ஊழல் யூனிவர்சிட்டியின் வேந்தர் மோடி : ஸ்டாலின் அட்டாக்!
வாஷிங் மெஷின் வைத்து ஊழல் அரசியல்வாதிகளை பா.ஜ.க.வுக்குள் சேர்த்துக் கொள்ளும் மோடி, ஊழலைப் பற்றி பேசலாமா? என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 10) தேனியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
தேனி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், “இத்தனை நாளாக வெளிநாடுகளுக்கு டூர் சென்ற பிரதமர் மோடி. தேர்தல் வந்துவிட்டதால், உள்நாட்டிற்குள் டூர் அடிக்கிறார். அவர் ஏதோ ஷோ காட்ட வருகிறார் என்று நான் சொல்லவில்லை. அவரே ’ரோடு ஷோ’ காட்டுகிறேன் என்றுதான் சொல்லி இருக்கிறார். நேற்று சென்னையில் எந்த இடத்தில் ஷோ காட்டினார்? தியாகராயர் நகர்…
பிரதமரே…அந்த இடத்திற்கு ஏன் அந்தப் பெயர் என்று உங்களுக்குத் தெரியுமா? நீதிக்கட்சித் தலைவர் தியாகராயர் – சவுந்திர பாண்டியனார் பெயரில் இருக்கும் பாண்டி பஜார், பனகல் அரசர் பெயரில் இருக்கும் பூங்கா என்று திராவிடக் கோட்டமாக இருக்கும் இடத்தில் உங்கள் ஷோ காட்டினால் எடுபடுமா?
உங்கள் ஷோ – ஃபிளாப் ஷோ ஆன உடனே, சமூக வலைத்தளங்களில், சென்னை வந்ததைப் பற்றி எழுதியபோது, சொல்கிறார்! சென்னை மெட்ரோ திட்டத்தை விரிவாக்கம் செய்யப்போகிறாராம்.
அந்தத் திட்டத்திற்கு தடையாக இருப்பதே நீங்கள்தான். சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்காததால்தான் நிதி கிடைக்கவில்லை. அதனால்தான் திட்டப்பணிகள் தாமதமாகிறது.
கடந்த 2020-இல் ஒன்றிய உள்துறை அமைச்சர் இந்தத் திட்டத்திற்காக அடிக்கல் நாட்டினார். ஆனால், அனுமதி கொடுக்கவில்லை! நான் முதலமைச்சரான பிறகு முதல் சந்திப்பில் இருந்து கோரிக்கை வைக்கிறேன். பிரதமரை நேரில் சந்தித்தும் பலனில்லை! மதுரை எய்ம்ஸ் போன்று, சென்னை மெட்ரோவும் அடிக்கல்லோடு நிற்கக் கூடாது என்று இப்போது மாநில அரசின் நிதியில் இருந்து, மெட்ரோ பணிகள் நடந்துக் கொண்டிருக்கிறது.
இதனால் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டு, பணிகள் மெதுவாக நடக்கும் நிலைமை! இந்தப் பணிகளால் ஆண்டுக்கு நமக்கு ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா? 12 ஆயிரம் கோடி ரூபாய்! இத்தனை குளறுபடிக்கும் காரணம், மோடி! ஆனால், இத்தனையும் மறைத்து, பச்சைப்பொய் பேசுகிறார்.
சென்னையில் ஷோ காட்டிய மோடி , காலையில் வேலூர் சென்றிருக்கிறார். அங்கு அவர் இந்தியில் பேசும்போது கூட்டம் கை தட்டுகிறது! பலருக்கு என்ன சந்தேகம் என்றால்,
வெளிமாநிலங்களில் இருந்து, கூட்டத்துக்கு ஆட்களை அழைத்துக் கொண்டு வருகிறார்களோ என்பதுதான்! இதில், தமிழ்நாட்டை வளர்க்கப் போகிறேன் என்று இந்தியில் பேசி சபதம் எடுக்கிறார்!
அதன்பிறகு வழக்கம்போல் குடும்ப அரசியல் – ஊழல் கட்சி என்று தேய்ந்துப் போன ரெக்கார்டையே போட்டார். இதற்கு நான் எத்தனையோ முறை விளக்கம் சொல்லிவிட்டேன்.
உண்மையாக, ஊழலுக்கு ஒரு யூனிவர்சிட்டி கட்டி, அதற்கு ஒருவரை வேந்தராக நியமிக்க வேண்டும் என்றால், அதற்குப் பொருத்தமான நபர், இந்தியாவில் மோடியை விட்டால் வேறு யாரும் கிடையாது!
ஏன் என்றால், ஊழலைச் சட்டப்பூர்வமாக்கிய சாதனையாளர் மோடிதான்! தேர்தல் பத்திரங்கள் மூலமாக ஊழல் பணத்தை நேரடியாகக் கட்சி வங்கிக் கணக்கிற்கு வரவும் – பி.எம். கேர்ஸ் நிதியாகவும் உருவாக்கிக் கொண்ட உத்தமர்தான் மோடி! வாஷிங் மெஷின் வைத்து ஊழல் அரசியல்வாதிகளை பா.ஜ.க.வுக்குள் சேர்த்துக் கொள்ளும் மோடி, ஊழலைப் பற்றி பேசலாமா?
சமூகநீதியைப் பேசும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை முஸ்லீம் லீக்கின் தேர்தல் அறிக்கைபோல் இருக்கிறது என்று கேலி செய்து பிரிவினைவாத அரசியல் செய்வது யார்?
பத்தாண்டு காலம் இந்தியாவின் பிரதமராக இருந்து கொண்டு, சாதனையாக எதையும் சொல்ல முடியாமல் இப்படி மக்களைப் பிளவுப்படுத்திப் பேசுகிறோம் என்று வெட்கப்பட வேண்டும் நீங்கள்” என்று காட்டமாக விமர்சித்தா ஸ்டாலின்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
”இளையராஜா எல்லோருக்கும் மேலானவரா?” : இசையுரிமை வழக்கில் எழுந்த காரசார வாதம்!
“ரோடு ஷோ நடத்துவதில் என்ன பிரயோஜனம்?” : எடப்பாடி பழனிசாமி கேள்வி!