5ஜி யால் பரவுகிறதா கொரோனா? மேற்குலகில் பரவும் பீதி!

அரசியல் சிறப்புக் கட்டுரை

லண்டனில் இருந்து ஒரு கடிதம்-2

முரளி சண்முகவேலன்

கொரோனா வைரஸ் தொற்று மேற்குலக நாடுகளின் ஜனநாயகப் பண்புகளை கேள்விக்குள்ளாக்கி உள்ளது. சமத்துவமின்மை பற்றிய விவாதம் மீண்டும் எழுந்துள்ளது. சமத்துவமின்மைக்கு இரண்டு கூரிய பண்புகள் உண்டு. முதலில் முதலீட்டியம் செல்வந்தர்களை அதி செல்வந்தர்களாக்குகிறது அல்லது அவர்கள் செல்வந்தர்களாகவே இருக்க வழி செய்கிறது. இரண்டாவதாக வறியவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற முதலாளிகளிடம் பணி செய்வது அவர்களது செல்வத்தைப் பெருக்குவதின் மூலம் முதல் பண்பு வலுப்பெறுகிறது.

உதாரணமாக அமேசான் அதிபர் ஜெஃப் பெசோஸின் வீட்டுக்குப் பொருள் அனுப்பும் வியாபாரம் தொற்று நோயினால் ஒரு விநாடிக்கு 11,000 டாலர் என கல்லா கட்டுகிறது. மேற்குலகில் உள்ள அமேசான் கிடங்கில் வேலை பார்க்கும் பெரும்பான்மையானோர் புலம்பெயர்ந்தவர்கள், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் அல்லது பொதுவாக கீழ்த்தட்டு மக்கள். இவர்களுக்கு எந்தவிதமான வைரஸ் தொற்று நிவாரணமும் இல்லாததால் வேலைக்கு வரவேண்டிய கட்டாய சூழ்நிலை. வேலைக்கு வருவதாலும் வைரஸ் தொற்றிக் கொள்ளும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்று உண்டாக்கியுள்ள சமத்துவமின்மை எதிர்பாராதது. பிரிட்டனில் ஆறு வாரங்களுக்குள் பலருடைய வாழ்வைப் புரட்டிப் போட்டிருக்கிறது.

எனக்குத் தெரிந்த ஒரு புகைப்படக் கலைஞர் பல்வேறு நாடுகளுக்குச் சென்று இயற்கை அழகைப் புகைப்படம் எடுத்து அவரது ‘க்ளையண்டுகளுக்கு’ கணிசமான தொகையில் விற்று விடுவார். ஆறு வாரம் முன்பு பிரேசிலுக்குச் செல்லவிருப்பது குறித்து ஆர்வமாகச் சொன்னார். இப்போது எந்த வேலையும் கிடையாது. கையில் ஆறு வாரத்துக்கு மேல் காசில்லை. அரசிடம் நிவாரணம் கேட்டு விண்ணப்பித்துள்ளதாகச் சொன்னார். ஊரடங்கு முடிந்தவுடன் அரசின் நிவாரணம் நின்று விடும். ஆனால் நிலைமை உடனே மாறி விடாது.

இந்தச் சூழ்நிலை மக்களிடையே பெரும் பீதியைக் கிளப்பியிருக்கிறது. இந்த ஊரடங்கு கொண்டுவந்திருக்கும் வாழ்வாதாரப் பிரச்சினை ஒவ்வொரு சாமானியனையும் புரட்டிப் போட்டிருக்கிறது. இதனாலும், நமக்குள் ஊறியிருக்கும் நிற, இன, சாதி, மத, பால் சார்ந்த அரசியல் பேதங்களும் கொரோனா தொற்று நோய்க்கு மருத்துவம் சாராத பொய்க் காரணங்களை தினமும் கண்டுபிடிக்கிறது.

5-ஜி அலைவரிசையில் இருந்து வெளிப்படும் அலைக்கற்றைகள் மனித உடல் நலத்துக்குக் கேடானது. அதில் இருந்து வெளிவரும் கதிர்களே நமது நுரையீரலின் சுவாசிக்கும் சக்தியை இழக்க வைக்கிறது என்னும் புரளி ஐரோப்பிய சமூக வலைதளத்தில் விரவிக்கிடக்கிறது. பிரிட்டனில் மட்டும் 60 மொபைல் கோபுரங்கள் எரிக்கப்பட்டுள்ளது. அயர்லாந்து, சைப்ரஸ், நெதர்லாந்து, டென்மார்க் போன்ற ‘வளர்ந்த’ நாடுகளிலும் இந்த மொபைல் கோபுரங்கள் அழிப்பு, எரிப்பு நடந்தேறியுள்ளது.

எங்கிருந்து இந்தப் புரளி தோன்றியது?

ஜனவரி 22ஆம் தேதி ஹெட் லாட்ஸட் நியுவ் என்கிற பெல்ஜிய தினசரியில் க்றிஸ் கெர்ச்சோவன் என்ற மருத்துவர் அளித்த பேட்டியில் சுவாசக் குறைவினால் உண்டாகும் டென்மார்க் இறப்புகளுக்கு 5-ஜி அலைக்கற்றைகள் ‘ஒரு வேளை’ காரணமாக இருக்கலாம். ஆனால் தன்னால் நிச்சயமாகச் சொல்ல முடியாது’ என்றும் கூறினார்.

கெர்ச்சோவனின் பேட்டி 5-ஜி அலைக்கற்றை எதிர்ப்பாளர்களுக்கு சாதகமாக மாறியது. 5-ஜி அலைக்கற்றைக்கு ஏற்கனவே எதிராகக் குரல் எழுப்பி வரும் அரசியல் குழுக்கள் இந்தப் புரளியை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

பிரிட்டனில் பியர்ஸ் கோர்பின் (முன்னாள் லேபர் கட்சித் தலைவர் ஜெரிமி கோர்பினின் அண்ணன்) 5-ஜி அலைக்கற்றையைத் தொடர்ந்து எதிர்த்து வருபவர். தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து 5-ஜியின் உடல் நலக்கேடு குறித்து பிரச்சாரம் செய்து வருகிறார். வுட்டி ஹார்ல்சன் உள்ளிட்ட முன்னணி ஹாலிவுட் நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பலரும் இந்தத் தகவலை தங்களது வலைப் பக்கங்களில் பரப்பியதில் 5-ஜி புரளி உயிர் பெற்றது.

இதன் பின்னணி தான் என்ன?

சீனாவைச் சேர்ந்த ஹுவாய் என்ற தொலைத் தொடர்பு நிறுவனம் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் உள்ள 49 மொபைல் நிறுவனங்களோடு 5-ஜி சேவையை அறிமுகப்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளது. உலகளவில் ஹுவாய் 91 மொபைல் நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்துள்ளது.

ஹுவாய் நிறுவன அதிபர் ரென் 1978ஆம் ஆண்டின் முதல் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர உறுப்பினர். எனவே ஹுவாய் நிறுவனம் சீன கம்யுனிஸ்ட் கட்சியின் அடிவருடியாக இருக்கலாம் என மேற்குலகிற்கு சந்தேகம். அதே நேரத்தில் சீன முதலீட்டிய நிறுவனங்களின் தினசரி வணிக நடவடிக்கைகளில் அந்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி எந்த அளவு பங்கு உண்டு என யாருக்கும் முழுக்கத் தெரியாது. விவாதத்துக்குரியது. ஆக, இந்த அச்சம் காற்றில் முளைத்ததும் அல்ல. இது குறித்து ஹுவாய் நிறுவனத்திடம் ஐரோப்பிய அரசுகள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் இருந்து வருகிறது.

