ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்! மினி தொடர் – 3

அரசியல் சிறப்புக் கட்டுரை

ஆட்சிக்கான ஆதரவை ஆளுங்கட்சியில் ஒரு குழுவோ அல்லது கூட்டணி ஆட்சியாக இருக்கும்பட்சத்தில் சக கூட்டணிக் கட்சியோ வாபஸ் வாங்கலாம். ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள், முதல்வர் பழனிசாமி பற்றி ஆளுநர் வித்யா சாகர் ராவ்விடம் கொடுத்த தனித்தனியான கடிதம்தான் இந்த விவகாரத்தின் ஆரம்பத்தையே திருப்புமுனையாக்கியது.

ஆம். இந்தத் தனிப்பட்ட எடப்பாடி பழனிசாமியின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதுதான் அந்தக் கடிதத்தின் சாரம். இந்த ஆட்சிக்கான ஆதரவை வாபஸ் வாங்குகிறோம் என்று அவர்கள் குறிப்பிடவில்லை.

ஆளுநரிடம் அந்த 18 எம்.எல்.ஏக்கள் கொடுத்த கடிதம் (ஜம்ப் ஆன ஜக்கையனைச் சேர்க்கவில்லை) அடிப்படையில்தான் அதிமுகவின் கொறடா பரிந்துரை செய்கிறார், சபாநாயகர் தகுதிநீக்க நடவடிக்கை எடுக்கிறார்.

ஆனால், இதேபோல ஏற்கனவே இன்னொரு மாநிலத்தில் இன்னொரு முதல்வர் குறித்து அளிக்கப்பட்ட கடிதம் பற்றியும், அந்தக் கடிதம் பற்றி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்தும் தெரிந்துகொண்டுதான் அதே காட்சிகளை இங்கேயும் எதிர்பார்த்து அரங்கேற்றியது தினகரன் தரப்பு. ஆம்… இந்த டிராஃப்ட்டுக்குப் பின்னால் தினகரனின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் போன்ற வலுவான மூளைகள் இருந்தன என்று அப்போதே சட்ட வட்டாரங்களில் பேசப்பட்டது. அந்த வலுவான மூளைகள்தான் கர்நாடகாவில் எடியூரப்பா விவகாரத்தை மீண்டும் தமிழகத்தில் நடத்திப் பார்ப்பதுபோல இந்தக் கடிதக் காட்சியை அரங்கேற்றினார்கள்.

2010ஆம் ஆண்டு கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா மீது நம்பிக்கை இல்லை என்று அவரது கட்சியான பாஜக மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் 16 பேர் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர்.

இதையடுத்து அப்போது கர்நாடக சட்டமன்ற சபாநாயகர் குறிப்பிட்ட இந்த எம்.எல்.ஏக்களைத் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தகுதிநீக்கம் உறுதி செய்யப்பட்டது. ஆனால், அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் அந்த 16 எம்.எல்.ஏக்களையும் தகுதிநீக்கம் செய்தது செல்லாது என்று உத்தரவிட்டு மீண்டும் அவர்களை சட்டமன்றம் செல்ல அனுமதித்துத் தீர்ப்பளித்தது.

அப்போது உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், “கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால்… ஒன்று, அந்த சட்டமன்ற உறுப்பினர் எந்தக் கட்சியின் சின்னத்தில் ஜெயித்தாரோ, அந்தக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும். இரண்டு, கட்சியின் கொறடா உத்தரவைச் சட்டமன்றத்தில் மீறிச் செயல்பட்டிருக்க வேண்டும். இந்த இரு அம்சங்களும் இந்த எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கத்தில் பொருந்தாததால் அவர்கள் மீதான நடவடிக்கை செல்லாது” என்று தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம்.

டி.டி.வி.தினகரன் தரப்பினர் ஆளுநரிடம் கொடுத்த கடிதத்தில், அன்று எடியூரப்பாவுக்கு எதிராக கர்நாடக சட்டமன்ற உறுப்பினர் கொடுத்த கடிதத்தில் உள்ள வாசகங்களையே கவனமாகப் பயன்படுத்தியுள்ளனர். எனவே, அந்த விவகாரமும் இந்த விவகாரமும் ஒரே மாதிரியானவைதான்.

எனவே, எடியூரப்பா விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு இப்போது தமிழகச் சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்க விவகாரத்துக்கும் பொருந்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் பாயின்ட்

தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் இதுவரை அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யவில்லை. மாவட்டம் மாவட்டமாகக் கொத்துக் கொத்தாகப் பலரைக் கட்சியில் இருந்து நீக்கி வரும் எடப்பாடி – பன்னீர் தரப்பு இந்த 18 பேரையும் கட்சியில் இருந்து நீக்கவில்லை.

இரண்டாவது பாயின்ட்

இந்த 18 பேர் ஆளுங்கட்சிக்கு எதிராகச் சட்டமன்றத்தில் செயல்பட்டார்கள் என்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. அவர்கள் கொறடாவின் உத்தரவை மீறவில்லை. சட்டமன்றத்துக்கு வெளியே நடக்கும் சம்பவங்களுக்காகச் சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதிநீக்கம் செய்வதற்கு கொறடா பரிந்துரைத்தது எப்படி என்பதும் புரியவில்லை. மாறாக, சட்டமன்றத்தில் கொறடாவின் உத்தரவை மீறியவர்கள் ஓ.பன்னீர் மற்றும் அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 11 பேர்தான். அவர்கள்மீது பாய வேண்டிய சபாநாயகரின் நடவடிக்கை, சட்டமன்றத்தில் கொறடா உத்தரவை மீறாத சட்டமன்ற உறுப்பினர்கள்மீது பாய்ந்தது எப்படி சரியாகும்?

எடியூரப்பா முதல்வராக இருக்கும்போது கொடுத்த கடிதத்தைப் போலவே… தினகரன் ஆதரவு உறுப்பினர்களும் கொடுத்திருக்கிறார்கள். அதேபோல தகுதிநீக்கமும் செய்யப்பட்டிருக்கிறார்கள். அப்படியென்றால் அந்த வழக்கில் வந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை முன்னுதாரணமாகக் கொண்டுதான் சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பும் இருக்கும் என்பதே எதிர்பார்ப்பு.

எனவே, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தெளிவான முன்னுதாரணமாக இருப்பதால் இந்த 18 சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதிநீக்கம் செய்தது செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளிக்க முழுமையான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதைச் சுட்டிக்காட்டுகிறது தினகரன் தரப்பு.

எடியூரப்பா 16… எடப்பாடி 18

நீதிமன்றத்தின் கணக்கறியக் காத்திருக்கிறது தமிழகமும் டெல்லியும்!

தொகுப்பு: ஆரா

ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட் தொடரும்…

ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 1

ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 2

Countdown to AIADMK rule starts - Mini Series 3

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *