தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிந்து தீர்ப்பு விரைவில் வர இருக்கிறது. அதிகபட்சமாக அடுத்த வாரம் தீர்ப்பு வந்துவிடும் என்று சென்னை உயர் நீதிமன்ற வட்டாரங்களில் செய்தி உச்சரிக்கப்படுகிறது.
அதேநேரம் அந்த வழக்குக்கு இணை வழக்கு என்று சொல்லப்பட கூடிய, ‘ஓ.பன்னீர் உள்ளிட்ட 11 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட வேண்டும்’ என்று திமுக கொறடா சக்கரபாணியால் தொடுக்கப்பட்ட வழக்கு வரும் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த இரு வழக்குகளிலும் சபாநாயகரின் நிலைப்பாடுதான் இப்போது வழக்கறிஞர்கள் வட்டாரத்திலும் சட்டம் சார்ந்த அரசியல் வட்டாரத்திலும் பெருத்த விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
பன்னீர் உள்ளிட்ட 11 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற வழக்கில் சபாநாயகர் எதிர்த்தரப்பு கொடுத்த நோட்டீஸையும் வாங்கவில்லை, நீதிமன்றம் கொடுத்த நோட்டீஸையும் வாங்கவில்லை. ஆனால், 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் சபாநாயகர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் ஆஜராகி வாதாடியிருக்கிறார்.
சபாநாயகர் என்பவர் நீதிமன்றத்துக்கு அப்பாற்பட்டவர் என்றால், 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராகி விளக்கம் சொல்லும் சபாநாயகரின் வழக்கறிஞர், ஓ,பன்னீர் உட்பட 11 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற வழக்கில் இருந்து தள்ளி நிற்பது ஏன்?
அப்படியென்றால் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் தான் செய்தது நியாயம் என்று வாதாடும் சபாநாயகர் தரப்பு, 11 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட வேண்டிய வழக்கில் தான் செய்யாதது நியாயம் என்று வாதிட வேண்டுமே? ஏன் வாதாடவில்லை? இதில் இருந்து சபாநாயகர் தனது, abandoned jurisdiction என்ற உரிமையை செலக்ட்டிவ் ஆக பயன்படுத்துகிறாரா என்ற கேள்வியும் சட்ட வட்டாரங்களில் எழுந்துள்ளது.
இதை வலுவாக்கும் வகையில், ஓ.பன்னீர் உள்ளிட்ட 11 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற வழக்கில் பன்னீர் மற்றும் 11 பேருக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் ஒரு வாதத்தை முன்வைத்தார்.
அதாவது, “சபாநாயகர் ஏதேனும் ஆணை பிறப்பித்திருந்தால் அதன் மீது கூட குறைந்தபட்ச அளவுதான் நீதிமன்றம் தலையிட முடியும். ஆனால், சபாநாயகர் ஆணை பிறப்பிக்காதபட்சத்தில் நீதிமன்றம் தலையிட்டு இப்படி ஓர் உத்தரவு பிறப்பியுங்கள் என்று உத்தரவிட முடியாது.
உச்ச நீதிமன்றம் ராஜேந்திர சிங் ரானா வழக்கில் கூட சபாநாயகர், குறிப்பிட்ட உறுப்பினர்களைத் தகுதிநீக்கம் செய்ய முடியாது என்று உத்தரவிட்டதன் மீதுதான் தகுதிநீக்கம் செய்கிறோம் என்று உத்தரவிட்டது. அதுவும் சட்டமன்றத்தின் பதவிக் காலம் முடியும் தருவாய் வந்துவிட்டது என்பதால் அப்படி ஓர் உத்தரவை பிறப்பித்தது. மாறாக சபாநாயகர் எந்த ஆணையும் பிறப்பிக்காத நிலையில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு உத்தரவு பிறப்பிக்கவில்லை” என்று வாதாடினார்.
இதைக் குறிப்பிடும் தினகரன் மற்றும் திமுக தரப்பு வழக்கறிஞர்கள், “திமுக கொறடா சக்கரபாணிக்காக வாதாடிய கபில் சிபல், தமிழக சட்டமன்ற சபாநாயகர் ஒருதலைபட்சமாகச் செயல்படுகிறார் என்ற சந்தேகம் ஏற்படுகிறது. சபாநாயகர் மீது சந்தேகம் ஏற்பட்டாலே அது ஒருதலைபட்சமான செயல்பாடு என்றுதான் அர்த்தமாகும் என்று வாதாடியிருக்கிறார். இந்த நிலையில் பன்னீர் மற்றும் 11 பேருக்காக வாதாடும் வழக்கறிஞர் தன்னுடைய பதிலில் சபாநாயகருக்காகவே கணிசமான நேரம் வாதாடியிருக்கிறார்.
இந்த வழக்கில் சபாநாயகர் நோட்டீஸே வாங்கவில்லை. ஆனால், சபாநாயகருக்காக அறிவிக்கப்படாத வழக்கறிஞராக ஓ.பன்னீரின் வழக்கறிஞரே வாதாடுகிறார். இது நாங்கள் குறிப்பிட்ட சபாநாயகர் ஒருதலைபட்சமானவர் என்ற சந்தேகத்தை உறுதி செய்வதாக இருக்கிறது. சபாநாயகரும் ஓ.பன்னீரும் ஒரேதரப்பில் இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்கிறது” என்கிறார்கள்.
ஆனால், இதுபற்றி அதிமுக தரப்பில் கேட்டால், “ஒரு வழக்கில் ஒரு ரெஸ்பாண்டன்ட் தனது சக ரெஸ்பாண்டன்ட்டுக்காக வாதாடுவதை சட்டமே அனுமதிக்கிறது. அதனால் இது பெரிய விஷயமில்லை” என்கிறார்கள்.
அதேநேரம் தினகரன் தரப்பினர், “18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் சபாநாயகர் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகிறார். ஆனால் 11 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்கிற வழக்கில் சபாநாயகர் நோட்டீஸையே ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்.
18 பேர் தகுதிநீக்க வழக்கு விசாரணையின்போது நீதிமன்றம், ‘18 பேர் மீது தகுதிநீக்க நடவடிக்கை மேற்கொண்ட சபாநாயகர், கொறடா உத்தரவை மீறி பன்னீர் உள்ளிட்ட 11 பேர் மீது ஏன் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை?’ என்று கேள்வி கேட்கும்போது, ‘அதற்கான பதிலை அந்த வழக்கில் சொல்கிறோம்’ என்றார் சபாநாயகரின் வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம். ஆனால், இந்த வழக்கிலே நோட்டீஸை கூட சபாநாயகர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதையெல்லாம் நீதிமன்றம் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறது. எனவே. நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு நிறைய உள்ளது” என்கிறார்கள்.
பன்னீர் உள்ளிட்டோர் மீதான சக்கரபாணி தொடுத்த வழக்கின் அடுத்த விசாரணைக்கு முன், 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கின் மீதான தீர்ப்பு வந்துவிடலாம் என்று வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறாள் நீதி தேவதை!
தொகுப்பு: ஆரா
ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட் தொடரும்…
ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 1
ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 2
ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 3
ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 4
ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 5
ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 6
ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 7
ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 8