சட்டமன்றமும் நீதிமன்றமும் இந்திய ஜனநாயகத்தின் பெரும் தூண்களாகக் கருதப்படுகிற நிலையில்… தமிழ்நாடு அரசின் சட்டமன்றம் என்ற தூண் நிற்கப்போகிறதா, விழப்போகிறதா என்பதை தீர்மானிக்கும் சக்தி சென்னை உயர் நீதிமன்றம் அளிக்கப்போகும் தீர்ப்பில் இருக்கிறது.
தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் அப்போதைய தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ்வைச் சந்தித்து, ‘எனக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை’என்று தனித்தனியே கடிதம் கொடுத்தனர். இது தமிழ்நாட்டு அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்திய நிலையில்… அவர்கள் அனைவரையும் கொறடா பரிந்துரையின் பேரில் தகுதிநீக்கம் செய்தார் அவைத் தலைவர் தனபால்.
தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் தகுதி நீக்கத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர்களால் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்ற நிலையில், இன்றைய தமிழ்நாட்டு அரசியலைப் புரட்டிப் போடக் காத்திருக்கிறது அது.
இந்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிவுபெற்ற நிலையில் பிப்ரவரி முதல் வாரம் தீர்ப்பு வெளியாகலாம் என்று கடந்த மாதமே வழக்கறிஞர்கள் வட்டாரங்களில் பேசப்பட்டது. இப்போது தீர்ப்பு தேதி மிகவும் நெருங்கிவிட்டதாகத் தெரிகிறது.
வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பது வந்தால்தான் தெரியும். ஆனால், இந்தத் தீர்ப்பின் மீதான அரசியல் வட்டாரத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பிப்ரவரி 6ஆம் தேதி கதிராமங்கலம் சென்று ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு எதிராகப் போராடும் மக்களைச் சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்த டி.டி.வி.தினகரன் அங்கே முக்கியமான ஒரு செய்தியைச் செய்தியாளர்களிடம் கூறினார்.
“எனக்கு எடப்பாடி பழனிசாமி போல குறுக்கு வழியிலெல்லாம் ஆள ஆசையில்லை. தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு வர இருக்கிறது. இன்னும் சில தினங்கள்தான் இந்த அரசு இருக்கும். அதன்பின் தேர்தல் வந்து 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி ஜெயித்து, உண்மையான அம்மா அரசை அமைப்பேன்” என்கிறார்.
அப்போது செய்தியாளர்களில் ஒருவர், “எம்.எல்.ஏக்கள் பலர் தேர்தலை விரும்பவில்லை என்று கூறப்படுகிறதே?” என்று கேட்டதற்கு,
“ஆமாம்… எம்.எல்.ஏக்கள் தேர்தலை விரும்பவில்லை என்றால் அந்த ஆறு அமைச்சர்களைத் தவிர மற்ற அனைவரையும் நாங்கள் சேர்த்துக்கொள்வோம். எனக்காக தியாகிகளாக இருக்கிறார்களே 18 எம்,எல்.ஏக்கள். அவர்களில் ஒருவரை முதல்வர் ஆக்கி இந்த ஆட்சியைத் தொடரச் செய்வேன்” என்கிறார்.
தினகரனிடமிருந்து இது மாதிரியான பதில்கள் சமீபத்தில் வந்ததில்லை. ஆக, அவர் இந்த வழக்கின் தீர்ப்பையொட்டி பலத்த அரசியல் திட்டங்களை வைத்திருப்பது தெளிவாகத் தெரிகிறது.
இதேபோல திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும், ‘தமிழ்நாட்டில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும்’ என்று செல்லுமிடமெல்லாம் சொல்லிவருகிறார். பிப்ரவரி 5ஆம் தேதி தர்மபுரி மாவட்டத்தில் கேஆர்பி அணையைப் பார்வையிட்ட ஸ்டாலின், “பர்கூர் தொகுதியில் உள்ள அங்கிநாயக்கன் பள்ளி என்ற பகுதிக்கு நேரடியாக வந்து ஆய்வு செய்து, பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டேன். ஆகவே, இந்த அரசு உடனடியாகச் செயல்பட்டு, எங்கெல்லாம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படாமல் இருக்கிறதோ, அந்தக் கிராமங்களில் எல்லாம் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும். இந்தப் பணிகளை குதிரை பேர அரசு விரைவில் மேற்கொள்ளாவிட்டாலும், விரைவில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் வரும்போது, திமுக ஆட்சியில் அமர்ந்து இந்தப் பணிகளை விரைந்து நிறைவேற்றும்” என்றார்.
பற்றாக்குறைக்கு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும், “நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் வந்துவிடும்” என்று சொல்லியிருக்கிறார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூட, ‘’தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு அரசுக்கு எதிராக அமைவதற்கே வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன” என்று கூறியுள்ளார்.
ஆக… தமிழகத்தின் பெரும்பாலான கட்சித் தலைவர்கள் தேர்தலை எதிர்கொள்ளும் மனநிலைக்கு வந்துவிட்டார்கள். இவர்கள் எல்லாம் வெளிப்படையாகச் சொல்கிறார்கள் என்றால், தமிழகத்தின் பல அமைச்சர்கள்கூட, “தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு வந்துவிட்டால் அதன்பிறகு அரசியல் தட்பவெப்பமே மாறும்” என்று இப்போதே தங்களுக்கு நெருக்கமானவர்களைத் தயார்படுத்தி வருகின்றனர்.
தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு அரசுக்குப் பாதகமாக இருந்தாலும் சரி, சாதகமாக இருந்தாலும் சரி… அரசியல் விளைவுகளை வைத்துப் பார்க்கையில், இருபக்கமும் கூரிய கத்தியாக எடப்பாடி அரசின் தலை மேலே தொங்குகிறது தீர்ப்பு.
இந்த வழக்கின் முக்கியத்துவத்தை இனி ஒவ்வொரு நாளும் பார்ப்போம்…
தொகுப்பு: ஆரா
ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட் தொடரும்…
பார் கவுன்சில் தேர்தல்: பாதை தெரியுது பார்! மினி தொடர் – 1
ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 2
ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 3
ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 4
ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 5
ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 6
ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 7
ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 8
ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 9
ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 10