கொரோனா வைரஸ்: லண்டனிலிருந்து ஒரு கடிதம் 3
முரளி சண்முகவேலன்
தொற்று நோயின் ஆங்கிலப் பதம் Communicable Disease அல்லது Trasmittable Disease. ஒருவர் அடுத்தவரோடு அருகிலிருந்து பழகும்போது தொற்றிக் கொள்ளும் நோய். ஐரோப்பிய மொழிகளில் தொற்று நோய் என்ற சொல்லின் பதம், மற்ற நபர்களின் தொடர்பு இருந்தால் ‘தொற்றிக் கொள்ளும்’ என்பதை அடிப்படையாகக் கொண்டது. உதாரணமாக பிரெஞ்சில் Maladie Transmissible. இத்தாலியில் Malattie Trasmissibili. ஸ்பானியலில் Enfermedad Contagiosa.
விலகியிருந்தால்தான் தொற்றை அழிக்க முடியும் என்ற ஐரோப்பியப் புரிதலை அவர்களின் மொழிகளிலேயே பார்க்கலாம். சமூக இடைவெளி (Social Distancing) என்பது இன்றைய காலத்துக்கேற்ற அரசியல் சரித்தன்மை கொண்ட பதம். வரலாற்றின்படி சமூக ‘விலக்கமே’ – இடைவெளி அல்ல – தொற்று அழிப்புக்கான வழி என்பது ஐரோப்பிய வரலாற்று அறிவு.
தொற்று நோய் பேரிடர் என்ற பதத்தில், அடைத்துவைக்கப்பட்டுள்ள சமூக விலக்கம் என்னும் பொதுப்புத்தி மருத்துவ அறிவைத் தாண்டியது. தொற்று நோயை வெல்லும் அரசின் உத்திகளும் மக்களின் நடத்தைகளும் சமூக அரசியல் பண்புகள் கொண்டவை. அதனாலேயே சமூக இடைவெளி போன்ற விதிகள் நம்மில் உள்ள சமத்துவமின்மையை – அதாவது நம்மில் ஊறியிருக்கும் சமூக ‘விலக்க’ப் பண்பை வெளிக்கொண்டு வருகிறது. சமூக இடைவெளி என்ற அரசியல் சரித்தன்மை கொண்ட பதம், சமூக விலக்கத்தையே உண்டாக்குகிறது. ஐரோப்பிய வரலாறு சொல்லும் பாடமும் மக்களைச் சமூகதளத்தில் இருந்து பிரித்து வைப்பதின் மூலம் மட்டுமே தொற்றை அழிக்கலாம் என்பதாகும்.
இம்மாதிரியான பல வகையான தொற்று நோய்களைக் கொள்ளை (Plague) நோய் என்று ஐரோப்பிய வரலாறு பொதுவாக வகைப்படுத்தி உள்ளது. கொள்ளை நோயின் தொற்று பற்றிய குறிப்புகளை ஐரோப்பியத் தொன்மங்களில், இலக்கியத்தில், மத வழிபாடுகளில், கவிதைகளில் பார்க்கலாம். நம்மூரில் பெரியம்மைக்கும் மாரியம்மாவுக்கும் இருக்கும் தொடர்பு போல. கிறிஸ்துவ விவிலியத்தில் 100க்கும் மேலான இடங்களில் கொள்ளை நோய் பற்றி குறிப்புள்ளது. ஒரு சமூகத்தில் அநீதிகள் அதிகரிக்கும்போது கொள்ளை நோயின் பேரிடர் அறச் சீற்றமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது.
பெரியம்மை, காலரா போன்ற கொள்ளை நோய்கள் விஷக்காற்றினால் ஏற்படுகிறது என முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஐரோப்பிய விஞ்ஞானிகள், அரசர்கள், மத குருமார்கள் நம்பினர். மியாஸ்மா கோட்பாடு (Miasma Theory – கிரேக்க மொழியில் மியாஸ்மா என்றால் மாசு எனப் பொருள்) என்ற இந்த ‘அறிவியலை’ ஐரோப்பியர்களும் சீனர்களும் நம்பினர்.
