பாத யாத்திரைக்கும், ஷூட்டிங்கிற்கும் பயன்படுத்தும் சொகுசு கேரவன் வேன் ஒன்று நெல்லை நீதிமன்றத்தின் முன் வந்து நிற்க வழக்கறிஞர்கள் பரபரப்பாக அந்த வேனின் வாசலை நோக்கி ஓடினார்கள். போலீஸாரோ என்னாகுமோ ஏதாகுமோ என்ற பதற்றத்தோடு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இத்தனை களேபரங்களுக்கு மத்தியில்தான்… பனங்காட்டு படைக்கட்சியின் நிறுவன தலைவர் ராக்கெட் ராஜா நெல்லை நீதிமன்றத்தில் ஆகஸ்டு 8 ஆம் தேதி ஆஜரானார். கடந்த 2018 ம் ஆண்டு கொடியங்குளத்தை சேர்ந்த பேராசிரியர் செந்தில் குமார் என்பவர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கின் விசாரணைக்காகதான் ராக்கெட் ராஜா ஆஜரானார்.
யார் இந்த ராக்கெட் ராஜா?
நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் ராக்கெட் ராஜா. தென் தமிழகத்தின் பிரபல ரவுடியாக அறியப்பட்ட வெங்கடேஷ் பண்ணையாரின் உதவியாளராக இருந்தவர். வெங்கடேஷ் பண்ணையார் என்கவுன்ட்டருக்குப் பிறகு தென் மாவட்டத்தின் பிரபல ரவுடியாக மாறினார்.
பல்வேறு கொலை வழக்குகள் மற்றும் அடிதடி வழக்குகளில் கைதாகி பலமுறை சிறைக்கு சென்றுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னை காவல்துறை என்கவுன்ட்டர் செய்ய திட்டமிட்டு இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி இருந்தார்.
அடுத்த கட்டமாக பனங்காட்டுப்படை என்ற கட்சியை நிறுவி, அதன் தலைவராகவும் இருந்து வருகிறார். இதே நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவரும் நடமாடும் தங்கக் கடை என்று வர்ணிக்கப்படுவருமான ஹரி நாடார், ராக்கெட் ராஜா இருவரும் இணைந்து கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர் கொண்டனர்.
அப்போது ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட ஹரி நாடார், சுமார் 37 ஆயிரம் வாக்குகளை பெற்று தமிழ்நாடு முழுவதும் பனங்காட்டு படை கட்சியை திரும்பி பார்க்கச் செய்தார்.
ஆனால் தேர்தல் முடிந்த சில நாட்களில் பண மோசடி வழக்கு ஒன்றில் ஹரி நாடார் கர்நாடக போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அதேபோல் ராக்கெட் ராஜாவும் கொலை வழக்கு ஒன்றில் கைதாகி ஓராண்டுகளாக சிறையில் இருந்து விட்டு, சமீபத்தில் தான் ஜாமினில் வெளியே வந்தார்.
இந்த பின்னணியில்தான் கடந்த 2018 ம் ஆண்டு கொடியங்குளத்தை சேர்ந்த பேராசிரியர் செந்தில் குமார் என்பவர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கின் விசாரணைக்காக ராக்கெட் ராஜா நெல்லை நீதிமன்றத்தில் ஆஜரானார்.
பென்ஸ் கேரவன் வேனில் வந்து இறங்கிய ராக்கெட் ராஜா
ஆஜராக வந்தது என்னவோ கொலை வழக்கு . ஆனால் ஏதோ சினிமா சூட்டிங்கிற்கு வந்தது போல கேரளாவில் இருந்து பல லட்சம் ரூபாய் செலவு செய்து பென்ஸ் கேரவன் ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் வந்து இறங்கினார் ராக்கெட் ராஜா. ஐம்பதுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ராக்கெட் ராஜாவை சூழ்ந்துகொண்டனர்.
நெல்லை நீதிமன்றத்தில் ஏதோ சினிமா சூட்டிங் தான் நடக்கிறது என்று அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் இந்த வண்டியை கண்டதும் நீதிமன்றத்தில் குவிய தொடங்கினர்.
இதனால் நீதிமன்ற வளாகத்திற்குள் செல்லும் அனைத்து வாகனங்களையும் பொதுமக்களையும் போலீசார் நன்கு சோதனை செய்த பிறகு உள்ளே செல்ல அனுமதித்தனர்.
வழக்கின் விசாரணை செப்டம்பர் மாதம் 11 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், வழக்கறிஞர்கள் புடைசூழ வெளியே வந்த ராக்கெட் ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், “நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை. என் நோக்கமெல்லாம் 2026 ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடுவதுதான்” என்று தெரிவித்தார் ராக்கெட் ராஜா.
நெல்லை சரவணன்
விமானப்படையில் சேர ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!
ஜெயிலர் ரிலீஸ்: இமயமலை புறப்பட்டார் ரஜினி