ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட் – மினி தொடர் 5
கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி தமிழகச் சட்டமன்றத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதை ரகசிய வாக்கெடுப்பு முறையில் நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சியான திமுகவின் கோரிக்கையைச் சபாநாயகர் நிராகரித்தார். சட்டமன்றத்தில் ரகளை நடந்தது. வாக்கெடுப்பும் நடந்தது.
இதில், 122 எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களித்தார்கள். 11 அதிமுக எம்.எல்.ஏக்கள் எடப்பாடிக்கு எதிராக வாக்களித்தார்கள். ஒருவர் வாக்கெடுப்பைப் புறக்கணித்தார். எதிர்க்கட்சியான அனைத்து திமுக எம்.எல்.ஏக்களும் வெளியேற்றப்பட்டு விட்டனர். அதிமுகவின் கொறடாவான ராஜேந்திரன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.
அரசு கொறடா உத்தரவுக்கு எதிராக நடந்துகொண்ட ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முருகுமாறன், தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், பார்த்திபன் ஆகியோர் சபாநாயகரிடம் மனு கொடுத்தனர். ஆனால், அதன்மீது சபாநாயகர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையெல்லாம் மேற்கோள் காட்டித்தான் திமுக சட்டமன்ற கொறடா சக்கரபாணி அந்த வழக்கைத் தொடுத்தார்.
“அரசு கொறடா உத்தரவுக்கு எதிராக நடந்து கொண்ட எம்.எல்.ஏக்கள் மீது தமிழகச் சட்டமன்ற விதிகள் 1986இல் கூறப்பட்டுள்ள தகுதிநீக்கம் தொடர்பான பிரிவுப்படி, நடவடிக்கை எடுக்கும்படி, சபாநாயகர், சட்டமன்றச் செயலாளர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனுவில் திமுக தரப்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர்கள் வாதங்களை எடுத்து வைத்தனர்.
“அரசியல் அமைப்புச் சட்டத்தில் பல அட்டவணைகள் உண்டு. அதன்படி பத்தாவது அட்டவணை என்பது கட்சித் தாவலினால் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி இழப்பது பற்றி விளக்குகிறது.
இந்த 10ஆவது அட்டவணையின் இரண்டாவது பத்தியில் ஒரு சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் எப்போது தகுதி இழப்புக்கு ஆளாகிறார் என்று தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கிறது.
1. அந்த உறுப்பினர் தான் சார்ந்த கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகியிருக்க வேண்டும் அல்லது விலக்கப்பட்டிருக்க வேண்டும். அதாவது அவர் அதுவரை இருந்த கட்சியில் உறுப்பினராக இல்லாதவராக ஆக வேண்டும்.
(கட்சியில் இல்லை என்பதை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுதல் அல்லது விலக்குதல் என்பதன் மூலமாகவும் பார்க்கலாம். அல்லது அவரது செயல்பாடுகள் மூலமாகவும் பார்க்கலாம். அதாவது எடப்பாடியை எதிர்த்த 18 பேரும் தினகரனோடு இணைந்து வெளிப்படையாகச் செயல்பட்டார்கள். ஓ.பன்னீர் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் முதல்வரை எதிர்த்தே வாக்களித்தார்கள்)
2. கட்சித் தலைமை, கொறடா உத்தரவை மீறிய சட்டமன்ற உறுப்பினர்களை மன்னித்துவிட்டதாக அந்தக் கட்சியின் தலைமை 15 நாள்களுக்குள் கடிதம் கொடுக்க வேண்டும், அதாவது சபாநாயகரிடம் கடிதம் கொடுக்க வேண்டும். 15 நாள்கள் தாண்டிவிட்டால் அந்த உறுப்பினரை மன்னிக்கக்கூட கட்சித் தலைமைக்கு அதிகாரம் இல்லை. அவர் தானாகவே தகுதி நீக்கத்துக்கும் பதவி இழப்புக்கும் ஆளாகிவிடுவார்.
இவைதான் அரசியல் அமைப்பு சாசனத்தின் 10ஆவது அட்டவணையின் இரண்டாவது பத்தியில் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
இந்த வாதத்தைதான் ஓ.பன்னீர் உள்ளிட்ட 11 பேரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்ற வழக்கில் திமுக கொறடா சக்கரபாணி தரப்பு வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்றத்தில் முன்வைத்தனர்.
“இந்த 10ஆவது அட்டவணையின் 2ஆவது பத்தியை ஓ.பன்னீர் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பொருத்திப் பார்த்தால் அவர்கள் தங்கள் கட்சிக் கொறடா உத்தரவை மீறினார்கள். பிப்ரவரி 18ஆம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நாளில் இருந்து 15 நாள்களுக்குள் இவர்களை மன்னித்துவிட்டதாகக் கட்சித் தலைமை எந்தக் கடிதமும் கொடுக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில் இவர்களை தகுதிநீக்கம் செய்ய சபாநாயகரே தேவையில்லை. சட்டமே போதும். நீதிமன்றமே இவர்களை தகுதிநீக்கம் செய்யலாம்” என்று சக்கரபாணி அணியினர் வைத்த வாதத்துக்குச் சான்றாக ராஜேந்திர சிங் ரானா வழக்கின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் முன்னுதாரணமாக வைத்தனர்.
ஆனால், இந்தக் கேள்விகளுக்குச் சபாநாயகர், சபாநாயகரின் செயலாளர், ஓ.பன்னீர் செல்வம் மற்றும் 11 பேர் இதுவரை எழுத்துபூர்வ பதில் அளிக்கவில்லை என்கிறார்கள் நீதிமன்ற வட்டாரத்தினர். இத்தனைக்கும் இந்த வழக்கு நாளை (பிப்ரவரி 13) விசாரணைக்கு வர இருக்கிறது.
அவர்கள் ஏன் பதில் சொல்லவில்லை? பதில் சொல்லவில்லை என்பதே அவர்களைப் பலவீனமாக்குகிறது. இந்த வழக்கு நிச்சயம் 18 பேர் தகுதிநீக்க வழக்கிலும் எதிரொலிக்கும் என்பதால்தான் இது இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது.
தொகுப்பு: ஆரா
ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட் தொடரும்…
ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 1
ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 2
ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 3
ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 4