ஆனால், உலக அளவில் 91 மொபைல் நிறுவனங்கள் ஒரு ‘கம்யூனிஸ்ட்’ தொலைத் தொடர்பு நிறுவனத்திடம் 5-ஜி தொழில் நுட்பத்தைச் செயல்படுத்திக் கொடுக்கச் சொல்லியிருப்பதும் சாதாரணமில்லை. ஹுவாயின் தொழில் நுட்பமும் அவர்களது வெளிப்படைத்தன்மை குறித்த உறுதிகளும் மேற்குலக தொலைத் தொடர்பு ஒப்பந்தங்களைக் கவர்ந்துள்ளது.

5-ஜி தொழில்நுட்பத்தில் கோலோச்சி வரும் ஹுவாய் நிறுவனத்தின் மூலம் உலக அரசியலை வென்றெடுப்பது சீன அரசியலின் புதிய உத்தி என்ற மேற்கத்திய பீதி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மேற்குலகத்தின் ஊடகங்கள் கம்யூனிஸ்ட் சீனா ஹுவாய் நிறுவனத்தின் மூலம் மற்ற நாடுகளை வேவு பார்க்கும் என்கிறது. ஹுவாய் மறுக்கிறது. 5-ஜி தொழில்நுட்பத்தில் ஹுவாய் உலகில் முதலிடத்தில் இருக்கிறது. பிரிட்டன், அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட பல நாடுகள் பின் தங்கி உள்ளது.

ஒரு சீன (கம்யூனிச) நிறுவனத்தை தங்களது நாட்டின் தகவல் தொடர்புக்கு காவலாளியாக்குவது பிரிட்டனின் – மேற்குலகின் – இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும் என டொனால்டு ட்ரம்ப் எச்சரித்தார். உடனடியாக ஹுவாய் நிறுவனத்துடன் உள்ள தொடர்பை முறித்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய பின்னும் ட்ரம்ப்பின் எச்சரிக்கையை பிரிட்டன் கண்டு கொள்ளவில்லை.

இந்த நேரத்தில்தான் ஐரோப்பிய ஒன்றியத்தின் தவறான தகவல்களுக்கு (Disinformation) எதிராகப் பரப்புரை செய்து வரும் நிறுவனம் ஏப்ரல் 1ஆம் தேதி 5-ஜி வதந்தி குறித்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்று பற்றிய 5-ஜி வதந்திகளைப் பரப்பியதில் ரஷ்ய ஊடகங்களான ஆர்டி (ரஷ்யா டுடே), ஸ்பட்னிக்கில் வெளிவந்த செய்திகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று அந்த அறிக்கை கூறுகிறது. தற்போது 5-ஜி தொழில்நுட்பத்தில் பின் தங்கியுள்ள ரஷ்யா – சீனாவின் 5-ஜி தொழில்நுட்ப வெற்றி மேல் கொண்ட பொறாமை இந்த வதந்திகளுக்கு பின்னால் உள்ளது என்று நியூயார்க் டைம்ஸ் பத்தியாளர் வில்லியம் ப்ராட் எழுதியுள்ளார்.

இந்த வதந்தியினால் சீன எதிர்ப்பு அதிகமானால், அமெரிக்கத் தேர்தலின் போது ட்ரம்புக்கு சாதகமாக இருக்கும். சீன எதிர்ப்புக்கு அமெரிக்காவின் பொருளாதாரப் பின்னடைவு தம் மக்கள் செய்யவிருக்கும் தியாகம் எனத் திசை திருப்ப முடியும். தேசத்துக்காகப் பொறுத்துக் கொள்ளுங்கள் என்ற சகுனிக் கெஞ்சலை இந்தியப் பிரதமர் மோடி ஏற்கனவே செய்ய ஆரம்பித்து விட்டார் இங்கே நீங்கள் நினைவுகூரவும்.

5-ஜி வதந்தி மக்களின் அறியாமை எனத் தட்டையாகப் பார்க்க முடியாது. மொபைல் கோபுரங்களை வீதிக்குச் சென்று எரிப்பவர்களில் பெரும்பாலோர் கீழ்த்தட்டு மக்கள். தொற்று நோயில் ஏற்கனவே பயந்து வாழ்ந்து வரும் இவர்களின் வாழ்வாதாரம் பட்டினியால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கையில் வசதி படைத்த செல்வந்தர்கள் ஊரடங்கை விடுமுறை போல் அனுபவிக்கும்போது அமைதி எப்படி வளரும்? வன்முறையே பெருகும். மொபைல் கோபுரங்களை எரிப்பதும் ஒரு விதமான எதிர்ப்பு. கையாலாகாதத்தனம் கலந்த கோபம். அரசியல் குழுக்கள் தங்களின் பொறுப்புகளைத் தட்டிக்கழிக்கவும் இம்மாதிரியான வதந்திகள் உதவுகிறது.

உளரீதியாக கண்ணுக்குத் தெரியாத கொரோனா தொற்றுக் கிருமியை எப்படிப் பழி வாங்குவது? பதிலாக நம் மனத்தில் ஏற்கனவே உள்ள எதிரியைக் காரணமாக்கும்போது அதில் ஒரு திருப்தி பிறக்கலாம்

.

பொருளாதாரத் தேக்கத்தில் இருந்துவரும் சீனாவின் பிரமிக்கத்தக்க வளர்ச்சி மேற்குலக நாடுகளில் உள்ள சாமானியனையும் உறுத்துகிறது. காரணம், ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் உள்ள தலைவர்களின் சீன வெறுப்புப் பிரச்சாரம். இம்மாதிரியான பிரச்சாரம் திறனற்ற அரசியல் தலைமைகளின் தவறுகளை மறைக்க உதவுகிறது.

5-ஜி வதந்தி போல பலவிதமான வதந்திகள் மேற்குலகில் பரப்பப்பட்டு வருகிறது. ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டதே கொரோனா, பில் கேட்ஸ் இந்த வைரஸை வைத்து பணம் பண்ணுகிறார், பூண்டு உட்கொண்டால் சரியாகி விடும், கொரோனா வேற்றுலகில் இருந்து வந்துள்ளது என ஒவ்வொரு வதந்திகளுக்குப் பின்னரும் அரசியல், மத, இன ரீதியான காரணங்கள் ஒளிந்திருக்கிறது. (மாட்டு மூத்திரம் குடித்தால் கொரோனா வைரஸ் தொற்றாது என்ற கண்டுபிடிப்பு என்பது மின்னம்பலம் வாசகர்களுக்குத் தெரிந்ததே.)

ஒருபுறம் வதந்திகளும் புரளியும் சமூக வலைதளத்தில் விரவிக்கிடக்கிறது. மறுபுறம் உண்மையிலேயே பாதிக்கப்பட்ட மக்களின் நிலவரங்களை அரசுகளும் மருத்துவ அமைப்புகளும் முழுவதுமாக வெளியில் சொல்வதில்லை. பிரிட்டன் மருத்துவத் துறையின்படி கரிபீய ஆப்பிரிக்கர்கள், தெற்காசியர்களிடையே (குறிப்பாக முதல் தலைமுறையினர்) சர்க்கரைச் சத்தும், இதய நோய்களும் அதிகம். எனவே கொரோனா தொற்று இவர்களை அதிகம் பாதிக்க வாய்ப்புள்ளது. கொரோனா தொற்று இறப்பில், சதவிகித அடிப்படையில் இவர்களின் எண்ணிக்கை அதிகம் சில ஆய்வுக் குழுக்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவிலும் இதே நிலை. சிறுபான்மை இனத்தினரில் பெரும்பான்மையோர் நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்களே. மருத்துகளும், மருத்துவ உபகரணங்களும், படுக்கைகளும் தட்டுப்பாடுள்ள இந்தச் சூழலில் இனம் சார்ந்த மருத்துவக் கேள்விகளுக்குப் பதிலளிக்க பிரிட்டனும் அமெரிக்காவும் மறுத்து வருகிறது. பிரிட்டன் மெடிக்கல் அசோஷியனின் தலைவர் டாக்டர் சாந்த் நாக்புல் – பிரிட்டன் கொரோனா இறப்புகளைப் பதிவு செய்யும்போது அவர்களின் இனத்தைக் குறிக்காதது மிகப்பெரிய சமூக மோசடி எனக் குறிப்பிடுகிறார்.

ஏனெனில் இன-இறப்புத் தகவல்கள் பிரிட்டனில் உள்ள இனச் சிறுபான்மையோரின் ஒட்டுமொத்த நலம் பற்றிய ஆய்வுகள், எதிர்கால நோய்த் தடுப்பு முயற்சிகளுக்கு மிக்க உபயோகமாக இருக்கும் என்பது அவரது கருத்து. கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வினை யாரிடம் கொண்டு செலுத்த வேண்டும் என்பதற்கும் உபயோகமாக இருக்கும். இந்தத் தொற்று நோய் காலத்தில் மேற்குலக அரசுகள் தங்களது சிறுபான்மைக் குடிகளின் நலனைத் திட்டமிட்டு ஒதுக்குவது ஜனநாயக முரண்.

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கீழ்த்தட்டு மக்களின் அவல நிலை, கண்முன்னே சமூக வலைதளங்களில் பொருள் படைத்தவர்களின் சொகுசான ஊரடங்கு வாழ்வு, சுயநலம் மிக்க திறனற்ற அரசியல்வாதிகள், பொருளாதாரப் போட்டிகள், நம் அனைவரின் மனத்திலும் இருக்கும் பல்வகையான சமூக பேதங்கள் – இவையெல்லாம் கதம்பமாக கொரோனா தொற்றுவிடம் சேர்ந்துள்ளது. இதன் விளைவு வேறு ஓர் அதிபயங்கரமான தொற்றாக மாறலாம். கொரோனா வைரஸின் காலத்தையும் தாண்டி இந்தப் புதிய தொற்று நம் சமூகத்தில் வாழலாம்.

அதீத மூட மத நம்பிக்கை, அயலார்களின் மேலான வெறுப்பு கொரோனா தொற்றுவிடம் சேரும்போது கொரோனாவின் நச்சுத்தன்மை பல மடங்கு பெருகிவிடுகிறது. இதைக் காரணம் காட்டி உலகெங்கும் அரசுகள் (தலைவர்கள்) எதேச்சதிகாரத்தைக் கையிலெடுக்கும் சூழ்நிலை பரவலாகி வருகிறது.

இந்த வகையான சமத்துவமின்மையால் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்ப்புகளை அடக்க அரசின் தலைவர்கள் தங்களது அதிகாரத்தைப் பலப்படுத்திக் கொள்வர். இந்தியா போன்ற நாடுகளில் தலித்துகள், முஸ்லிம்கள் மீது ஏற்கனவே உள்ள வெறுப்பு இத்தொற்றின் மூலமாக ஊதிப் பெரிதாக்கப்படுகிறது.

ஐரோப்பிய தத்துவவாதிகள் இது குறித்து ஒரு முக்கிய விவாதத்தைத் தொடங்கியுள்ளனர்.

இது குறித்து அடுத்த கடிதத்தில்…

கட்டுரையாளர் குறிப்பு: முரளி ஷண்முகவேலன்

corona spread by 5g towers - Murali Shanmugavelan

[முரளி ஷண்முகவேலன்](https://mobile.twitter.com/muralisvelan) – ஊடக மானுடவியல் ஆய்வாளர் – லண்டன் பல்கலைக்கழகம் – ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் & ஆஃப்ரிக்கன் ஸ்டடீசில் , சாதி மற்றும் தகவல்தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பவர்.

[லண்டனில் இருந்து ஒரு கடிதம்-1]

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *