சில மாதங்களுக்கு பிறகு ஒருவழியாக நெல்லை மாநகராட்சி கூட்டம் இன்று (ஜனவரி 30) கூடியது.
கடந்த சில மாதங்களாக நெல்லை மாநகராட்சியில் மோதல் போக்கு நீடித்து வருகிறது. அதுவும் ஆளும் திமுக மேயர் சரவணனுக்கு எதிராக அக்கட்சியின் கவுன்சிலர்களே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் அளவுக்கு சென்றது.
கடந்த 12ஆம் தேதி நடைபெற இருந்த நம்பிக்கை இல்லா தீர்மான வாக்கெடுப்பில் எந்த கவுன்சிலரும் கலந்து கொள்ளாத நிலையில் பிரச்சினை தற்காலிகமாக முடிந்தது.
இதனையடுத்து நெல்லை மாநகராட்சி அவசரக் கூட்டம் ஜனவரி 30 ஆம் தேதி (இன்று) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
எனினும் திமுக கவுன்சிலர்கள் – மேயர் சரவணன் இடையே மோதல் மேலும் நீடித்து வரும் நிலையில் நேற்று அறிவாலயத்தில் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது.
அதில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி, ’நாளை நடைபெற இருக்கும் மாநகராட்சி கூட்டத்தை சுமூகமாக நடத்த வேண்டும். இல்லையென்றால் அடுத்த கட்ட விளைவுகளை சந்திக்க நேரிடும்’ என்று எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில், நெல்லை மாநகராட்சி கூட்டம் இன்று மாலை ஐந்து மணிக்கு கூடியது. அதில் மேயர் சரவணனுக்கு எதிராக பல்வேறு கவுன்சிலர்கள் பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
’எங்களது வார்டுக்கு எதுவுமே செய்யாமல் நாங்கள் எப்படி அங்கு இருக்க முடியும்?’, ’குப்பை அள்ள ஆள் இல்லை’, ’தண்ணீர் ஒழுங்காக வரவில்லை’ என்று மேயருக்கு நேராகவே புகார் செய்து வருகின்றனர்.
திமுக தலைமையின் எச்சரிக்கையையும் மீறி இன்று நடந்துவரும் நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் அக்கட்சியின் கவுன்சிலர்களே போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
சென்னை பர்மிட் ஆட்டோக்களின் எல்லை நீட்டிப்பு!
INDVsENG: மொத்தமாக விலகும் கோலி… இதுதான் காரணமா?… வெளியான அதிர்ச்சி தகவல்!