நாட்டின் 15 ஆவது குடியரசு தலைவருக்கான தேர்தலின் வாக்கு எண்ணிக்கை டெல்லியில் நாடாளுமன்றத்தில் இன்று ( ஜூலை 21 ) 11 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
தற்போதைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிகாலம் வரும் 24 ஆம் தேதி முடிவடைய உள்ளது. அடுத்த குடியரசு தலைவருக்கான தேர்தல் கடந்த ஜூலை 18 ஆம் தேதி நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடிகளில் வாக்கு பதிவு நடைபெற்றது. இதில் பா.ஜ.க கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு மற்றும் எதிர் கட்சிகளின் பொதுவேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா போட்டியிட்டனர்.
771 எம்.பி-க்களில் 763 எம்.பி-க்கள் மற்றும் 4025 எம்.எல்.ஏ-க்களில் 3991 எம்.எல்.ஏ-க்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தார்கள். தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி பலத்த பாதுகாப்புடன் நாடாளுமன்றத்தில் உள்ள 63-ம் எண் அறையில் நடைபெற்று வருகிறது. தேர்தல் அதிகாரியான மாநிலங்களவை செயலாளர் பி.சி.மோடி முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
முதற்கட்டமாக எம்.பி-க்களின் வாக்குகள் எண்ணப்பட்டு முதல் சுற்றின் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இதனை தொடர்ந்து இரண்டாவது சுற்றாக எம்.எல்.ஏ-க்கள் பதிவு செய்த வாக்குகள் எண்ணப்பட்டு அடுத்த குடியரசு தலைவராக இருக்கப் போவது யார் என்ற முடிவு அறிவிக்கப்படும்.
இதற்கிடையில் திரௌபதி முர்முவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி என்பதால் பிரதமர் மோடி இன்று பிற்பகல் 2.30க்கு டெல்லியிலுள்ள முர்முவின் இல்லத்துக்கு சென்று வாழ்த்த இருக்கிறார் என டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மோனிஷா