ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்! மினி தொடர் -10

அரசியல் சிறப்புக் கட்டுரை

பதினெட்டு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கும், ஓ.பன்னீர் உட்பட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்கிற வழக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தில் இப்போது இருக்கிற முக்கிய வழக்குகள்.

தமிழக சட்டமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள 18 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இயற்கை நீதியும், ஜனநாயக நீதியும் மறுக்கப்பட்டிருக்கிறது என்று 18 பேர் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் அழுத்தம் திருத்தமாக வாதங்களை எடுத்து வைத்துள்ளனர்.இந்த வழக்கில் சபாநாயகர் தரப்பு வழக்கறிஞரும் வாதாடியுள்ளார்.

ஆனால், ஓ,பன்னீர் உள்ளிட்ட 11 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்கிற வழக்கில் நீதிமன்றத்தின் நோட்டீஸை சபாநாயகர் ஏற்கவே இல்லை, எனவே சபாநாயகர் தரப்பில் வழக்கறிஞர் யாரும் ஆஜராகவே இல்லை.

ஆனால், ஓ.பன்னீர் செல்வத்துக்காக ஆஜராகும் வழக்கறிஞரே முழுக்க முழுக்க சபாநாயகருக்காக வாதாடும் காட்சியும் நீதிமன்றத்தில் அரங்கேறியிருக்கிறது. இதன் மூலமாக, வழக்குத் தொடுத்த சக்கரபாணி தரப்பு சந்தேகப்படும் வகையிலான சம்பவங்களே நடந்திருக்கின்றன. அதாவது, சபையில் யாவருக்கும் பொதுவானவராக இருக்க வேண்டிய சபாநாயகருக்காக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறவர்களின் தரப்பு வழக்கறிஞரே வாதாடுவதை நாங்கள் வேறு எப்படிப் பார்ப்பது என்று கேட்கிறார்கள் திமுக தரப்பு வழக்கறிஞர்கள்.

ஒரு வழக்கில் ஒரு ரெஸ்பாண்டன்ட் டுக்கு ஆதரவாக இன்னொரு ரெஸ்பாண்டன்ட் பேசுவது தவறல்ல என்று அதிமுக தரப்பு வழக்கறிஞர்களிடம் இருந்து பதில் கிடைக்கிறது. ஆனால் இதற்கும் எதிர்க்கேள்வி எழுப்புகிறார்கள் தினகரன் மற்றும் திமுக தரப்பு வழக்கறிஞர்கள்.

’’ஆரம்ப கட்டத்தில் சட்டமன்றத்தைக் கூட்ட சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தொடுத்த வழக்கு நடக்கும்போதே… அதில் தன்னையும் சேர்த்துக் கொண்டு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார் தினகரன் தரப்பு எம்.எல்.ஏ.வான வெற்றிவேல்.

அப்போது வெற்றிவேல், ‘இந்த வழக்கு நடக்கும்போதே சபநாயகர் எங்களை தகுதி நீக்கம் செய்துவிட்டு நாங்கள் இல்லாத சபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க அரசுத் தரப்புத் திட்டமிடுகிறது. எங்களுக்கு நீதி வேண்டும்’ என்று மனு செய்தார். இந்த மனுவின் மீதுதான், ‘சட்டமன்றத்தைக் கூட்டக் கூடாது’ என்று கெடு விதித்தது உயர் நீதிமன்றம்’’

இந்த நிகழ்வை சுட்டிக் காட்டி, ‘கோர்ட்டில் திமுகவும், தினகரனும் அரசை எதிர்ப்பதில் ஒன்றாக இருக்கிறார்கள்’ என்று வெளியே அதிமுக தரப்பினர் குற்றம் சாட்டினர்,

ஆனால், இன்று வழக்கிலேயே ஆஜர் ஆகாத சபாநாயகருக்காக தகுதி நீக்க செய்யப்பட வேண்டியவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஓ.பன்னீர் தரப்பின் வழக்கறிஞர் வாதாடிக் கொண்டிருக்கிறார் என்றால் இதை என்னவென்று சொல்வது?’’

என்பதுதான் திமுக மற்றும் தினகரன் தரப்பு வழக்கறிஞர்களின் கேள்வி.

’’சபாநாயகர் என்பவர் சட்டமன்றத்தின் தலைவர். ஓ.பன்னீர் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது அவர் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் வழக்கு.

ஆனால் இந்த வழக்கில் தங்கள் மீது குற்றம் இல்லை நிரூபிக்க வேண்டியவர்கள் அதன் கூடவே தங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் சபாநாயகருக்கு ஆதரவாக வாதாடுவது என்பதை நீதிமன்றம் சரியாக எடுத்துக் கொள்ளும்’’ என்கிறார்கள் அவர்கள்.

இதற்கிடையே சபாநாயகர் பற்றி தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்த கருத்தும் அனைத்து தரப்பாலும் கூர்ந்து கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடைய படத்தை சட்டமன்றத்தில் சபாநாயகர் கடந்த பிப்ரவரி 12-ல் திறந்து வைத்தார். இதை எதிர்த்தும், அப்படத்தை அகற்றக் கோரியும் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் ஜெயலலிதா, ’’உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை’’ என்று அரசு தரப்பு வழக்கறிஞர் வாதம் செய்தார்.

’’சொத்துகுவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என உறுதி செய்யப்பட்ட ஒருவரின் படத்தை பேரவையில் வைப்பது சட்டவிரோதம் . மேலும் சட்டமன்ற உறுப்பினராக இருந்த தனபாலை சபாநாயகர் ஆக்கியது ஜெயலலிதா என்பதால், அதற்கான விசுவாத்தைக் காட்டும் வகையில் ஜெயலலிதா படத்தை விதிகளை மீறி சபாநாயகர் திறந்து வைத்துள்ளார் என்பதால் அதை அகற்ற வேண்டும் ’’என்று அன்பழகன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதாடினார்.

“ஜெயலலிதா பெயர் புகைப்படம் ஆகியவற்றை அரசு அலுவலகங்களிலிருந்து அகற்ற வேண்டும் என தொடர்ந்துள்ள வழக்கு நிலையிலுள்ள நிலையில், அவசர அவசரமாக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா குற்றவாளி என்ற பெங்களூரு நீதிமன்ற தீர்ப்பானது உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யபட்டுள்ளது. படத்தை திறக்க இடையூறு ஏற்படாமல் இருக்க விடுமுறை நாளில் முடிவெடுத்து வழக்கமான நேரத்துக்கு முன்னரே திறந்துள்ளனர் , பேரவையில் அமரும்போது, காந்திஜி, ராஜாஜி படங்களுடன் ஜெயலலிதா படம் இருந்தால் அவரை பற்றிய தவறான உதாரணங்கள்தான் தோன்றும்” என்பதே அவரது தொடர் வாதம்.

Countdown to AIADMK rule starts - Mini Series 10

இந்நிலையில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ‘’தண்டிக்கப்பட்டவரின் படம் அரசு கட்டிடங்களில் இடம் பெறக்கூடாது என்பதுதான் எனது தனிப்பட்ட கருத்தும். ஆனால் சபாநாயகரின் முடிவில் நீதிமன்றம் எப்படி தலையிட்டு உத்தரவு பிறப்பிக்க முடியும்?’’ என்று கேள்வி எழுப்பினார்.

சபாநாயகரின் முடிவில் நீதிமன்றம் எப்படித் தலையிட முடியும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி எழுப்பிய கேள்வி, இந்த வழக்குக்கு மட்டும்தான் பொருந்துமா என்ற விவாதம்தான் இப்போது சென்னை உயர் நீதிமன்ற வட்டாரங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

தொகுப்பு: ஆரா

ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட் தொடரும்…

ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 1

ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 2

ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 3

ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 4

ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 5

ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 6

ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 7

ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 8

ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 9

Countdown to AIADMK rule starts - Mini Series 9

 

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *