கோவை மாவட்டத்தில் இருக்கும் அனைத்து திமுக நிர்வாகிகளும் சென்னையில் இருக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜியின் க்ரீன்வேஸ் சாலை இல்லத்துக்கு செப்டம்பர் 23 ஆம் தேதி காலை 8.30 மணிக்கெல்லாம் வந்துவிட வேண்டும் என்று இரு நாட்களுக்கு முன்பே தகவல் அனுப்பப்பட்டது.
திமுக மாவட்டச் செயலாளர் தேர்தலில் கோவை மாவட்டத்தினர் மனு தாக்கல் செய்ய வேண்டிய தேதி செப்டம்பர் 23 என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில்தான், செந்தில்பாலாஜியிடம் இருந்தும் இந்த தகவல் நிர்வாகிகளுக்கு அனுப்பப்பட்டது. அதன்படி கோவை மாவட்ட நிர்வாகிகள் எல்லாம் 22 ஆம் தேதியே சென்னை வந்து சேர்ந்துவிட்டனர்.
திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் என்று ஹோட்டல்களில் தங்கிய அவர்கள், காலை 8 மணிக்கு செந்தில்பாலாஜி வீட்டை நோக்கி படையெடுத்துவிட்டனர். அனைவரையும் வரவேற்ற செந்தில்பாலாஜி, ‘முதல்ல எல்லாரும் டிபன் சாப்பிடுங்க’ என்று சொல்லியிருக்கிறார். 500 பேர் என்று எதிர்பார்த்த நிலையில் சுமார் ஆயிரத்துக்கும் நெருக்கமாக வந்துவிட்டனர். அவர்கள் அனைவருக்கும் காலை டிபன் செந்தில்பாலாஜி வீட்டிலேயே அளிக்கப்பட்டது.
கிட்டத்தட்ட திமுகவின் கோவை மாவட்ட பொதுக்குழு கூட்டம் போலவே இந்த கூட்டம் இருந்தது. தற்போதைய மாவட்டப் பொறுப்பாளர்களில் கார்த்திக் மட்டுமே வந்திருந்தார். மற்றவர்கள் வரவில்லை. மாவட்டப் பொறுப்பாளர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்ட டாக்டர் வரதராஜன் சைலன்ட் ஆகிவிட்டார்.
சேனாதிபதியோ, ‘எனக்கு இனி எந்த பொறுப்பும் வேணாம்’ என்று சொல்லிவிட்டார். பையா கிருஷ்ணனோ, ‘எனக்கு பணம் இருக்குது. தொழில் இருக்குது. அதை பாத்துக்கறேன்’ என்று நழுவிவிட்டார்.
மாவட்டப் பொறுப்பாளர்களாக இருந்தவர்கள் வரவில்லையே தவிர மற்ற ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள் என அனைவரும் திரண்டுவிட்டனர் செந்தில்பாலாஜி வீட்டில்.
அனைவரும் சாப்பிட்டதும் வீட்டிலேயே ஒரு கூட்டத்தை நடத்தினார் செந்தில்பாலாஜி. அவர் அருகே கோவை மாநகர் மாவட்டச் செயலாளராக இருக்கும் கார்த்திக், கோவை தெற்கு மாசெ ஆக இருக்கும் தளபதி முருகேசன், கோவை வடக்கு மாசெ ஆக இருக்கும் தொ.அ.ரவி ஆகியோர் இருந்தனர்.
கூடியிருந்தவர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, “என் வேண்டுகோளை ஏத்துக்கிட்டு இங்கே வந்த உங்க எல்லாருக்கும் நன்றி. இனி கோவை மாவட்ட திமுக வெற்றி நடைபோடணும். அதற்காகத்தான் மாவட்ட அமைப்புகள்லேர்ந்து மாவட்ட செயலாளர்கள் வரை மாற்றம் செய்திருக்கோம்.
இன்று கோவை மாவட்டத்துக்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் நாள் மட்டுமில்ல, நான் கரூருக்கும் மனு செய்ய வேண்டிய நாள்” என்று சொல்லிவிட்டு முதலில் தொண்டாமுத்தூர் ரவியை நிர்வாகிகளிடத்தில் அறிமுகப்படுத்தினார்.
இவர்தான் தொண்டாமுத்தூர் ரவி ஒன்றிய செயலாளர், கோவை வடக்கு மாவட்டத்துக்கு போட்டியிடுவார் என்று கூறினார். அடுத்து தளபதி முருகேசனை அழைத்து, ‘இவர்தான் தளபதி முருகேசன். இவர் கோவை தெற்கு மாவட்டச் செயலாளராக போட்டியிடுவார்’ என்று அறிவித்தார்.
அடுத்து முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக்கை அழைத்து, ‘இவர் உங்களுக்கெல்லாம் நல்லா அறிமுகமானவர்தான். கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளராக போட்டியிடுவார். இவங்களுக்கு உங்க ஆதரவு இருக்கும்னு எனக்குத் தெரியும். இனி கோவை மாவட்ட திமுக வெற்றிகரமா இயங்கணும்” என்று கூறினார் செந்தில்பாலாஜி.
பிறகு மாவட்டச் செயலாளர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களை வைத்தே அவரவர் மாவட்டத்துக்கான ஏற்கனவே தயாரிக்கப்பட்டு ஒப்புதல் பெற்ற நிர்வாகிகள் பட்டியலை வாசிக்கச் சொன்னார். ரவி, தளபதி முருகேசன், கார்த்திக் ஆகியோர் தங்கள் மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் பட்டியலை செந்தில்பாலாஜி முன்னிலையில் வாசித்தனர்.
அதன் பிறகு, “இப்ப பொறுப்புக்கு போட்டியிடுறவங்க நேரா அறிவாலயம் போய் மனு தாக்கல் செய்யலாம், புறப்பட்டு நீங்க அறிவாலயம் வந்துடுங்க. நானும் வந்துடுறேன்” என்று சொல்லி அனைவருக்கும் விடை கொடுத்தபோது மணி பத்துக்கு மேல் ஆகியிருந்தது.
செந்தில்பாலாஜியின் சொல்படியே அவரால் அவரது வீட்டில் அறிவிக்கப்பட்ட மூன்று மாவட்ட செயலாளர் வேட்பாளர்களும் அறிவாலயம் சென்று செந்தில்பாலாஜி முன்னிலையிலேயே வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
திமுக தலைவர், பொதுச் செயலாளர் மூலம் பட்டியல் முரசொலியில் வருவதற்கு முன்பே தன் வீட்டில் கூட்டம் நடத்தி பட்டியலை அறிவித்துவிட்டு அதன் பிறகுதான் வேட்பு மனுக்களையே தாக்கல் செய்ய வைத்திருக்கிறார் செந்தில்பாலாஜி.
-வேந்தன்
கோவை புது மாசெக்கள்: செந்தில் பாலாஜி போட்ட ஸ்கெட்ச்! மாசெ ஆகிறார்
முன்னாள் அமைச்சர் பழனியப்பன்: வலுவாகும் செந்தில்பாலாஜி கூடாரம்!