எடப்பாடியின் கூற்றை நீதிமன்றம் நிராகரித்துள்ளது: மனோஜ் பாண்டியன்

Published On:

| By Jegadeesh

எடப்பாடி பழனிசாமியின் கூற்றை நீதிமன்றம் நிராகரித்துள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் ஆதரவாளரும், வழக்கறிஞருமான மனோஜ் பாண்டியன் கூறியுள்ளார்.

பொதுக்குழு தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்திருந்த இடையீட்டு மனு மீது நேற்று தேர்தல் ஆணையம் பதிலளித்திருந்தது.

இந்தநிலையில், இன்று (பிப்ரவரி 3 ) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பை வாசித்தது.

அந்த உத்தரவில் ‘ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளரை முன்னிறுத்துவதற்கான இடைக்கால ஏற்பாடாக பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும்.

இந்த இடைக்கால ஏற்பாடு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு மட்டுமே. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளரை அதிமுக பொதுக்குழு முடிவு செய்ய வேண்டும். அதற்காக பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும். வேட்புமனுவில் இருவரும் இணைந்து கையெழுத்திட்டால் தேர்தல் ஆணையம் அதை தற்காலிகமாக அங்கீகரித்து விடப்போகிறது.

ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் நீக்கப்பட்டது இந்த பொதுக்குழுவில் செல்லாது. வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட முடிவை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனால் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கவேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும், ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த தீர்ப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் ஆதரவாளரும், வழக்கறிஞருமான மனோஜ் பாண்டியன் பேசுகையில்,

”அதிமுக இன்றைய சூழ்நிலையில் எடுத்துக்கொண்டால் ஒன்று ஓபிஎஸ், இன்னொன்று இபிஎஸ். இவர்களைத் தவிர்த்து வேறு தரப்பு என்பது அதிமுகவில் யாரும் இல்லை. ஓபிஎஸ் இரட்டை இலைக்காக கையெழுத்திடுவேன் என்று சொன்னதன் அடிப்படையில் இன்றைய தினம் இன்று (பிப்ரவரி 3 ) இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இடைக்காலப் பொதுச்செயலாளர் என்று கடந்த சில மாதங்களாக கூறிக்கொண்டு எங்களுக்கு அதிகாரங்கள் இருக்கிறது என்ற அவர்களின் (இபிஎஸ்) கூற்றுகளை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அவர்களுக்கு அந்த அதிகாரத்தை நீதிமன்றம் அளிக்கவில்லை. ஒன்றிணைந்த அதிமுகவே ஓ.பன்னீர் செல்வத்தின் நோக்கம்” என்று கூறியுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

சமரசத்துக்கு வந்த ஓபிஎஸ், மறுத்த ஈபிஎஸ்: உச்ச நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

இதான் கடைசி சான்ஸ் – கேஎல் ராகுலை எச்சரித்த முகமது கைப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel