உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் முதல் குடிமகள் எனப்படும் உயரிய பொறுப்பை அலங்கரித்திருக்கிறார் திரௌபதி முர்மு. இன்று(ஜூலை 21) குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட யஷ்வந்த் சின்ஹாவை விட அதிக வாக்குகள் வாங்கி வெற்றிபெற்றுள்ளார் முர்மு.
இந்தியாவின் பூர்வகுடி மக்களான பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த திரௌபதி முர்முவைச் சுற்றி இன்று உலகத்தின் பெரும்பாலான நாடுகளின் கவனமும் திரும்பியிருக்கிறது. உலகக் கேமராக்களால் உற்று நோக்கப்படுகிறார் முர்மு.
குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்று இந்தியாவின் 15 ஆவது குடியரசுத் தலைவராக இப்போது உயர்ந்திருக்கும் திரௌபதி முர்முவின் வாழ்க்கைப் பயணமும், அரசியல் பயணமும் ஒவ்வொரு இந்தியரும் அறிந்துகொள்ள வேண்டிய வரலாறு.
பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு, ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள உபர்பேதா கிராமத்தில் 1958ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி பிறந்தார். அவரது தந்தையும் தாத்தாவும் அந்த கிராம தலைவர்களாக பணியாற்றியதால் குழந்தைப் பருவத்திலேயே பொதுப் பணிகளில் ஈடுபாடு கொண்டார் முர்மு.
ஒடிசா மாநில அரசில் 1979 முதல் 1983 வரை நீர்ப்பாசனம் மற்றும் மின்துறையில் இளநிலை உதவியாளராக பணியைத் தொடங்கிய முர்மு, 1994ஆம் ஆண்டு ஸ்ரீஅரவிந்தோ ஒருங்கிணைந்த கல்வி மையத்தில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். பின்னர், 1997ஆம் ஆண்டு பாஜவில் இணைந்த அவர், ராய்ரங்பூர் பகுதி கவுன்சிலர் ஆனார்.
அதே ஆண்டு பாஜகவின் பழங்குடியினர் மோர்ச்சாவின் துணைத் தலைவரும் ஆனார். ராய்ரங்பூர் தொகுதியில் 2000 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் இரண்டுமுறை எம்.எல்.ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அமைச்சராகவும் தன் பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். 2015ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார். பின்னர், ஆளுநர் பதவிக் காலம் முடிந்த நிலையில்… தற்போது குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்தலில் நிற்கவைத்து வெற்றிபெற வைத்திருக்கிறது பாஜக.
2014 ஆம் ஆண்டில் தனது கணவர் ஷ்யாம் சரன் முர்முவை இழந்த திரௌபதி முர்மு, அடுத்த நான்கு ஆண்டுகளில் தான் பெற்ற இரு மகன்களையும் இழந்துவிட்டார். அவருக்கு ஒரு மகள் மட்டும் இருக்கிறார். ஆன்மீகத்தில் உள்ள ஈடுபாட்டால் தன்னை பிரம்மகுமாரிகள் அமைப்பில் இணைத்துக் கொண்டு சேவை செய்துவந்தார் திரௌபதி முர்மு.
திரெளபதி முர்முவுக்கு, பாஜக கூட்டணி கட்சிகள் மட்டுமல்லாது, பிஜூ ஜனதாதளம், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, சிவசேனா, ஓய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்குதேசம், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன என்பது குறிப்பிடத் தக்கது. வாக்கு எண்ணிக்கை நடக்கும் வரைதான் அவர் பாஜக வேட்பாளர். இப்போது அவர் இந்தியாவின் தலைமகள்!
–ஜெ.பிரகாஷ்