”ஸ்டாலின் நடத்திய போதைத் தடுப்பு ஆலோசனை கூட்டங்கள் என்னாச்சு?” : எடப்பாடி கேள்வி!

Published On:

| By indhu

Counterfeit issue: Toy CM to resign - EPS

”கள்ளக்குறிச்சி நீதிமன்ற வளாகத்தை ஒட்டிய பகுதி மற்றும் ஊரின் மையப் பகுதியிலேயே விஷச்சாராயம் விற்பனை நடைபெற்றுள்ளது. அப்படியென்றால் உளவுத்துறை என்ன செய்தது?” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூன் 21) கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று (ஜூன் 21) மானிய கோரிக்கைகள் மீது விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று சட்டப்பேரவை கூடியது.

ஆனால், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரத்தில் தமிழக அரசை கண்டிக்கும் விதமாக அதிமுக எம்எல்ஏக்கள் இன்று கருப்பு சட்டை அணிந்து தமிழக சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர்.

அவை தொடங்கியதும் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், சட்டப்பேரவை நடவடிக்கைகளில் இன்று ஒருநாள் அதிமுகவினர் பங்கேற்க தடைவிதித்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். இதையடுத்து, அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபையில் இருந்து குண்டு கட்டாக வெளியேற்றப்பட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 50ஆக உயர்ந்துள்ளதாகவும், 96 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதுவரை 146 பேர் இந்த கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 16 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும், சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பலருக்கு கண் தெரியவில்லை எனவும் செய்திகள் வந்துள்ளன.

இவையனைத்தையும் சட்டமன்றத்தில் பேசவேண்டும் என்று பேரவைத் தலைவர் அப்பாவுவிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால், அவர் அனுமதி மறுத்துவிட்டார்.

கள்ளக்குறிச்சி சம்பவம் நெஞ்சை பதறவைக்கும் சம்பவம், நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் சம்பவம், இந்த சம்பவத்தால் மக்கள் கொதித்துக் கொண்டு இருக்கின்றனர்.

இந்த சம்பவத்தை குறித்துக்கூட சட்டமன்றத்தில் பேசுவதற்கு வாய்ப்பளிக்கவில்லை என்றால், எங்களை சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுத்ததற்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும்.

மக்களின் பிரச்சனையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வது எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையிலும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என்ற முறையிலும் எங்களது தலையாய கடமையாகும்.

இந்த சம்பவம் தொடர்பாக விவாதிப்பதற்காக சட்டப்பேரவை கூடியவுடன் நான் எழுந்து நின்றபோது, பேரவைத் தலைவர் அனுமதி மறுத்துவிட்டார். நாங்கள் தொடர்ந்து நின்றுக்கொண்டே அனுமதி கேட்டோம். ஆனால், கொடுக்கப்படவில்லை.

ஏழை, எளிய, பழங்குடியின, ஆதிதிராவிட மக்கள் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்துள்ளனர். இந்த அரசு அவர்களுக்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை.

இவற்றை பேச வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் அனுமதிக்கேட்டோம். ஆனால், பேரவைத் தலைவர் எங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிவிட்டார்.

சட்டமன்றத்தில் எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. பேரவைத் தலைவர் இன்று நடுநிலைமையாக செயல்பட்டு இருக்க வேண்டும். பேரவைத் தலைவரின் இந்த செயல்பாடு எங்களுக்கு வருத்தமாக உள்ளது.

எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விவாதிக்க அனுமதி கேட்டார். ஆனால், அவரை காவல்துறையினர் அலேக்காக தூக்கி வந்து கைது செய்யும் வகையில் நடந்து கொண்டனர்.

இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இது ஒரு ஜனநாயக படுகொலை. தற்போது தமிழகத்தில் நடந்து வருவது ஹிட்லர் ஆட்சி போன்ற சர்வாதிகார ஆட்சி ஆகும்.

முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் அடிக்கடி உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருடன் போதைப் பொருள் தடுப்பு மற்றும் கள்ளச்சாராய ஒழிப்பு குறித்து ஆலோசனை நடத்துகிறார். ஆனால், தற்போது கள்ளச்சாராயம் குடித்து சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளனர். இது எப்படி நிகழ்ந்தது?

நீதிமன்ற வளாகத்தை ஒட்டிய பகுதி மற்றும் ஊரின் மையப் பகுதியிலேயே விஷச்சாராயம் விற்பனை நடைபெற்றுள்ளது. உளவுத்துறை என்ன செய்தது?

திறமையற்ற அரசாங்கம், பொம்மை முதலமைச்சர். கள்ளச்சாராய மரணங்களுக்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும். கள்ளச்சாராய சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என கேட்கிறோம்.

கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் வெளிப்படை தன்மை இல்லை. இவர்களுக்கு சிகிச்சை அளிக்க முக்கியமாக தேவைப்படும் மருந்து மருத்துவமனைகளில் இல்லை.

ஆனால், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அனைத்து மருந்துகளும் கையிருப்பில் உள்ளது என்று சொல்கிறார். இது முற்றிலும் பொய்யான தகவல். இந்த சம்பவத்திற்கு அரசாங்கம் முழு பொறுபேற்க வேண்டும்” என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கள்ளக்குறிச்சி மரணம் : சட்டசபையில் கடும் அமளி… அதிமுக எம்.எல்.ஏ.க்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்!

சட்டென உச்சம் தொட்ட தங்கம் விலை : எவ்வளவு தெரியுமா?