என்ஐஏ விற்கு கைமாறிய கோவை கார் வெடிப்பு வழக்கு

அரசியல்

கோவை கார் வெடிப்பு வழக்கு தமிழக போலீசாரிடம் இருந்து என்ஐஏ விற்கு மாற்றப்பட்டது.

கடந்த 23 ஆம் தேதி கோவை உக்கடம் அருகில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கார் வெடித்த சம்பவத்தில் ஜமேஷா முபீன் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது தொடர்பான விசாரணையில், இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்பதை அறிந்த போலீசார், முபீனுடைய வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 75 கிலோ வரையிலான வெடிமருந்து தயாரிக்க பயன்படும் வேதிப்பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் முபீன் என்ஐஏ-வினால் 2019 ஆம் ஆண்டு விசாரிக்கப்பட்ட தகவலும் கிடைக்கப்பெற, இது தொடர்பான விவரங்களையும் சேர்த்து விசாரணையை விரிவுப்படுத்தினர் கோவை காவல்துறையினர்.

மேலும், முபீன் பயன்படுத்திய காரை வாங்குவதற்கு உதவியதாக முகமது தல்கா (25) என்பவரையும், சம்பவம் நடப்பதற்கு முன் முபீனுடன் இருந்த முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) என ஐந்து நபர்களை கைது செய்துள்ளனர்.

இதில் முகமது தல்கா என்பவர் 1998-ம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அல் உம்மா இயக்க நிறுவனர் பாட்ஷாவின் தம்பி நவாஸின் மகன் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும், இது தொடர்பாக ஆறு நபர்களை பிடித்து விசாரித்து வரும் போலீசார், இது நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்பதை விசாரணையில் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் நடைபெற்ற அன்று மாலையே என்ஐஏ அமைப்பினர் இவ்வழக்கு தொடர்பான விவரங்களை நேரில் வந்து சேகரிக்க தொடங்கினர். இது குறித்த செய்தியை மின்னம்பலம் வெளியிட்டு இருந்தது.

ஒருபக்கம் என்ஐஏ வழக்கின் விவரங்களை சேகரிக்க, மறுபக்கம் மத்திய உளவுத்துறை அமைப்பான இன்டெலிஜென்ஸ் பீரோ வும் தங்கள் விசாரணையை தீவிரப்படுத்தியது. கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக மத்திய உளவுத்துறை, உள்துறை அமைச்சகத்துக்கு இதுவரை ஐந்து அறிக்கைகளை அளித்துள்ளது.

இவ்வழக்கு தொடர்பாக, மாநில உளவுத்துறையும் மத்திய உளவுத்துறைக்கு இவ்வழக்கின் தன்மை மற்றும் முன்னேற்றம் குறித்து மூன்றுக்கும் மேற்பட்ட அறிக்கைகளை அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தகவல்கள் அனைத்தும் என்ஐஏ விடமும் பகிரப்பட்டுள்ளது.

இதனிடையே இவ்விவகாரத்தில், தனக்கு கிடைத்த தகவல்களை பாஜக தலைவர் அண்ணாமலை, செவ்வாய்க்கிழமையன்று, கடிதமாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு எழுதியுள்ளதாக தெரிவிக்க, அன்று மதியமே கோவை போலீசார், கைது செய்யப்பட்ட ஐந்து பேரின் மீதும் உபா சட்டத்தை பாய்ச்சினர்.

இதற்கு மறுநாள், புதன்கிழமை (இன்று) என்ஐஏ வின் தென் மாநில பொறுப்பு அதிகாரியாக இருக்கும் டிஐஜி கே.பி. வந்தனா, எஸ்.பி ஸ்ரீஜித் அடங்கிய டீமுடன் கோவை பறந்து வந்தார்.

முதலில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணனை சந்தித்த டிஐஜி வந்தனா, இவ்வழக்கினை என்ஐஏ எடுத்துள்ளதாகவும், வழக்கின் ஆவணங்கள் மற்றும் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களை ஒப்படைக்குமாறு கோரினார். தங்கள் டி.ஜி யிடம் அனுமதி வாங்கி ஒப்படைப்பதாக பாலகிருஷ்ணன் தெரிவிக்க, கொஞ்சமும் காத்திருக்காமல், டிஐஜி வந்தனா டீம் கார் வெடிப்பு நடந்த இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும், உக்கடம் ஹவுசிங் போர்டில் உள்ள, இறந்துபோன முபீனுடைய உறவினர் அப்சர் கானின் வீட்டில் ஒரு என்ஐஏ டீம் சோதனை நடத்தியது.

இதற்கிடையே என்ஐஏ தனது விசாரணையை துவங்கிய தகவல் சென்னையில் உள்ள டி.ஜி.பி சைலேந்திர பாபுவிற்கு தெரிவிக்கப்பட, அத்தகவல் உள்துறை செயலர் வழியாக முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின், தலைமை செயலர் இறையன்பு, உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி, டி.ஜி.பி சைலேந்திர பாபு, உளவுத்துறை ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்டோர் அடங்கிய உயர்மட்ட பாதுகாப்பு கூட்டம் தொடங்கியது.

இந்த கூட்டத்தில் இவ்வழக்கை என்ஐஏ விடமே ஒப்படைப்பது எனவும், மேலும் எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்பட்டது.

இதன்பின் முதல்வர் அலுவலகத்திலிருந்து அறிக்கை வெளியாகியது. இதில் கோவை கார் வெடிப்பு வழக்கில் பன்னாட்டுத் தொடர்புகளும் இருக்க வாய்ப்புள்ளதால், இவ்வழக்கின் விசாரணையை என்.ஐ.ஏ வசம் ஒப்படைக்க முதல்வர் பரிந்துரை செய்துள்ளதாகவும்,

மாநிலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள், சம்பவங்கள் வருங்காலங்களில் நடைபெறாமல் தடுத்திடும் வகையில், காவல் துறையில் ஒரு சிறப்புப் படையை உருவாக்கவும், கோவை உட்பட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலும், மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய முக்கிய பகுதிகளிலும், கூடுதல் நவீன கண்காணிப்புக் கேமராக்களை விரைவில் பொருத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் தமிழகத்தில் உளவுப் பிரிவில் கூடுதல் காவல் துறை அலுவலர்களை நியமனம் செய்யவும், இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோரைப் பற்றியும், அவர்களோடு தொடர்பு வைத்திருப்பவர்களைப் பற்றியும் நுண்ணிய தகவல்களை அளிப்போருக்கு தக்க பாதுகாப்பினை வழங்கிடவும் அவர்களை ஊக்குவித்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதன் பின், கோவை போலீசார், உக்கடம் காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட வழக்கின் ஆவணங்களை என்ஐஏ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் இவ்வழக்கில் தாங்கள் ஏற்கனவே விசாரித்து வந்தவர்களின் தகவல்களையும் தமிழக போலீசார், என்ஐஏ அதிகாரிகளிடம் கொடுத்துள்ளனர்.

இவ்வழக்கில் ஏற்கனவே தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்ட ஐந்து போரையும் என்ஐஏ காவலில் எடுக்கவும், இவ்வழக்கின் விசாரணையை, என்ஐஏ வழக்குகளை விசாரிக்கும் சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றும் நடைமுறைகளை என்ஐஏ அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

  • வினோத் அருளப்பன்

தேவர் சிலை தங்க கவசம் – யாருக்கு அதிகாரம் : நீதிமன்றம் தீர்ப்பு!

இரட்டை குழந்தை விவகாரம்: விக்கி நயன்தாரா எஸ்கேப்… சிக்கிய மருத்துவமனை!

+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *