எடப்பாடி பழனிசாமிக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

அரசியல்

எடப்பாடி பழனிசாமி பற்றி பேச அறப்போர் இயக்கத்துக்குத் தடை விதித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 23) மறுத்துவிட்டது.

அதிமுக ஆட்சியின்போது நெடுஞ்சாலைத் துறை டெண்டர் ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ. 692 கோடி இழப்பு ஏற்படுத்தி முறைகேடு நடந்திருப்பதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியது.

இதில் முன்னாள் முதலமைச்சரும், நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்குத் தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்திருந்தது.

இதுதொடர்பாக அறப்போர் இயக்கம் சமூக வலைதளங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகார் குறித்த செய்திகள் மற்றும் தகவல்களைப் பதிவிட்டிருந்தது.

இந்நிலையில் அறப்போர் இயக்கத்தின் இந்த செயல் தனது புகழுக்குக் களங்கம் விளைவிப்பதாகக் கூறி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனுவைக் கடந்த டிசம்பர் மாதம் விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமி குறித்துப் பேச அறப்போர் இயக்கத்துக்குத் தடை விதித்தது.

இதனை எதிர்த்து அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அதில், துறையின் அமைச்சர் என்ற முறையிலேயே எடப்பாடி பழனிசாமி மீது குற்றம்சாட்டப்பட்டது. தனி நபர் விமர்சனம் வைக்கவில்லை என தெரிவித்திருந்தது.

பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமி குறித்துப் பேசத் தடை விதிக்கப்பட்டிருப்பது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது ஷஃபிக் அமர்வு, தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டது.

மேலும், இம்மனு குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு பதிலளிக்கவும் நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.

பிரியா

தலையாரி பணி நியமனத்தை ரத்து செய்ய நேரிடும்: நீதிமன்றம் எச்சரிக்கை!

காயத்ரி கொடுத்த கீ: போராட்டத்தை அறிவித்த திருமா

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *