தினகரன் தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்புத் தேதிக்காக அதிமுகவின் அனைத்துத் தரப்பினரும் நகம்கடித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த வழக்கில் சபாநாயகரின் நடவடிக்கை செல்லாது என்று தீர்ப்பு வந்தால் என்னாகும்?
திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் சமூக நீதிப் பாதுகாப்பு மாநாட்டில் நேற்று முன்தினம் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், “18 பேர் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்புவரும். அதற்குப் பின் ஆட்சி கவிழும். அதற்குப் பின் ஆறு மாதத்துக்குள் தேர்தல் வரும்” என்று பேசியபோது போல் நடக்குமா?
நேற்று பிப்ரவரி 18ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், “பிரதமர் மோடிதான் ஓ.பன்னீரை இயக்குகிறார் என்று இதுவரை ஊரறிந்த விஷயமாக இருந்தது எப்படி ஓ.பன்னீராலேயே ஒப்புதல் வாக்குமூலமாகக் கொடுக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டதோ… அதேபோல 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கத்தைச் சபாநாயகர் செய்தது தவறு என்பது ஊரறிந்த விஷயம். இந்த வழக்கின் தீர்ப்பு மூலம் அது உறுதிப்படப் போகிறது. அதன்பிறகு பாருங்கள் என்னென்ன நடக்கப் போகிறது என்று” எனக் கூறியிருக்கிறார்.
இப்போதைய நிலவரப்படி தமிழகச் சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு 111 எம்.எல்.ஏக்கள் ஆதரவே இருக்கிறது. தமிழகத்தில் சிம்பிள் மெஜாரிட்டி எனப்படும் குறைந்தபட்ச மெஜாரிட்டிக்கு 118 உறுப்பினர்கள் வேண்டும்.
தினகரன் ஆதரவு 18 சட்டமன்ற உறுப்பினர்கள் எந்தச் சூழலில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்கள் என்பது சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நன்றாகவே தெரியும். சட்டமன்றத்தைக் கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தொடுத்த வழக்கு விசாரணை நடந்துகொண்டிருக்கும்போது, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏவான வெற்றிவேல் திடீரென ஒரு மனுவைத் தாக்கல் செய்கிறார்.
“நான் உள்ளிட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதிநீக்கம் செய்து கழித்துவிட்டு அதன் பிறகு மெஜாரிட்டியைக் குறுக்கு வழியில் நிரூபிக்க அரசுத் தரப்புத் திட்டமிடுகிறது. எனவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களது அரசியல் சாசன உரிமையைக் காப்பாற்றுங்கள்” என்று கோரிக்கை வைக்கிறார் வெற்றிவேல்.
இதுபற்றி அரசுத் தரப்பிடம் கேட்கப்பட்டபோது, “சபாநாயகர் என்ன நடவடிக்கை எடுப்பார் என்று நீதிமன்றத்துக்கு இப்போது தெரிவிக்க முடியாது” என்று சொல்லப்பட்டது.
இதனால் நீதிமன்றம் குறிப்பிட்ட நாள் வரை சட்டமன்றத்தைக் கூட்டக் கூடாது என்று உத்தரவிட்டது. ஆனால், அடுத்த விசாரணை வருவதற்குள் 18 பேரும் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்கள். அதன் பிறகு வெற்றிவேல் உள்ளிட்ட தகுதிநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் தனித்தனியாக இதை எதிர்த்து வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாக இருக்கும் நிலையில், 18 பேரின் தகுதிநீக்கம் செல்லாது என்று அறிவிக்கப்படும்பட்சத்தில் அது சட்டமன்றத்தில் எதிரொலிக்கும்.
மேலும், 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டது தவறு என்று தீர்ப்பு வரும் பட்சத்தில்… ஓ.பன்னீர் உள்ளிட்ட 12 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று தீர்ப்பு வருவதே இயல்பு. எனவே, இப்போது எடப்பாடி பழனிசாமி அரசு தனக்கு ஆதரவான 12 எம்.எல்.ஏக்களை இழந்து, தனக்கு எதிராக 18 எம்.எல்.ஏக்களுக்குத் தகுதி என்ற உயிர் கிடைத்தால் என்ன ஆகும்?
சட்டமன்ற வட்டாரத்தில் நாம் பேசியபோது, “ஓ.பன்னீரும் மாஃபா பாண்டியராஜனும் சட்டமன்ற உறுப்பினராக இருக்கவே தகுதியிழக்கும் நிலையில், அமைச்சராகும் தகுதியையும் இழப்பார்கள். எனவே, பன்னீர் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன் நீதிமன்றத் தீர்ப்பு வந்தால் நிலைமை இன்னும் சிக்கலாகும். ஒருவேளை அதன் பிறகுதான் தீர்ப்பு வருகிறது என்றால்கூட மார்ச் 31-க்குள் நிதி மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்ற வேண்டிய தேவை அரசுக்கு இருக்கிறது. அந்த நிதி மசோதாவே கூட இந்த அரசின் விதி மசோதாவாக மாறும்” என்கிறார்கள்.
தொகுப்பு: ஆரா
ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட் தொடரும்…
ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 1
ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 2
ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 3
ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 4
ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 5
ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 6
ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 7
ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 8
ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 9
ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 10