பொதுவாக ஓர் அரசியல் கட்சி, தனது சட்டமன்ற உறுப்பினரையோ, நாடாளுமன்ற உறுப்பினரையோ மிகப் பெரும்பாலான சமயங்களில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்காது. உள்கட்சி பிரச்னைகளுக்காகவோ, ஒழுங்கு நடவடிக்கைக்காகவோ நீக்க வேண்டுமெனில் அந்த உறுப்பினர் கட்சியில் வகித்து வரும் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவாரே தவிர, கட்சியில் இருந்து ஒருபோதும் நீக்கப்பட மாட்டார்.
ஏனெனில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டால் அவர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழக்க வேண்டிய அவசியம் இல்லை. அவராகவே கட்சித் தலைமையோடு முரண்பட்டு வேறு கட்சிக்கு தாவினாலோ, அல்லது கட்சியின் கொள்கைகளுக்கு முரண்பட்டு வேறு கட்சி நிகழ்வில் கலந்து கொண்டாலோ அவரை தகுதி இழப்பு செய்ய கட்சித் தலைமை அவைத் தலைவருக்கு சிபாரிசு செய்யலாம். ஆனால், கட்சித் தலைமையே தாமாக முன்வந்து ஒரு சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினரைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கினால் அதனால் கட்சிக்குதான் இழப்பு.
2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினரான சசிகலா புஷ்பா, அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாகவும், அவருடன் யாரும் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் அப்போதைய கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்தார். தன் கட்சியின் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைக் கட்சியில் இருந்தே நீக்குகிறோம் என்று தெரிந்தே ஜெயலலிதா அறிவித்தார். காரணம், மாநிலங்களவையில் சசிகலா புஷ்பா கட்சித் தலைமை மீது சொன்ன கடுமையான குற்றச்சாட்டு. இப்போது வரை சசிகலா புஷ்பா அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் இல்லை. ஆனால், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தொடர்ந்து வருகிறார். ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா இன்று வரை அதிமுக உறுப்பினர் இல்லை என்பதே நிலைமை.
இதேபோல சில நாள்களுக்கு முன் அதிமுகவில் ஒரு கூத்து நடந்தது. அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு அதிமுக உறுப்பினராகப் போன செந்தில்பாலாஜி கடந்த செப்டம்பர் மாதம் தமிழகச் சட்டமன்ற சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவர். தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று ஆளுநரிடம் கடிதம் கொடுத்த காரணத்துக்காக செந்தில்பாலாஜி உள்ளிட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இதற்கு எதிராக அவர்கள் தொடுத்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறது.
‘கட்சித் தலைமைக்கு எதிராக செயல்பட்டனர்’ என்பது 18 பேரின் மீது உயர் நீதிமன்றத்தில் சபாநாயகர் தரப்பு வைத்த வாதம்.
’இது கட்சித் தலைமைக்கு எதிரான செயல்பாடல்ல; உள்கட்சி விவகாரம். முதல்வரை மாற்ற வேண்டும் என்று சொன்னார்களே தவிர, ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் 18 சட்டமன்ற உறுப்பினர்களும் ஒருபோதும் செயல்படவில்லை’ என்பது 18 பேரின் சார்பில் வைக்கப்பட்ட வாதம்.
வாதப் பிரதிவாதங்கள் முடிந்து தமிழகமே இந்தத் தீர்ப்புக்காகக் காத்திருக்கும் நிலையில் பிப்ரவரி 16ஆம் தேதி அதிமுகவில் இருந்து தினகரன் ஆதரவு நிர்வாகிகள் ஐம்பதுக்கும் மேற்பட்டோரை நீக்கி முதல்வரும் துணைமுதல்வரும் கூட்டறிக்கை வெளியிட்டனர். இதில் அதிர்ச்சித் தரக்கூடிய வகையில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜியின் பெயர் முதலாவதாக இடம்பெற்றிருந்தது.
தகுதிநீக்கம் செய்யப்பட்டு வழக்கைச் சந்தித்து வரும் எம்.எல்.ஏக்கள் 18 பேரில் இதுவரை யாரும் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்படவில்லை. சிலர் மிகவும் தாமதமாக அவர்கள் வகித்து வந்த மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனரே தவிர, கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை. இந்த நிலையில், முதன்முறையாக செந்தில்பாலாஜி அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். இந்தத் தகவல் தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் செய்தியாகவும் வெளியிடப்பட்டது.
சில நிமிடங்களில் அந்த ஸ்க்ரோலிங் செய்தி நிறுத்தப்பட்டது. ஆம். உடனடியாக அதிமுக தலைமைக் கழகத்தில் இருந்து வெளியான இன்னோர் அறிவிப்பில், நீக்கப்பட்ட மற்றவர்கள் பெயரெல்லாம் இருக்கும் நிலையில், முதலாவதாக இருந்த செந்தில்பாலாஜியின் பெயர் மட்டும் நீக்கப்பட்டிருந்தது. அப்படியென்றால் செந்தில்பாலாஜியை இதுவரை அதிமுகவில் இருந்து நீக்கவில்லை.
“தகுதிநீக்க வழக்கில் நிச்சயம் செந்தில்பாலாஜி உள்ளிட்ட 18 பேரின் எம்.எல்.ஏ பதவிகள் மீண்டும் அவர்களுக்குக் கிடைக்கும் சூழ்நிலையே உள்ளது. காரணம், நீதிமன்றத்தில் அவர்கள் தாங்கள் தகுதிநீக்கம் செய்யும் அளவுக்கு குற்றம் செய்யவில்லை என்பதை வாதாடியுள்ளனர். சட்டமன்றத்தில் கொறடா உத்தரவை மீறவில்லை, ஆட்சிக்கு எதிராக சதி செய்யவில்லை, சட்டமன்றத்தில் அரசுக்கு எதிராக வாக்களிக்கவில்லை, முதல்வரை மாற்றுமாறு கேட்டது உள்கட்சி பிரச்னையே அன்றி ஆட்சிக்கு எதிரான பிரச்னை அல்ல என அவர்கள் வைத்த வாதங்களால் 18 பேர் மீதான தகுதி நீக்கம் செல்லாது என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்படலாம் என்றே அதிமுக தலைமையும் நம்புகிறது.
இந்த நிலையில் செந்தில்பாலாஜியைக் கட்சியை விட்டு நீக்கிவிட்டால், அவரது எம்.எல்.ஏ பதவியை ஒன்றும் செய்ய முடியாது. தனி எம்.எல்.ஏவாக அவர் செயல்பட முடியும் என்பதை உணர்ந்துதான் உடனடியாக செந்தில்பாலாஜி நீக்க அறிவிப்பை திருத்தியது தலைமை” என்கிறார்கள் அதிமுக தலைமை அலுவலக வட்டாரத்தில்.
18 பேர் தகுதிநீக்கத்தை ஆதரித்து உயர் நீதிமன்றத்தில் வாதாடிய முதல்வர் தரப்பும், சபாநாயகர் தரப்புமே, ‘தகுதிநீக்கம் செல்லாது’ என நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்படும் என்றே சட்டக் கூறுகளின் அடிப்படையில் கருதுகிறார்கள்.
செந்தில்பாலாஜியின் நீக்க அறிவிப்பில் நடந்த பதற்ற மாற்றமே இதைப் பறைசாற்றுகிறது என்கிறார்கள் அதிமுக வழக்கறிஞர்கள் வட்டாரத்தில்!
தொகுப்பு: ஆரா
ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட் தொடரும்…
ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 1
ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 2
ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 3
ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 4
ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 5
ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 6
ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 7
ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 8
ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 9
ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 10
ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 11