எம். பி – எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்கி விசாரிக்க வேண்டும் என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி எம்.பி – எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளை கண்காணிப்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.
இவ்வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று (நவம்பர்14) விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் ஸ்ரீநாத் ஸ்ரீதேவன் ஆஜராகி,
“அனைத்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ள எம்.பி. – எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளின் தற்போதைய விவரங்கள்,
எம்.பி.- எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக்காலம் குறித்த விவரங்கள்,
பல ஆண்டுகளுக்கு முன் முடிக்கப்பட்டு தற்போது உயர் நீதிமன்றத்தால் மீண்டும் விசாரிக்க உத்தரவிடப்பட்ட வழக்குகளின் விவரங்கள் ஆகியவற்றை வழங்க வேண்டும்” என்று கேட்டார்.
இதை கேட்ட நீதிபதிகள், ‘அனைத்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றங்களில் உள்ள எம்.பி எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகள் குறித்த விவரங்களை பெற்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். எம்.பி – எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக்காலம் குறித்த தகவல்களை தெரிவிக்க வேண்டும்’ என தலைமை பதிவாளருக்கு உத்தரவிட்டனர்.
எம். பி – எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான கொலை, கொலை முயற்சி, போக்சோ வழக்குகளுக்கு அடுத்தபடியாக, ஊழல் வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்கி விசாரிக்க வேண்டும் என சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளுக்கு உத்தரவிட்டனர்.
அதேபோல கீழமை நீதிமன்றங்களால் முடித்து வைக்கப்பட்ட எம்பி – எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து மறு ஆய்வு செய்து பிறப்பித்த உத்தரவின்படி, மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ள வழக்குகளின் விபரங்களையும் அறிக்கையாக அளிக்க வேண்டும் என தமிழக தலைமை குற்றவியல் வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர்.
இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
மருத்துவர் பாலாஜிக்கு கத்திக்குத்து: போராட்டத்தில் கோஷமிட்ட பிரேமலதா
மகனை தாக்கிய டாக்டர்கள் மீது போலீசில் புகாரளிக்கும் விக்னேஷ் தாயார்!