பொருளாதார சீர்திருத்தங்களுக்காக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நாடு எப்போதும் கடன்பட்டுள்ளது என்று மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று (நவம்பர் 8) நடைபெற்ற டிஐஓஎல் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் நிதின் கட்கரி கொண்டார்.
அப்போது முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் பற்றிப் பேசிய கட்கரி, “1991 ஆம் ஆண்டு நிதியமைச்சராக இருந்தபோது மன்மோகன் சிங் தொடங்கிய பொருளாதார சீர்திருத்தங்கள் இந்தியாவிற்கு ஒரு புதிய திசையைக் கொடுத்தது. அது ஒரு தாராளமய பொருளாதாரத்திற்கு வழிவகுத்தது. இதற்காக நாடு எப்போதும் அவருக்குக் கடன்பட்டிருக்கிறது.
1990களின் நடுப்பகுதியில் மகாராஷ்டிராவில் அமைச்சராக இருந்தபோது, மன்மோகன் சிங்கால் தொடங்கப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் காரணமாக மகாராஷ்டிராவில் சாலைகள் அமைக்க என்னால் பணம் திரட்ட முடிந்தது. அவரின் தாராளமய பொருளாதாரக் கொள்கை என்பது விவசாயிகள் மற்றும் ஏழை மக்களுக்கானது” என்று புகழாரம் சூட்டினார்.
நாட்டின் வளர்ச்சிக்கு தாராளமயமான பொருளாதார கொள்கை எப்படி உதவும் என்பதற்குச் சீனா சிறந்த உதாரணம் என்று தெரிவித்த நிதின் கட்கரி, “இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்த அதிக முதலீடு தேவைப்படுகிறது. நெடுஞ்சாலைகள் அமைப்பதற்காகச் சாமானியர்களிடம் இருந்து நெடுஞ்சாலை ஆணையம் பணம் திரட்டி வருகிறது.
இந்தியாவில் 26 பசுமை சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது சாலை நுழைவு வரியாக ஆண்டுக்கு 40,000 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது. இது, 2024 ஆம் ஆண்டின் இறுதியில் 1.40 லட்சம் கோடியாக உயரும்” என்று கூறியுள்ளார்.
தற்போது பொருளாதார நெருக்கடியில் இந்தியா சிக்கித் தவிக்கிறது. இந்நிலையில், முன்னாள் பிரதமரின் பொருளாதார சீர்திருத்தங்கள் சிறப்பாக இருந்ததாக பாஜக அமைச்சர் கூறியிருப்பது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
பிரியா