தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரை பதவிநீக்கம் செய்தாயிற்று… அவர்களோ, ‘எங்களிடம் முறையான விளக்கங்கள் ஏதும் கேட்காமலேயே, சட்டம் இயற்றும் அந்தஸ்து மிக்க சட்டமன்ற உறுப்பினர்களான எங்களது விளக்கத்தைப் பெறாமலேயே ஒருதலைபட்சமாக இயற்கை நீதிக்கு எதிராக தகுதிநீக்கம் செய்துவிட்டார். எனவே, சபாநாயகரின் நடவடிக்கை செல்லாது’ என்று உயர் நீதிமன்றத்தில் வாதாடினர்.
பதிலுக்கு அரசுத் தரப்பும், சபாநாயகர் தரப்பும், ‘18 பேரும் கட்சிக்கு எதிராக மீடியாக்களில் பேசினார்கள். ஆட்சிக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்’ என்று வாதாடினார்கள்.
இந்த வாதத்துக்கு இடையில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தரப்பில் முக்கியமான வாதம் வைக்கப்பட்டது.
‘நாங்கள் ஆட்சிக்கு எதிரானவர்களா? இல்லவே இல்லை. கடந்த பிப்ரவரி 18 அன்று நடந்த எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியபோது நாங்கள் 18 பேரும் இந்த அரசை ஆதரித்து வாக்களித்தோம். ஆனால் அப்போது, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்கள் இதே அரசுக்கு எதிராக வாக்களித்தார்கள். அவர்கள் மீது நடவடிக்கை இல்லாமல், எங்கள் மீது நடவடிக்கை எடுத்தது என்ன நியாயம்?’ என்பதுதான் தினகரன் தரப்பு சட்டமன்ற உறுப்பினர்களின் முக்கிய வாதமாக இருந்தது.
இந்த வாதத்தை 18 பேரின் சார்பாக முன்வைத்தார் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே. “இந்த அரசு உருவாக தோள் கொடுத்து ஆதரவளித்தவர்கள் இந்த 18 பேர். ஆனால், இந்த அரசை வீழ்த்த உறுதிபூண்டு கொறடா உத்தரவை மீறி அரசுக்கு எதிராக வாக்களித்த மாஃபா பாண்டியராஜன் இந்த அரசின் அமைச்சர், ஓ.பன்னீர் இன்று இந்த அரசின் துணை முதலமைச்சர். அவர்கள் மீதல்லவா முதல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்?’’ என்பது தவேவின் கேள்வி.
இந்த வழக்கு நடக்கும்போது, ‘கோர்ட் ஹால்’ எனப்படும் நீதிமன்ற அரங்குகள் நிறைந்து காணப்பட்டது. இந்தக் கூட்டத்தில் அதிமுக வழக்கறிஞர்கள், திமுக வழக்கறிஞர்கள், மத்திய அரசின் வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், தேடல்கொண்ட இளம் வழக்கறிஞர்கள் என்று பலரும் திரளுவர். அரசியல் அமைப்பு சட்டம் தொடர்பான வழக்கு என்பதால் இதில் பல பாடங்கள் கிடைக்கக் கூடும், முன்னுதாரணங்கள் தெரியவரக் கூடும் என்பதால் இளம் வழக்கறிஞர்களும் கூர்ந்து கவனித்தார்கள்.
அந்த வகையில் 18 பேர் வழக்கில் துஷ்யந்த் தவே கேட்ட ஒரு கேள்வியையே மையமாக வைத்து புதிதாக ஒரு வழக்கை உயர் நீதிமன்றத்தில் தொடுத்தது திமுக. அக்கட்சியின் சட்டமன்ற கொறடா சக்கரபாணி சார்பாக இந்த வழக்கு தொடரப்பட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக எம்.எல்.ஏக்களான ஓ.பன்னீர்செல்வம், ஆறுகுட்டி, சண்முகநாதன், மாணிக்கம், மனோகரன், கே.பாண்டியராஜன், மனோரஞ்சிதம், சரவணன், செம்மலை, சின்னராஜ், ஆர்.நட்ராஜ் ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இந்த வாக்கெடுப்பை கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏவான அருண்குமார் கட்சியின் விதிமீறிப் புறக்கணித்தார்.
கட்சிக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க ஏற்கெனவே சட்டப்பேரவை தலைவரிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், சட்டப்பேரவை தலைவர் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நிலையில்தான், கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல்வர் மீது நம்பிக்கையில்லை என்று ஆளுநரிடம் கடிதம் அளித்த டிடிவி.தினகரன் ஆதரவாளர்களான தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டப்பேரவைத் தலைவருக்கு அரசு கொறடா பரிந்துரை செய்தார். இந்தப் பரிந்துரை உடனே சபாநாயகரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.
‘18 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதே நேரம் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என்று கடந்த 2017 செப்டம்பர் 26ஆம் தேதி திமுக கொறடா மூலம் வழக்குத் தொடரப்பட்டது.
அரசு கொறடா உத்தரவை மீறியது பற்றி எதிர்க்கட்சி கொறடா என்ற முறையில் சக்கரபாணி இந்த வழக்கைத் தொடுத்தார். கடந்த அக்டோபர் 4ஆம் தேதி இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிபதி இது பற்றி சட்டப்பேரவை தலைவர், பேரவைச்செயலர் விளக்கம் அளிக்க உத்தரவிட்டார்.
இது 18 பேர் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கின் இணை வழக்கு என்றே கருதப்படுகிறது. 18 பேரை தகுதிநீக்கம் செய்தது சரி என்று வாதாடும் அரசு, ஓ.பன்னீர் உள்ளிட்டவர்களைத் தகுதிநீக்கம் செய்யாதது சரி இன்று இந்த வழக்கில் வாதாட வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதாவது சபாநாயகர் பாரபட்சத்தோடு செயல்பட்டார் என்பதை சபாநாயகர் தரப்பே எடுத்து விளக்க வேண்டிய இக்கட்டான தருணத்துக்கு இந்த இணை வழக்கு கொண்டு போய் விடும் என்று அவர்கள் அப்போது நினைத்திருக்கவில்லை.
அதுதான் நடந்தது…
தொகுப்பு: ஆரா
ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட் தொடரும்…
ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 1
ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 2
ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 3