ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்! மினி தொடர் – 8
‘சபாநாயகர் என்பவர் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்பட்டவரா, இல்லையா?’ என்பதுதான் நேற்று (பிப்ரவரி 14) சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த, ஓ.பன்னீர் உட்பட 11 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற வழக்கில் முக்கிய விவாதமாக அலசப்பட்டது.
மூத்த வழக்கறிஞர் அமரேந்தர் சரண் நேற்று முன்தினம் வைத்த வாதத்தின் தொடர்ச்சியை சக்கரபாணிக்காக நேற்றும் வைத்தார்.
“ஓ.பன்னீர் உட்பட 11 பேரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும். ஏனென்றால் பிப்ரவரி 18ஆம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர்கள் கொறடாவின் உத்தரவை மீறிவிட்டார்கள். ஒடிசா சட்டமன்றத்தில் குறிப்பிட்ட கட்சியில் உள்ள நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும் கட்சி மாறிவிடுகிறார்கள். எம்.எல்.ஏ இல்லாத கட்சியின் தலைவர், நால்வரையும் தகுதிநீக்கம் செய்யுமாறு சபாநாயகரிடம் கோருகிறார். சபாநாயகர் எதையும் செய்யவில்லை. இதற்காக உயர் நீதிமன்றம் செல்கிறார். அப்போது, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 10ஆவது அட்டவணையின்படி, ‘கட்சித் தாவல் தடை சட்டத்தை மீறுபவர்கள் மீது யாரும் புகார் கொடுக்கலாம்’ என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த அடிப்படையில்தான் சக்கரபாணியும் புகார் கொடுத்திருக்கிறார்” என்று வாதாடினார்.
அவரை அடுத்து வாதாடிய மூத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கபில் சிபல், தமிழகச் சட்டமன்ற சபாநாயகர் ஒருதலைபட்சமாகச் செயல்படுகிறார் என்பதை மையமாக வைத்து வாதாடினார்.
“சபாநாயகர் ஒருதலைபட்சமாக நடக்கிறார் என்ற சந்தேகம் வந்தாலே அது பாரபட்சமாகச் செயல்படுவதாகத்தான் அர்த்தமாகும். ஏற்கெனவே பன்னீர் மீது நான்கு ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள், ‘அவர் கொறடா உத்தரவை மீறி செயல்பட்டிருக்கிறார்கள்’ என்று புகார் கொடுத்தபோதும் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் விஷயத்தில் அவர்கள் கொறடா உத்தரவை மீறினார்கள் என்ற பேச்சே எழவில்லை. ஆனாலும் அவர்கள்மீது கொறடாவின் உத்தரவை மீறினார்கள் என்ற புகார் இல்லாமலேயே, தகுதிநீக்க நடவடிக்கை எடுத்திருக்கிறார். அதுவும் ஒரே நாளில் எந்த சந்தர்ப்பமும் கொடுக்காமல் தகுதிநீக்கம் செய்கிறார். இதுதான் ஒருதலைபட்சம்” என்று வாதாடினார்.
ஓ.பன்னீர் உட்பட 11 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் கடிதம் கொடுத்த வெற்றிவேல் உள்ளிட்ட நான்கு தினகரன் ஆதரவாளர்கள் சார்பில் முன்னாள் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜரானார்.
ஏற்கெனவே நாம் பார்த்திருக்கிறோம். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 10ஆவது அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் கட்சித் தாவல் தடை சட்டத்தின்படி, சபையில் கொறடா உத்தரவை மீறிய உறுப்பினரைக் கட்சித் தலைமை 15 நாள்களுக்குள் மன்னிக்கலாம். அதற்கு மேல் கட்சித் தலைமையே நினைத்தாலும் மன்னிக்க முடியாது. அதேபோல தமிழகச் சட்டமன்ற கட்சித் தாவல் தடை விதிகளின்படி 30 நாள்கள் வரைக்கும் கட்சித் தலைமை மன்னிக்கலாம் என்று உள்ளது. அதன்படிதான் வெற்றிவேல் உள்ளிட்டவர்கள் முப்பது நாள்கள் கடந்த பிறகு பன்னீர் உள்ளிட்ட 11 பேர்மீது புகார் கொடுத்தார்கள்.
இதைக் குறிப்பிட்ட பி.எஸ்.ராமன், “அப்போது சபாநாயகர் கட்சி இரண்டாக பிரிந்து சின்னம் முடக்கப்பட்டிருப்பதால் தன்னால் நடவடிக்கை எடுக்க முடியாது என்றார். இந்த விவகாரத்தில் பன்னீர் அணியினர் முரணான பதிலைச் சொல்லியிருக்கிறார்கள். தேர்தல் கமிஷனில், ‘கட்சிக் கொறடா உத்தரவை நாங்கள் மதிக்க வேண்டிய அவசியமில்லை. நாங்கள் தனி அணி என்பதால் கொறடா உத்தரவு தங்களைக் கட்டுப்படுத்தாது என்றார்கள். ஆனால், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 122 பேருக்குத்தான் கொறடா உத்தரவிட்டார், எங்களுக்கு இல்லை என்கிறார்கள். அரசு கொறடாவின் உத்தரவை மீறிய பன்னீர் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் அவர்கள் ஒவ்வோர் இடத்திலும் வெவ்வேறு பதில்களைச் சொல்லி வருகிறார்கள்” என்று குறிப்பிட்டார்.
இந்த வழக்கில் நாம் ஏற்கெனவே குறிப்பிட்டபடி சபாநாயகர் நோட்டீஸ் வாங்க மறுத்துவிட்டதால் அவர் சார்பில் யாரும் ஆஜராகவில்லை. பன்னீர், செம்மலை உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்களுக்காக சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜரானார். சபாநாயகரின் செயலாளருக்கு அட்வகேட் ஜெனரல் ஆஜரானார்.
“சபாநாயகருக்கு உத்தரவிடச் சொல்லி நீதிமன்றம் உத்தரவிட முடியுமா என்பதை நாங்கள் ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்குப்பதிவு செய்திருக்கிறோம். அது நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கை நடத்தவே கூடாது” என்றார் வைத்தியநாதன்.
உடனே சக்கரபாணி தரப்பில், “முதலில் நாங்கள் சபாநாயகருக்கு உத்தரவிடச் சொல்லிக் கேட்டிருந்தோம். அதன்பின் எங்கள் ரிட் மனுவில் வேண்டுகோளை, நீதிமன்றமே சபாநாயகரின் பணியை செய்யலாம் என்று மாற்றியுள்ளோம்” என்று பதிலளிக்கப்பட்டது.
அப்போது சி.எஸ்.வைத்தியநாதன், “சபாநாயகரின் செயல்பாடுகளின் மீது முறையீடுகள் வந்தால் அதன்மீது கூட குறுகிய அளவில் தலையிடுவதற்குத்தான் நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. மாறாக சபாநாயகர் ஒரு விவகாரத்தில் முடிவு எடுக்காத நிலையில் அவரை முடிவெடுக்கச் சொல்வதற்கு நீதிமன்றத்துக்கு அதிகாரம் கிடையாது. அதனால் இந்த மனுவை விசாரிப்பதே தவறானது. உச்ச நீதிமன்ற முடிவுக்குப் பின் இதைப் பார்த்துக் கொள்ளலாம்” என்று வாதிட்டார்.
வழக்கு 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சபாநாயகர் என்ற அந்தஸ்தை மையமாக வைத்தே ஓ.பன்னீர் தரப்பினர் வாதாடியிருக்கிறார்கள். சபாநாயகர் என்ற அரசியல் சாசனப் பதவிக்கு இருக்கும் சட்டப் பாதுகாப்பை தங்களின் பாதுகாப்பாகக் கருத வைக்கும் அளவுக்கு அவர்கள் வாதாடுகிறார்கள். 22ஆம் தேதிக்குள் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு வந்துவிடுமா என்ற எதிர்பார்ப்பும் நீதிமன்ற வளாகத்தில் நிலவி வருகிறது.
தொகுப்பு: ஆரா
ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட் தொடரும்…
ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 1
ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 2
ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 3
ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 4
ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 5
ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 6
ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 7