திருப்பதி லட்டில் விலங்குகள் கொழுப்பு கலக்கப்பட்டது என்ற சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டுக்கு ஜெகன்மோகன் ரெட்டி பதிலளித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில், பிரசித்திபெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்குகளின் கொழுப்பு கலந்திருந்ததாக தற்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆய்வறிக்கையிலும் இது உறுதி செய்யப்பட்டது.
இதற்கு தேவஸ்தானத்தின் முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பா ரெட்டி மறுப்பு தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டை தீவிரமாக விசாரிக்க வேண்டும். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவரான ஓய்.எஸ் ஷர்மிளா கோரிக்கை வைத்தார்.
இந்தசூழலில் திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக தேவஸ்தானம் இன்று மாலைக்குள் விரிவாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டு குறித்து முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று (செப்டம்பர் 20) செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில்,
“நிர்வாக குறைபாட்டை மறைக்க திசை திருப்பும் செயலாக சந்திரபாபு நாயுடு இவ்வாறு குற்றம்சாட்டுகிறார். மழை வெள்ள பாதிப்பு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை மறைக்க இவ்வாறு கூறுகிறார்.
அவரது ஆட்சியில் எல்லா துறைகளும் மோசமாக செயல்பட்டு வருகிறது. எனது ஆட்சிக் காலத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை.
சந்திரபாபு நாயுடு பொய்யான குற்றச்சாட்டை முன்வைக்கிறார். மோசமான அரசியலுக்கு கடவுளை பயன்படுத்துகிறார். மக்களை திசை திருப்ப லட்டு தொடர்பான கதைகளை அவிழ்த்துவிடுகிறார்.
6 மாதத்துக்கு ஒருமுறை நெய் கொள்முதல் செய்ய டெண்டர் விடுவது வழக்கமான நடைமுறை. இதில் எங்கள் ஆட்சியில் எந்த மாற்றமும் செய்யவில்லை.
முந்தைய சந்திரபாபு நாயுடு ஆட்சியில் 15 முறையும், எனது ஆட்சியில் 18 முறையும் தரமற்ற நெய் நிராகரிக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவிலான அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே நெய் கொள்முதல் செய்யப்படும். ஒவ்வொரு நெய் டின்களும் 3 கட்ட பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். மாதிரி பரிசோதனை சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னரே கோயிலுக்குள் அனுமதிக்கப்படும்.
ஒரு முதலமைச்சர் கோயில் பிரசாதத்தில் மாமிச கொழுப்பு கலந்திருப்பதாக சொல்வது நியாயமா? பக்தர்களின் உணர்வுகளில் விளையாடுவது சரியா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கிடையே திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பதாக சந்திரபாபு நாயுடு கூறியது குறித்து நீதிமன்றக் கண்காணிப்பில் விசாரணை நடத்தக் கோரி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெள்ளிக்கிழமை ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு வரும் 25ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
அதேசமயம் லட்டில் கலப்படம் செய்யப்பட்டதாக எழுந்த குற்றசாட்டு தொடர்பாக விரிவான விசாரணை அறிக்கையை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா கேட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
பேஜர் வெடிப்புக்கு பின்னணியில் வயநாட்டுக்காரர்? அதிர வைக்கும் தகவல்கள்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 15 நபர்கள் மீது குண்டாஸ்!