இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 149 நாட்களுக்கு பிறகு இன்று பாதிப்பு 1,890ஆக பதிவாகியுள்ளது. இந்நிலையில் முன்னெச்சரிக்கையாக இருங்கள் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
இன்று (மார்ச் 26) 99ஆவது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
உடலுறுப்பு தானம்
அப்போது அவர், ‘ஒரு நபர் இறந்த பிறகு தனது உடல் உறுப்புகளை தானமளித்தால், அவரால் 8 முதல் 9 நபர்களுக்கு, புதிய ஒரு வாழ்க்கை கிடைப்பதற்கான சாத்தியக்கூறு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இன்று தேசத்தில் உறுப்பு தானம் செய்வதில் விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.
2013ஆம் ஆண்டில், உடலுறுப்பு தானம் எனும் போது 5000த்திற்கும் குறைவான அளவில் தான் இருந்தது; ஆனால் 2022ல், இந்த எண்ணிக்கை அதிகரித்து 15,000 என்ற எண்ணிக்கையைத் தாண்டி விட்டது. உடலுறுப்பு தானம் செய்யும் நபர்கள், அவர்களுடைய குடும்பங்கள், இப்படிச் செய்வதன் மூலம் உண்மையிலே மிகவும் புண்ணியம் செய்திருக்கிறார்கள்` என்று குறிப்பிட்டார்.
சௌராஷ்ட்ரா தமிழ்ச் சங்கமம்
மேலும் அவர், “நமது தேசத்தில், காலத்திற்கு ஏற்ப, சூழ்நிலைக்கு ஏற்றவகையில், பல பாரம்பரியங்கள் மலர்ந்திருக்கின்றன. இந்த பாரம்பரியங்கள் தாம், கலாச்சாரத்தின் வல்லமையை அதிகரிக்கின்றன. சில மாதங்களுக்கு முன்னால், இப்படிப்பட்ட ஒரு பாரம்பரியம் காசியில் தொடங்கப்பட்டது.
காசி தமிழ்ச் சங்கமத்தில், காசி மற்றும் தமிழ்நாட்டிற்கும் இடையே, பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் வரலாற்று மற்றும் கலாச்சாரத் தொடர்புகள் கொண்டாடப்பட்டன. ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வு நமது தேசத்திற்கு பலத்தை அளிக்கிறது. நாம் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் அறிந்து கொள்ளும் போது, கற்கும் போது, ஒற்றுமை உணர்வு மேலும் ஆழமாகப் பாய்கிறது.
ஒற்றுமையின் இந்த உணர்வோடு கூடவே, அடுத்த மாதம் குஜராத்தின் பல்வேறு பாகங்களிலும் சௌராஷ்ட்ர தமிழ்ச் சங்கமம் நடைபெற இருக்கிறது. சௌராஷ்ட்ர தமிழ்ச் சங்கமம், ஏப்ரல் 17 முதல் 30 வரை நடக்கும். சௌராஷ்டிரத்துக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே என்ன தொடர்பு இருக்க முடியும் என்று சிலர் யோசித்து கொண்டிருப்பீர்கள்.
உள்ளபடியே, பல நூற்றாண்டுகள் முன்னரே கூட, சௌராஷ்டிரத்தின் பலர் தமிழ்நாட்டின் பல்வேறு பாகங்களில் குடியேறியிருக்கின்றார்கள். இவர்களை இன்றும் கூட சௌராஷ்டிர தமிழர்கள் என்ற பெயரிட்டு அழைக்கிறார்கள். அவர்களுடைய உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை, சமூகப் பழக்கங்கள் ஆகியவற்றில், இன்றும் கூட ஆங்காங்கே சௌராஷ்டிரத்தின் சில அம்சங்கள் இணைகின்றன. இந்த நிகழ்ச்சியை மெச்சி, தமிழ்நாட்டைச் சேர்ந்த பலர் கடிதங்களை எழுதியிருக்கிறார்கள் என்று கூறினார்.
முன்னெச்சரிக்கையோடு இருங்கள்
கொரோனா அதிகரிப்பு குறித்து பேசிய பிரதமர் மோடி, இப்போது சில இடங்களில், கொரோனா அதிகரித்து வருகிறது. ஆகையால் நீங்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையோடு நடந்து கொள்ள வேண்டும், தூய்மை பற்றி கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
பிரியா
“கடைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும்”: ராமதாஸ்
“அதிமுக சட்ட விதிகள் மாற்றம்”: ஓபிஎஸ் காட்டம்!