இளம் விதவைகளை அதிகமாக்கும் மது விற்பனையிலும் ஊழல், முறைகேடுகளை செய்வது தான் திராவிட மாடல் அரசா? என்று தமிழ்நாடு பாஜக துணைத்தலைவர் நாரயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று (பிப்ரவரி 12 ) வெளியிட்டுள்ள அறிக்கையில் ’கரூர் கம்பெனியிலிருந்து வருகிறோம்’ பணம் கொடு என்று சில ரௌடிகள் டாஸ்மாக் ஊழியர்களை பணம் கேட்டு மிரட்டி கொலை மிரட்டல் விடுப்பதாகவும், டாஸ்மாக் ஊழியர்களின் குடும்பத்தினரையும் மிரட்டுவதாகவும் டாஸ்மாக் தொழிலாளர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.
காவல் துறையினரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மது விற்பனையில் கடும் மோசடி நடப்பதாகவும், முறைகேடுகள் நடப்பதாகவும் குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர்.
இது குறித்து புகார் தெரிவிப்பவர்களை, பணம் கொடுக்க மறுப்பவர்களை பணியிட மாற்றம் செய்துள்ளது டாஸ்மாக் நிர்வாகம். கோவையில் அனுமதி வாங்கி போராட்டம் நடத்திய ஊழியர்களை காவல் துறை மேலிடத்தின் உத்தரவின் பேரில் கைது செய்துள்ளது. யார் இந்த கரூர் கம்பெனி? இந்த நிறுவனத்தின் பின்னணியில் யார்? கொலை மிரட்டல் விடும் அளவிற்கு பலம் வாய்ந்தவர்கள் யார்? குடி குடியை கெடுக்கும் என்று சொல்கிறது அரசு.
அந்த குடியை கொடுக்கும் அரசு துறை ஊழியர்களின் குடியை கெடுக்கும் தீய சக்திகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். இளம் விதவைகளை அதிகமாக்கும் மது விற்பனையிலும் ஊழல், முறைகேடுகளை செய்வது தான் திராவிட மாடல் அரசா? கரூர் கம்பெனியை கண்டுபிடித்து ரௌடிகளை கைது செய்ய வேண்டியது காவல் துறையின் கடமை. இல்லையேல் ‘குடி’ மக்கள் பார்த்து கொள்வார்கள் என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
இந்துத்துவம் ஏன் காதலர் தினக் கொண்டாட்டத்தை எதிர்க்கிறது?
கிச்சன் கீர்த்தனா : கமகம கொத்தமல்லி ரைஸ்!