சீமான் மீது நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரை ரத்து செய்ய கோரிய வழக்கை வரும் பிப்ரவரி 19ஆம் தேதி விசாரித்து அன்றே உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. court order in seeman vijayalakshmi case
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் 2011ல் புகார் அளித்தார்.
அதில், திருமணம் செய்து கொள்வதாக கூறி சீமான் என்னை ஏமாற்றிவிட்டார். என்னிடம் இருந்த பணம், நகையையும் பெற்றுக்கொண்டார்’ என்று தெரிவித்திருந்த நிலையில் இந்த புகாரின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மோசடி, நம்பிக்கை துரோகம், பாலியல் வன்கொடுமை என்று பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்தநிலையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சீமான், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், “2011ல் அளித்த புகாரை 2012ஆம் ஆண்டிலேயே திரும்பப் பெற்றுக் கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த கடிதத்தின் அடிப்படையிலும், விசாரணையின் அடிப்படையிலும், போலீசார் வழக்கை முடித்து வைத்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது” என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை ரத்து செய்வது தொடர்பாக விளக்கம் பெற விஜயலட்சுமி நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. ஆனால் அதற்கு பின் வழக்கு பட்டியலிடப்படவில்லை.
இந்நிலையில் இவ்வழக்கு இன்று (பிப்ரவரி 13) நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது இத்தனை ஆண்டுகளாக இவ்வழக்கு நிலுவையில் இருப்பது ஏன் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகிலன், “இது, இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 376 (பாலியல் வன்கொடுமை) பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு” என்று பதிலளித்தார்.
சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கர், இவ்வழக்கில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக வேண்டும் என்பதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கை வரும் பிப்ரவரி 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினமே வழக்கை விசாரித்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் கூறினார். court order in seeman vijayalakshmi case