இன்றைக்கும் ஹாலிவுட் படங்களில் எகிப்திய மம்மிகளின் உக்கிரம் பற்றி விவரிக்க பகல் திடீரென இருட்டி ஊழிக்காற்று ஊருக்குள் பரவுவதையும் அப்போது அக்காற்றைச் சுவாசிக்கிற அனைவரும் இறந்துவிடுவது மாதிரியான காட்சி அமைப்புகள் உண்டு. நிற்க.
கொள்ளை நோய் ஒழிப்புக்கான ஐரோப்பியர்களின் தொற்று நோய் ஒழிப்பு வரலாறு, ஆவணங்களின்படி 2000 வருடங்கள் பழைமையானது. 10ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் வெவ்வேறு காலகட்டங்களில் மருத்துவ அறிவியல் வளர்ச்சி பெற்றிருந்தபோதிலும் 2000 வருடங்களாகக் கொள்ளை நோயை எதிர்கொள்ள மக்களிடம் ஏற்பட்ட இன மத அரசியல், உளவியல் ரீதியான காரணங்கள், அறிவியலையும் தாண்டி சமூகத்தில் வேரூன்றி உள்ளது.
உதாரணமாக, கொள்ளை நோய் பாதிக்கப்பட்டிருக்கும் நகரங்களுக்குள் அந்நியர்களுக்கு அனுமதி கிடையாது. கொள்ளை நோயின்போது பிற மத, நிற, இனத்தவர்களை நகரங்களும் நாடுகளும் அனுமதிக்க மறுப்பதை மருத்துவ வரலாற்றாசிரியர்களின் (Medical Historians) மருத்துவ மானுடவியலாளர்களின் (Medical Anthropologists) கட்டுரைகளில் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
கொள்ளை நோய் நேரத்தில் வெளிநாட்டவர்களின் மேல் பரிவோ, அக்கறையோ அதிகம் கிடையாது. ஏனெனில் அவர்கள் தொற்று நோய் கொண்டு வரலாம்.
கடல் பிரயாணம் செய்பவர்களையும், கப்பல் தொழிலாளர்களையும் கடலிலேயே நிறுத்தி விடுவர். இன்றும் ஒரு லட்சம் பேர் உலகம் முழுவதும் கப்பல்களில், படகுகளில் தத்தளித்துக் கொண்டு இருக்கின்றனர். இந்தக் கப்பல் மனிதர்கள் எந்த நாட்டிலும் அடியெடுத்து வைக்க அனுமதி இல்லை.
இன்றைய மருத்துவ அறிவியலின் வளர்ச்சியின்படி இவர்களைக் கரைக்குப் பாதுகாப்பாக அழைத்து வந்து தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கலாம். சோதனை செய்யலாம். அதற்குப் பதிலாக அவர்கள் தங்கள் கப்பல்களிலேயே அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். உணவு, கச்சா எண்ணெய் கொண்டுவரும் சில கப்பல்களின் முதலாளிகள், தொற்று ஒழியும் வரை இத்தொழிலாளர்களை வேலை செய்யுமாறும் கரைக்கு வரக் கூடாது என்றும் உத்தரவிட்டிருக்கிறார்கள். இந்தக் கொள்கைகள் வெறும் மருத்துவ ரீதியானது அல்ல – வரலாற்று, அரசியல், பொருளாதாரக் காரணங்கள். மக்களின் சமூகத் தொடர்புகளை ஊரடங்குகளின் மூலமாக நிறுத்தினால் மட்டுமே தொற்று நோயை ஒழிக்க முடியும் என்பது ஐரோப்பியப் பொதுப்புத்தி.
ஓர் அரசின் ஊரடங்கு வெளியாரை அனுமதிக்காது. உள்ளூர் குடிகளைக் கண்காணிக்க மிகையான அதிகாரத்தை அரசு தனது கையில் எடுத்துக்கொள்ளலாம் என்பது ஐரோப்பாவின் கொள்ளை நோய் வரலாற்றில் இருந்து தெரியவருகிறது. இதற்கான தரவுகளை பிரெஞ்சு தத்துவவியலாளர் மிஷேல் ஃபூக்கோ ‘கீழ்ப்படிதலும் தண்டனையும்’ (Discipline and Punish) என்ற புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.
பிரெஞ்சு அரசாங்கத்தின் வன்சன்ஸ் ராணுவ ஆவணக் காப்பகத்தில் உள்ள 1516ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டுள்ள ஆவணக் குறிப்புகள் பண்டைய கால ஐரோப்பிய ஊரடங்குகளின் தொடர்ச்சியே சம கால ஊரடங்குகள் என்பது தெளிவாகிறது. விலக்குதல், நோயுற்றவர்களைத் தனிமைப்படுத்துதல், அவர்களைத் தனிக் குடியிருப்புகளுக்கு மாற்றி மருத்துவ வசதி இன்றி மரணிக்க விடுதல் எல்லாம் இன்றும் தொடர்கிறது.
உதாரணமாக, 70 அல்லது 80 வயதுக்கு மேலான முதியவர்களைக் கண்டுகொள்ளாமல்விட்டால்தான் பிரிட்டனின் நேஷனல் ஹெல்த் சர்வீஸானது கொரோனா தொற்றைச் சமாளிக்க முடியும் என்ற அரசின் உத்தி மீடியாக்களில் கசிந்தபோது மக்களிடையே மிகப் பெரிய அதிர்ச்சி அலை எழுந்தது. டெக்ஸாஸ் மாகாணத்தின் துணை கவர்னர் டான் பாட்ரிக் வயதானவர்களின் உடல்நலத்தைவிட அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியே முக்கியம் என்றார். தொற்று நோய் பரவலை ஒழிப்பதற்கு மக்களின் சமூகத் தொடர்பை, அன்றாட வாழ்வியலை நிறுத்த வேண்டும். அப்படி நிறுத்துவதினால் பல வறியவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதும், பலர் மரணிப்பதும் தவிர்க்க முடியாது போன்ற சிந்தனைகளுக்கு, அரசியல் கொள்கைகளுக்கு ஆயிரமாண்டு வரலாறு உள்ளது. இந்தச் சிந்தனையின் நீட்சியே வயதானவர்கள் தொற்று நோயில் இறப்பதைத் தவிர்க்க இயலாது என நியாயப்படுத்துவது. தொற்று நோய்க் காலத்தில் யார் உயிர் வாழலாம் என்பதை மருத்துவத்தைக் காட்டிலும் அரசியலே தீர்மானிக்கிறது.
கொள்ளை நோய் காலத்தில் கீழ்ப்படியாதவர்களைத் தண்டிக்க அரசனுக்கும் அதிகாரிகளுக்கும் முழு உரிமை இருந்ததை பண்டைய மருத்துவ அறிவியல் வளராத ஐரோப்பாவில் ஒரு விதத்தில் புரிந்துகொள்ள முயற்சி செய்யலாம். ஆனால், பின்னாளில் ஏற்பட்ட அறிவியல் முன்னேற்றத்தால் மியாஸ்மா கோட்பாடு தகர்க்கப்பட்டு நோய்க் கிருமிக் கோட்பாடு (Germ Theory of Disease) உலக அளவில் ஏற்கப்பட்ட போதும் அரசின் அதிகாரம் பற்றியோ, கண்காணிப்பு பற்றியோ பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை.
10ஆம் நூற்றாண்டுகளில் நோய்க் கிருமிக் கோட்பாட்டின் தாக்கம் தொடங்கினாலும் 1850-களில் பிரெஞ்சு உயிரி விஞ்ஞானியான லூயி பாஸ்டரின் தடுப்பூசிக்கான உயிரியல் கோட்பாடுகள் நோய்க் கிருமிக் கோட்பாட்டை வலுப்படுத்தியது. இம்மருத்துவக் கோட்பாட்டின்படி மனித உடலுக்குள் நோய் எதிர்ப்பு (வாக்ஸின்) மருந்தைச் செலுத்துவதன் மூலம் தொற்றை எதிர்த்துப் போராட தேவையான நோய் எதிர்ப்புத் தன்மையை மனித உடலில் உருவாக்கிட முடியும்.
ஆனால் உமிழ்நீர், தும்மல் அல்லது இருமல் மூலமாக ஒருவரிடமிருந்து மற்றவருக்கு வெளியேறும் கண்ணுக்குத் தெரியாத உயிரிகளால் காற்றின் மூலம் மற்றவர்களின் உடலில் நுழைந்துவிடும் என்பது போன்ற தகவல்களால் மக்களிடம் பீதி, பயம், கலக்கமே மேலோங்கி நிற்கிறது. எனவே உயிர் காக்கும் பொருட்டும் அரசிடம் தங்களுடைய உரிமையை அடகு வைக்கத் தயாராக உள்ளனர். விளிம்புநிலை மக்களுக்கு இழக்க எதுவும் இல்லாததால் இப்படிப்பட்ட அரசு அதிகாரக் குவிப்பை ஆதரிப்பவர்கள், நடுத்தர மக்கள் மற்றும் செல்வந்தர்கள்.
ஒருவர் ஜனநாயகத்தில் நம்பிக்கைக்கொண்டிருந்தாலும், எந்தக் குற்றத்துக்கும் மரண தண்டனை தீர்வல்ல – மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்று வாதிட்டாலும் தொற்று நோய் காலத்தில் உண்டாகும், ‘உருவாக்கப்படும்’ உயிர் பயம் அவரது சமூக அரசியலின் விழுமியங்களை நிர்ணயிக்கிறது. ஒருவரது லௌகீக இருப்பு கேள்விக்குள்ளாகும்போது ஜனநாயக விழுமியங்கள் ரத்து செய்யப்பட்டு அரசுகள் எதேச்ச அதிகாரம் கொண்ட ஓர் இயந்திரமாக உருப்பெறுகிறது. இதையே பயோபாலிட்டிக்ஸ் (Biopolitics) என்று மிஷேல் ஃபூக்கோ கருத்தாக்கம் செய்தார்.
பயோபாலிட்டிக்ஸின் மற்றொரு முக்கியப் பண்பு சராசரி மனிதனின் விழுமியங்கள், நம்பிக்கைகள் தொற்று நோய் காலத்தில் மறைந்து போவதுதான். உதாரணமாக தொற்று நோயின் காரணமாக வாடிகனில் பொதுமக்களுக்கான ஈஸ்டர் பிரார்த்தனைகள் நிறுத்தப்பட்டன. ஹஜ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கவில்லை. திருக்கல்யாணம் இணையத்தில் காட்டப்படும். இதை ஆத்திக மனம் – இறைமை நம்மைக் காப்பாற்றுமே என்கிற மாதிரியான எந்த ஓர் எதிர்க் கேள்வியும் கேட்காமல் ஏற்றுக்கொள்கிறது. இதுதான் பயோபாலிட்டிக்ஸ்.
இந்த பயோபாலிட்டிக்ஸ், ஐரோப்பிய அரசுகளின் அதிகாரங்களை தற்போது அதிகரித்துள்ளது. உலகெங்கும் உள்ள வலது சாரி அரசுகளின் வெறுப்புக் கூச்சல்களையும் அதிகரித்துள்ளது. இத்தாலியத் தத்துவ அறிஞரான ஜியார்ஜியோ அகாம்பென் தனது நாடு உள்ளிட்ட ஐரோப்பிய மற்றும் மேற்குலக நாட்டு ஜனநாயக அரசுத் தலைமைகளிடையே எதேச்சாதிகாரம் குவிந்து வருவதை கவனப்படுத்தினார். முக்கியமாக தொற்று நோய் ஒழிப்புக்குப் பின் இந்த அதிகாரங்கள் குறைக்கப்பட்டு மக்களின் உரிமைகள் காக்கப்படுமா, அதற்கு என்ன உத்தரவாதம் என்ற முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார்.
உதாரணமாக, தொற்று நோய் ஒழிப்பின் ஒரு பகுதியாக மொபைல் செயலிகள், இணையம், தகவல் தொழில் நுட்பம் மூலமாக குடிமக்களின் மீது அதிகரித்துள்ள கண்காணிப்பு நடவடிக்கைகளை அரசு எப்போது நிறுத்தும். இந்தியா, பிரிட்டன் போன்ற பல நாடுகளில் இந்தச் செயலிகள் மூலமாக குடிமக்கள் தங்களை அரசின் கண்காணிப்புக்கு உள்ளாக்குவது ஒரு தேசியக் கடமையாக முன்வைக்கப்படுகிறது.
குடிமக்களின் மீதான அந்தரங்கக் கண்காணிப்புகளை சாதாரணப்படுத்துவதற்கும் வலது சாரி சிந்தனைகளுக்கும் இந்தப் பேரிடர் தொற்று நோய் (ஒழிப்பு) ஒரு சந்தர்ப்பமாக அமைந்து விட்டதாக இத்தாலியைச் சேர்ந்த மற்றொரு தத்துவவியலாளர் ரோக்கொ ரொன்ச்சி கருத்துத் தெரிவித்துள்ளார்.
உதாரணமாக, கொரோனா தொற்று முதலில் கண்டுபிடிக்கப்பட்ட சீனாவில் உள்ள வூஹான் நகரத்தில் (கம்யூனிச) அரசாங்கத்தின் ராணுவரீதியான ஒழிப்பு நடவடிக்கைகளை பல உலக நாடுகள் பாராட்டியுள்ளன. அதே வூஹான் நகரத்தில் உள்ள கண் மருத்துவர் லி வென்லியாங்க் இத்தொற்று குறித்து எச்சரிக்கை மணி அடித்தபோது சீன அரசு அவரை எச்சரித்து மீண்டும் பணிக்குச் செல்லுமாறு கட்டளையிட்டது. சென்ற இடத்தில் லீ தொற்று தாக்கி இறந்து போனார். ராணுவ வேக நடவடிக்கை உலக அளவில் பாராட்டுப் பெற்றபோது லீயின் மரணம் அதிகமாகப் பேசப்படவில்லை. நோயின் தீர்வு மருத்துவரின் அறிக்கையை அங்கீகரிப்பதில் அல்ல. அரசின் ராணுவத்தனமான அதிகார நடவடிக்கையில் இருப்பதை நாம் பார்க்க முடிகிறது.
தொற்று நோய்க் கிருமியை அரசியல் அதிகாரத்தால், கண்காணிப்பு பலத்தால், ஊரடங்கால் ஒழித்து விட முடியும் என்ற நம்பிக்கையை மக்களிடம் விற்றுவிட்டால் அரசு தன் அதிகாரத்தைப் பெருக்கிக் கொள்ள முடியும். அப்படிப்பட்ட அதிகாரத்தை இந்த நோய்ப் பேரிடருக்குப் பின்னரும் தக்கவைத்துக் கொள்ள முடியும். அகாம்பெனும் ரொன்ச்சியும் இது குறித்து கவலை தெரிவித்திருந்தாலும் பல மருத்துவ மானுடவியலாளர்கள் இப்படிப்பட்ட அதிகாரக் குவிப்பு தவிர்க்க முடியாதது என்பதை வரலாற்றிலிருந்து சுட்டிக்காட்டுகிறார்கள்.
கொரோனா தொற்றின் காரணமாக மேற்குலக ஜனநாயக அரசுகளின் அதிகாரங்கள் எந்த அளவு மாறிக்கொண்டிருக்கின்றன?
இது குறித்து அடுத்த கடிதத்தில்…
கட்டுரையாளர் குறிப்பு: முரளி ஷண்முகவேலன்
[முரளி ஷண்முகவேலன்](https://mobile.twitter.com/muralisvelan) – ஊடக மானுடவியல் ஆய்வாளர் – லண்டன் பல்கலைக்கழகம் – ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் & ஆஃப்ரிக்கன் ஸ்டடீசில் , சாதி மற்றும் தகவல்தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பவர்.
[லண்டனில் இருந்து ஒரு கடிதம்-1]
[லண்டனில் இருந்து ஒரு கடிதம்-2]