்.
கலப்படம் செய்யப்பட்டதற்கு முதல்வரிடம் ஏதேனும் உறுதியான ஆதாரம் உள்ளதா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நீங்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை தெளிவானதாக இல்லை. ஆய்வு மாதிரியில் பயன்படுத்தப்பட்ட நெய்தான் லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டது என இதில் குறிப்பிடப்படவில்லை” என்றும் குறிப்பிட்டனர்.
அரசியலமைப்பு பதவியில் இருக்கும் ஆந்திர முதல்வர் குறைந்தபட்சம் கடவுளை அரசியலில் இருந்து தள்ளி வைத்திருக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பான ஆய்வு முடிவுகள் ஜூலை மாதம் வருகிறது ஆனால் செப்டம்பர் மாதம் அறிக்கையை வெளியிட்டது ஏன்?” என்று தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வழக்கு விசாரணையை வரும் வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
200 பில்லியன் கோடீஸ்வரர்கள் பட்டியலில் ஸக்கர்பர்க்… எல்லாம் உங்க புண்ணியம்தான்!